Thursday, April 23, 2009

சோனியாவை தமிழகத்துக்குள் விடமாட்டோம்:தமிழ் திரையுலகம்; ரஜ்னிகாந்த்தும் கலந்துகொள்ள சம்மதம்

இலங்கையில் போரை நடத்தி தமிழர்களை கொன்றொழிக்கும் சோனியாவை தமிழகத்துக்குள் விடமாட்டோம்: தடதடக்கும் தமிழ் திரையுலகம்; ரஜ்னிகாந்த்தும் கலந்துகொள்ள சம்மதம்
 
அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத்துக்குள் விடமாட்டோம்! என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம்.

ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே ஒலிவாங்கியை பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இயக்குநர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். "ஈழத்துக்காக நாங்கள் புதிதாகக் குரல் கொடுக்கவில்லை. தமிழக அரசுத் தரப்பிலிருந்து எங்களைத் தொடர்புகொண்ட சிலர், ஈழப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மத்திய அரசுக்கு பலவிதத்திலும் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

தமிழக அரசோ இறையாண்மைக்கு குந்தகமாகப் பேசாத போதும், சீமானின் பேச்சு காங்கிரசுக்கு எதிராக இருந்ததால்,வேண்டு மென்றே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை சிறையில் தள்ளியது.

கடலூர் கோர்ட்டில் அவரைப் பார்க்கச் சென்ற இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி ஆகியவர்களை வேண்டுமென்றே ஒருநாள் சிறையில் வைத்தார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டோம்.

ஆனால், ஈழத்தில் இரண்டரை இலட்சம் தமிழ் மக்களின் வாழ்க்கை முடியப் போகிற அபாயத்தில் இருந்தும், மத்திய-மாநில அரசுகள் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருப்பதைத்தான் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட, சினிமாத் துறையின் முக்கிய ஆட்கள் பலருக்கும் ஈழத் துயரங்களின் படங்களும் செய்திகளும் மெயிலில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் இயக்குநர் பாரதிராஜாவோடு உணர்வாளர்கள் பலரும் கலந்து பேசி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் திரையுலகத்தினர் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

சோனியா தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வரும் பட்சத்தில், எங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டுவோம். அங்கே தமிழர்களையும், இங்கே தமிழர்களின் உணர்வுகளையும் கொன்றுவிட்டு, தமிழகத்துக்கு சோனியா வரக் கூடாது! என்றவர்கள் தொடர்ந்தனர்.

கட்சி சார்பான திரைப் புள்ளிகள் மூலமாக எங்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடந்தது. அதை முறியடிக்கத்தான் தமிழ்த் திரையுலக தமிழ் ஈழ ஆதரவு உணர்வுக் குழு' என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியிருக்கிறோம். அதன் சார்பாக காங்கிரசுக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், சீமான் இருவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முடிவெடுத்திருக்கிறோம்.

ஈழப் போரைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில், ராஜபக்ஷேவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், எங்களுக்கு மிகப் பெரிய சக்தி. பாரதிராஜா, சத்யராஜ், அமீர் போன்றோரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த்தும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails