Thursday, April 30, 2009

இலங்கை கேட்டிருந்த கடனை தற்பொழுது வழங்க முடியாது-உலக வங்கி

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை வழங்கல் ஒத்திவைப்பு: அரசாங்கம் மனிதாபிமான சேவைகளை வழங்கவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு
 
மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் அத்தியாவசிய உதவிகளை செய்விக்க இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை காலம் தாழ்த்தியுள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாக குழுவினருக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடலை மேற்கொண்ட போது, இது தொடர்பில் தமது கருத்து கோணத்தை தெளிவு படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மிகவும் குறைவான அளவிலேயே அத்தியாவசிய சேவைகளை வழங்கியுள்ளதாகவும், மோதல் பிரதேசங்களுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்க தவறியுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

எனினும் அரசாங்கம் இதனை நிராகரித்தது.

இது தொடர்பில், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய கருத்து தெரிக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் கட்டுமானத்திற்கு வந்து விடுவார்கள் என்பதை கருதியே யுத்த நிறுத்தத்தை அறிவிக்க அரசாங்கம் தயங்குவதாக தெரிவித்தார்.

அத்துடன் பொது மக்களை காப்பாற்றி வெளியேற்றும் பொருட்டு, கனரக ஆயுதங்களை பாவிக்காது, மிதமான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பயங்கர வாத்திற்கு எதிராக போராடுகிறோம், ஆப்கானிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்தால் அவருக்கு அமெரிக்கா யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க வேண்டி அவசியம் இல்லை.

அதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையில் இருக்கும் போது, அவருக்கு யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க எந்த தரப்பும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ' தமது சிந்தனை கோணத்தில், சிறிலங்கா அரசாங்கம், பொது மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்க மறுத்தால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்களை காலம் தாழ்த்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் அது நிற்க வேண்டிய சரியான இடத்துக்கு அழைத்து வர முடியும் என அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கடனை நிரந்தரமாக தடுத்து நிறுத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை எனவும், அரசாங்கம் மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்கும் போது அது வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் இந்த தீர்மானம் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தினை நடத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை எனவும், இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அரசாங்கம் யுத்த வெற்றிகளை இலக்கு வைத்து, அரசியல் தீர்வு முன்வைப்பை மறந்து விட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை இலங்கை மத்திய வங்கி இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த கடன் தொகையினை பெறுவது தொடர்பாக, இலங்கையின் விசேட குழு ஒன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களையடுத்து, இந்த கடன் பெறல் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் மத்திய வங்கியுடன் கலந்துரையாடும் பொருட்டு, நிதியத்தின் பிரதிநிதிகள் சிலரும் இலங்கை வரவிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails