Wednesday, April 22, 2009

வலைஞர்மடம் தேவாலயம் மீது சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதல்: ஆலய பங்குத்தந்தை படுகாயம்

 
 
வலைஞர்மடம் தேவாலயப்பகுதியை நோக்கி இன்று புதன்கிழமை மதியம் சிறிலங்கா படையினர் வீசிய ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் தேவாலய வளவில் இருந்த பங்குத்தந்தை வண. பிதா ஜேம்ஸ் பத்திநாதர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது:-

இன்று புதன்கிழமை நண்பகல் 12மணியளவில் வலைஞர் மடம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் வாழ்விடங்களையும் தேவவாலயப் பகுதியையும் நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்களின்போதே குறித்த பங்குத் தந்தை படுகாயமடைந்துள்ளார். இவர் ஒரு பிரபல்யமான கத்தோலிக்க மதகுரு என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக காயமடைந்த மதகுருவை முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமையும் வலைஞர் மடம் தற்காலிக மருத்துவமனை பகுதியை இலக்கு வைத்து  சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் மருத்துவமனை வைத்தியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உட்பட எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வை மேற்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் படையினரின் தாக்குதல்களில் ஏற்பட்ட ஏனைய  இழப்புகள் பற்றிய விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails