Wednesday, April 22, 2009

கிரகங்களை கண்டறிய டெலஸ்கோப்

கிரகங்களை கண்டறிய டெலஸ்கோப்

சூரிய குடும்பத்தில் இடம் பெறாத 300—--க்கும் மேற்பட்ட கிரகங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் பூமியைப் போன்ற புதிய கிரகம் ஏதாவது இருக்கிறதா என்று கண்டறிய நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக கெப்ளர் என்ற டெலஸ்கோப் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் விமானப்படை நிலையத்தில் இருந்து ஆளில்லாத ராக்கெட்டில் இது அனுப்பி வைக்கப்பட்டது. இது நட்சத்திர கூட்டமான பால்வீதி மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டு புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும்.

அமெரிக்காவின் புதன் கிரக ஆராய்ச்சி

அமெரிக்கா சூரிய மண்டலத்திலுள்ள வெள்ளி, செவ்வாய் கிரகங்களுக்கும், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கும் விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. பூமியும் மற்ற கிரகங்களும் எப்படி உருவாகியது என்பதை அறிய ஆர்வமாக உள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் அதன் ஒரு கட்டமாக 1970--ம்ஆண்டில் சூரியன் அருகிலுள்ள புதன் கிரகத்துக்கு மரீனர்-—10 என்ற விண்கலத்தினை அனுப்பினார்கள். அது அனுப்பிய தகவல்களைக் கொண்டு புதன் கிரகத்தைச் சுற்றிலும் காந்த களம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது மெசஞ்சர் என்ற பெயர் கொண்ட விண்கலம் புதன் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது புதன் கிரகத்தின் மேல்பகுதியில் 200 கி.மீ தொலைவில் இருந்தபடி ஆராய்ந்து தகவல்களை அனுப்பி வைக்கும்.

உலகிலேயே மிக வயதான உயிரினம்

உலகின் மிக வயதான வாழும் உயிரினம் ஒன்று ஐஸ்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 400—-——க்கும் மேல் வயதான அந்த உயிரினம் சிப்பி வகையைச் சேர்ந்த ஒருவகை மீன் (ஷெல் பிஷ்) ஆகும். இது ஐஸ்லாந்து கடலோரப் பகுதியில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உயிரினத்தின் வயதை அதன் ஷெல் மீதுள்ள வளையங்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான ரகசியம் என்ன என்பதையும் வயதாகும் முறையையும் புரிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் உருகும் பனிமலை

அண்டார்டிகாவில் அதிக வெப்பம் காரணமாக அதிகளவு பனி உருகி வருவதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. அண்டார்டிகாவை கண்காணித்து வரும் நாசாவின் செயற்கைக்கோள் அனுப்பியுள்ள தகவலின் மூலம் கலிபோர்னியா மாகாணத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிதாக அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள் அண்டார்டிகாவில் பனி உருகி வருவதாக 2005--ம் ஆண்டே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails