கொழும்பு, ஏப்.29-
பிரபாகரன் தென் ஆப்பிரிக்கா தப்பி சென்று விட்டதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை முல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைபுலிகள் கட்டுப்பாட்டில் தற்போது 6 கிலோ மீட்டர் நீள பகுதி மட்டுமே உள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இதற்குள்தான் தங்கி இருப்பதாக சிங்கள ராணுவம் நம்புகிறது. எனவே அவரை பிடிக்க சிங்கள ராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால் பிரபாகரன் அங்கு இல்லை. அவர் தப்பி சென்று விட்டார் என்று தகவல்கள் வந்தபடி இருக்கின்றன. அவர் நீர்மூழ்கி படகு மூலம் தப்பி இருக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சிங்கள ராணுவ தளபதி கூறினார். அவர் ஏற்கனவே தப்பி சென்று விட்டார் என்றே இந்திய மற்றும் இலங்கை உளவு அமைப்புகளும் கூறுகின்றன.
விடுதலைப்புலிகளின் வலுவான கோட்டையாக இருந்த புதுக்குடியிருப்பு வீழ்ந்ததுமே அவர் தப்பி சென்று விட்டதாக உளவு அமைப்புகள் கூறுகின்றன. அவர் தென் கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் அல்லது லாவோஸ் நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது தென் ஆப்பிரிக்கா சென்றிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளில் அந்த நாட்டு அரசுகளும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால் அவர் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான தமிழர்கள் இருப்பதால் தனக்கு அங்கு ஆதரவு கிடைக்கும் என்று கருதி அங்கும் சென்றிருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
பிரபாகரன் தனக்கு ஆபத்து நெருங்கும்போது தப்பி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் உளவு அமைப்புகள் சொல்கின்றன. பிரபாகரனின் மெய்காப்பாளராகவும், தளபதியாகவும் இருந்து பின்னர் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா பிரபாகரன் பற்றி கூறும் போது பிரபாகரன் எப்போதுமே உயிருக்கு ஆபத்தான இடத்தில் இருக்க மாட்டார். சண்டை நடக்கும் இடத்தில் இருந்து பல மைல் தூரத்துக்கு அப்பால்தான் இருப்பார். இப்போது ஆபத்து நெருங்கி இருப்பதால் அந்த இடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.
நன்றி:மாலைமலர்
No comments:
Post a Comment