""உண்மையான சந்தோசம் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறது. கடந்தகால சம்பவங்களிலும் எதிர்காலக் கேள்விக் குறியிலும் உங்களைத் தொலைத்துவிடாதீர்கள்'' என மேடைதோறும் உபதேசம் பண்ணிவரும் "வாழும் கலை' அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி "என்னைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் பார்த் தார்கள்' என பகீர் புகாரை எழுப்பி... ஆன்மீகத் தரப்பை பதட்டத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார். பெங்களூர் கனகபுரா சாலையில் இருக்கும் அவரது ஆசிரமத்தின் தலைமையகத்தில்... சத் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிளம்பியபோதுதான் இந்த கொலை முயற்சி நடந்ததாக ரவிசங்கர் சொல்கிறார்.
சம்பவம் பற்றி நாம் துருவியபோது பரபரப்புத் தகவல்கள் ஏகத்துக்கும் கிடைத்தன. அவற் றைப் பார்ப்பதற்கு முன்... இந்த ரவி சங்கர் குருஜி யார்? என்பதைப் பார்ப்போம்.
பெங்களூரில் ஆசிரமம் அமைத்துக் கொண்டிருக்கும் இந்த ரவிசங்கருக்கு சொந்த ஊர்... நம் தமிழகத்தில் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் பாபநாசம்தான். தமிழ் பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர் இவர். 1956 மே 13-ல் பிறந்த ரவிசங்கருக்கு இப்போது வயது 57. இவரது அப்பா வேங்கடரத்தினம் சமஸ்கிருதப் பண்டிதர். மே 13 ஆதிசங்கரர் பிறந்தநாள். அந்த நாளில் பிறந்ததால் இவருக்கு சங்கரர் நினைவாக சங்கர் என்ற பெயரையே இவரது பெற்றோர் சூட்டினர். இயற்பியல் பட்டப்படிப்பு படித்த ரவிசங்கருக்கு மாணவப் பருவத்திலேயே ஆன்மீக நாட்டம் வந்துவிட்டது. மகரிஷி மகேஷ்யோகி என்பவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மீகத் தேடலில் இறங்கினார். 82-ல் கர்நாடகாவுக்குப் பயணமான ரவிசங்கர், அங்கு ஷிமோகா மாவட்டத்தில் சலசலத்து ஓடும் துங்கபத்ரா நதிக்கரையில்... 10 நாட்கள் தனிமைத் தவம் இருந்தாராம். அப்போது நிஷ்டையில் அவருக்கு 'சுதர்சன க்ரியா'என்கிற மூச்சுப் பயிற்சியின் சூட்சுமம் தெரிந்ததாம். இதை ஊர்முழுக்க பரப்பிய ரவிசங்கர்... அதே வருடம் இந்த மூச்சுப்பயிற்சியை சொல்லிக்கொடுக்கும் ஆசிரமத்தையும் பெங்களூரில் தொடங்கினார்.
அப்போது பிரபல கர்நாடக சித்தார் இசைக் கலைஞர் ரவிசங்கர் தரப்பு.... ரவிசங்கர் என்ற பெயரில் ஆன்மீக ரவிசங்கர் வலம் வருவதை விரும்பவில்லை. இதையறிந்து தன் பெயருக்கு முன்னால் 'ஸ்ரீ ஸ்ரீ' என்ற எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கராய் அவதாரமெடுத்தார். சலன மில்லாத மனநிலையையும் ஆரோக்கியத்தையும் நீண்டவாழ்க்கையையும் தரக்கூடியதே எனது சுதர்சன க்ரியா என அவர் விளம்பரம் செய்ததோடு.. அதன் காபி ரைட்டையும் தன் பெயரில் பதிவு செய்துகொண்டார். உலகளவில் ஏராளமான பக்தர்கள் இவர் பக்கம் வந்தனர். அதோடு அரசியல் புள்ளிகள் பலரும் இவரைத் தேடிவர... அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு... தனது செல்வாக்கை விஸ்தரித்துக்கொண்டார் ரவிசங்கர். அந்த செல்வாக்கும் அவரை பல நாடுகளுக்கு பறக்க வைத்தது. கோடிகளை அவரது காலடியில் கொட்டவைத்தது.
ஹைடெக் சாமியாராய் உலக நாடுகளில் வலம்வர ஆரம்பித்த இவருக்கு தலாய் லாமாவோடும் நட்பு உண்டாக... அவருடன் சேர்ந்து '"மனித மதிப்புகள் கழகம்'' என்ற அமைப்பைத் தொடங்கினார். பிரச்சினை களைச் சந்திக்கும் உலக நாடுகளுக் கெல்லாம் பறந்துபோய்... அந்நாட்டு மக்களுக்கு அமைதிக்கான மனப் பயிற்சிகளையும் கொடுக்க ஆரம்பித்தார். இப்படி அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது அங்கே போய் உரை நிகழ்த்தினார். ஈராக்கில் யுத்தம் முடிந்தபோது... அங்கும் சென்றார். கடந்த ஆண்டு இலங்கைக்கும் சென்று அங்கு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட ஈழமக்களையும் பார்த்து ஆறுதல் சொன்னார். இப்படியாக உலகநாடுகள் பலவற்றில் ஆசிரமங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ரவிசங்கர்தான்... இப்போது புகார் வாசிக்கிறார்.
""நான் காரை நோக்கி வந்தபோது... துப்பாக்கிச் சத்தம் கேட்டது. யாரோ சுடுகிறார்கள் என என் பாதுகாவலர்கள் எச்சரித்தபோது... குண்டு என் பக்தர் ஒருவர் மீது பாய்ந்தி ருந்தது. என்னைக் கொல்வ தற்கு தீய சக்திகள் களமிறங்கி இருக்கிறது. போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை. அவர்கள் விசாரணையில் எனக்கு திருப்தி இல்லை'''என்கிறார் ரவிசங்கர் காரமாய்.
"இது ஜெயில்ல இருக்கும் நித்யானந்தாவின் சதிதான்' என நம்மை அதிரவைத்த ரவிசங்கரின் அந்த ஆன்மீக நண்பர்.. அதற்கான காரணங்களையும் விவரித்தார். "ரவிசங்கரும் நித்யானந்தாவும் தமிழ்நாட்டுக் காரங்கதான். இதில் ரவிசங்கர் சீனியர். நித்தி ஜூனியர். இந்த இரண்டுபேருக்கிடையிலும் ஈகோ மோதல் தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு. ரவிசங்கர் நிகழ்ச்சிகளை... நித்தியும், நித்தி நிகழ்ச்சிகளை... ரவிசங்கரும் கடுமையா விமர்சிப்பாங்க. ரவிசங்கருக்கு நெருக்கமான பிரபலங்களிடம் அவரை பத்தி தவறான தகவல்களைப் பரப்புவார் நித்யானந்தா. இதேபாணியில் ரவிசங்கரும் நித்தி பத்தி வத்தி வைப்பார். ரஞ்சிதா வீடியோ வெளியான போதே இது ரவிசங்கர் ஆட்கள் செய்த வேலையாத்தான் இருக்கும்னு நித்யானந்தா ஆரம்பத்தில் புலம்பினார். அதனால் நித்யானந்தாவின் வெறி பிடித்த சீடர்களில் ஒருத்தர்தான் இந்த வேலையை செய்திருக்கணும்'''என்கிறார் அழுத்தமாக.
காவல்துறை என்ன சொல்கிறது? கர்நாடக டி.ஜி.பி. அஜய்குமார் சிங்கிடம் நாம் கேட்டபோது """சம்பவம் மாலை 6.05 வாக்கில் நடந்திருக்கு. ஆனா ஹரோஹள்ளி ஸ்டேசனுக்கு இரவு 9.15-க்குதான் தகவலையே கொடுத்திருக்காங்க. ஸ்பாட் விசாரணையில் சில விபரங்கள் கிடைச்சிருக்கு. 32 எம்.எம். பிஸ்டலைத்தான் யூஸ் பண்ணியிருக்காங்க. 700-750 அடியில் இருந்து சுட்டிருக்காங்க. அதிலும் மேலே வானத்தை நோக்கி சுட்டிருக் காங்க. மேல்நோக்கிப்போன புல்லட் செயல் இழந்த நிலையில் கீழே விழும்போது.. வினய்ங்கிற ஒருத்தரின் தொடையில் அது பட்டிருக்கு. அதனால் அவருக்கு ரத்தக் காயம் கூட உண்டாகலை. அதேபோல் சம்பவம் நடந்த போது ரவிசங்கர் அங்கே இல்லை என்பதும், அவர் புறப்பட்ட 5 நிமிடம் கழித்தே சம்பவம் நடந்தது என்பதும் தெரியவந்துள்ளது. அப்படி யிருக்க.. ரவிசங்கர் தனக்கு குறிவைக்கப்பட்டதா ஏன் சொல்றார்னு தெரியலை'''என்றார் நம்மிடம்.
விசாரணைக் காக்கிகளோ ""அந்த ஆசிர மத்தில் அதிகாரப் போட்டி இருந்ததா தெரியுது. அதோட போதைப்பொருள் யூஸ் பண்ணிய வங்களும் இருந்திருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர்.. தன் துப்பாக்கி விசையில் தவறா கைவச்சிருக்கலாம். அதேபோல் ஆசிரம விழா வில் அன்று ஜார்கண்ட், மேற்குவங்க ஆட்கள் நிறைய கலந்துக்கிட்டு இருந்திருக்காங்க. அத னால் மாவோயிஸ்ட்டுகள் அதில் இருந்தாங் களான்னும் சந்தேகிக்கிறோம். விரைவில் இதன் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படும்'' என்கிறார்கள் புன்னகையோடு. ரவிசங்கரின் புகார்; பூமரங் வகையைச் சேர்ந்ததுதானா? என்கிற கேள்வியும் பரவலாக எழுந்திருக்கிறது.
No comments:
Post a Comment