Saturday, June 5, 2010

நாயைச் சுட்ட குண்டு – ரவிசங்கர் ஆசிரம சர்ச்சை முடிவுக்கு வந்தது..!

 

 

பெங்களூரில் வாழும் கலை ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பண்ணை வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரமத்தை ஒட்டியுள்ள தனது பண்ணை வீட்டில் திரிந்த நாய்களை விரட்ட வானை நோக்கி சுட்டபோது, அது தவறுதலாக ஆசிரமத்துக்குள் பாய்ந்துவிட்டதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழும் கலை ஆசிரமத்தில் ரவிசங்கர் பேசிவிட்டு காரில் ஏறிச் சென்ற பி்ன்னர் வானிலிருந்து வந்த குண்டு அங்கு நின்றிருந்த வினய் என்பரின் தொடையை உரசிச் சென்றது.

இது தனக்கு வைக்கப்பட்ட குறி என்று ரவிசங்கர் கூறினாலும், அவரை குறி வைத்து துப்பாக்கிச் சூடே நடக்கவில்லை என்று கர்நாடக போலீசாரும், மத்திய உளவுப் பிரிவுகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

சுடப்பட்ட துப்பாக்கி . 32 ரகத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு 700 அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் ஆசிரமத்தை ஒட்டியுள்ள ஏராளமான பண்ணை வீடுகளில் ஏதோ ஒரு வீட்டில் யாரோ பறவைகளை குறி வைத்து சுட்டிருக்கலாம், அது தவறுதலாக ஆசிரமத்துக்குள் பாய்ந்து பக்தரை தாக்கியிருக்கலாம் என போலீசார் கருதினர்.

இதையடுத்து பண்ணை வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்தப் பகுதியில் இந்த ரக துப்பாக்கி வைத்திருக்கும் பண்ணை வீட்டினர் குறித்து லிஸ்ட் எடுத்து விசாரிக்கப்பட்டது.

அப்போது ஆசிரமத்தை ஒட்டியுள்ள பண்ணை வீட்டின் உரிமையாளர் மாதவ்குமார் பிரசாத் என்பவர் சிக்கினார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தி்ல், சில நாய்கள் எனது பண்ணைக்குள் நுழைய முயன்றன. அவற்றை விரட்டுவதற்காக நான் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 3 முறை சுட்டேன். அதில் ஒரு குண்டு தவறுதலாக ஆசிரமத்துக்குள் பாய்ந்து ஒருவரை காயப்படுத்திவிட்டது. ரவிசங்கர் மீது சுடும் எண்ணம் எதுவும் இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த வித பகையும் இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து கர்நாடக டி.ஜி.பி. அஜய்குமார் கூறுகையில், ஆசிரமத்திற்கு அருகே உள்ள பண்ணையின் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் தான் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார். தனது பண்ணைக்குள் நுழைந்துவிட்ட தெரு நாய்களை விரட்டத்தான் துப்பாக்கியால் சுட்டதாகவும், ரவிசங்கரை குறி வைத்து தான் சுடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரைப போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் என்றார். 

இந்தக் கைதின் மூலம், ரவிசங்கர் ஆசிரம துப்பாக்கிச் சூடு சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. 

source:tamilulakam

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails