Monday, June 28, 2010

தொழுகை நடத்தும்முதல் முஸ்லிம் பெண்

 
 
லண்டன்:கனடா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், தொழுகையை வழிநடத்திய முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை, விரைவில் அடைய இருக்கிறார்.இஸ்லாமிய மதத்தில், ஆண்கள் மட்டுமே தொழுகையை வழிநடத்துவர். இவர்கள் இமாம் என்றழைக்கப்படுவர். சமீபகாலங்களில், பெண்களையும் இமாம்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு ஆதரவும் பெருகி வருகிறது.கடந்த 2008ல், அமெரிக்காவில் பிறந்து முஸ்லிமாக மதம் மாறிய அமினா வதூத் என்ற பெண், முதல் முதலாக, தொழுகையை வழிநடத்திக் காட்டினார்.

 
 

 
இப்போது கனடாவின் டொரன்டோ நகரைச் சேர்ந்த ரஹீல் ராசா என்ற பெண், லண்டனில் விரைவில் தொழுகையை வழிநடத்த உள்ளார்.  லண்டனின் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த தாஜ் ஹார்கே என்ற இமாம், இஸ்லாமிய மதத்தை முற்போக்குச் சிந்தனை வழிப் பரப்பி வருபவர். இவர், தான் நடத்தி வரும் தொழுகைகளில் பெண்களை இமாம்களாக நியமித்து வருகிறார்.ரஹீல் ரஜா, பெண்கள் இமாம்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடத்தி வருபவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் டொரன்டோவில் நடந்த தொழுகை ஒன்றில் இவர் இமாமாக இருந்து வழிநடத்தினார்.

 
 

 
அதை எதிர்த்து இவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன."நான் இமாம்களின் வேலையைப் பறிக்கவில்லை.  முஸ்லிம் சமுதாயத்தில் 50 சதவீதம் பெண்கள் இருக்கின்றனர் என்பதை நினைவூட்டுவதுதான் என் வேலை' என்கிறார் ரஜா. தாஜ் ஹார்கே, ஆக்ஸ்போர்டில் நடத்தவிருக்கும் தொழுகை ஒன்றில் இமாமாகப் பணியாற்றும்படி, ரஜாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் ரஜா பங்கு கொண்டால், அந்தத் தொழுகைதான், உலகில் முஸ்லிம் பெண் ஒருவர், முதன் முதலாக இமாமாகப் பணியாற்றும் தொழுகையாக இருக்கும்.

 
source:tamilcnn

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails