இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப் புலிகளின் நடேசன், புலித்தேவன் போன்ற தலைவர்கள், தாம் சரணடைய ஏற்பாடு செய்துதரும்படி என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் "உங்களுடைய முடிவு, காலம் பிந்தியது. இருந்தாலும் நீங்கள் வெள்ளைக் கொடியுடன் சென்று படையினரிடம் சரண் அடையுங்கள்'' என்று கூறினேன். அதற்கு முன்னதாக புலிகள் சரணடைவது குறித்து இலங்கை அரசுக்கும் தெரியப்படுத்தி இருந்தேன். அவர்கள் சரண் அடைவதற்கான ஒழுங்குகள் குறித்து இலங்கை அரசுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இவ்வாறு தெரிவித்தார் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும், விடுதலைப் புலிகள் இலங்கை அரசு சமாதானப் பேச்சுக்கான அனுசரணையாளருமான எரிக்சொல்ஹெய்ம். இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களிடம் அவர் இத்தகவலை நேற்று வெளியிட்டார்.
மேலும், "இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு நாங்கள் முன்வந்திருந்தோம். கடைசிவரை யுத்தத்தைத் தவிர்த்து இரு தரப்புகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால் இரு தரப்பினரும் பல தடவைகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இறுதியில் போர் ஏற்பட்டுவிட்டது.'' என்றும் சொல்லி வருத்தப்பட்டார் சொல்ஹெய்ம்.
போர் தொடர்பில், 2009 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பல தடவைகள் என்னுடன் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். நாங்களும் அதற்காகப் பல வழிகளில் முயன்றுகொண்டிருந்தோம். மேலும் சரணடைவது தொடர்பில், எங்களுடன் மாத்திரமல்ல, செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு, ஐ.நா. போன்ற பல தரப்புகளுடனும் அவர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகே சரணடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் அரசு சார்பான எவருடன் பேசினேன் என்பதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் புலித்தலைவர்கள் தொடர்பு கொண்டு சில மணித்தியாலங்களின் பின்னர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று நான் அறிந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார் சொல்ஹெய்ம்.
யுத்தத்தின் இறுதிப்பகுதியில் பல போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை ஒன்று தேவை. அதைத்தான் ஐ. நா. செயலரும் வலியுறுத்துகிறார். எமது நிலைப்பாடும் அதுதான். சர்வதேச சுயாதீன விசாரணைகள் மூலம் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment