Wednesday, June 9, 2010

ஒட்டகங்களுக்கு இன்சூரன்ஸ்: ராஜஸ்தான் மாநில அரசு முடிவு

 

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்துக்கே உரிய விலங்கான ஒட்டகத்துக்கு அம்மாநில அரசு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத் தால் ஒட்டக உரிமையாளர்கள், வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்.


ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும் பகுதி பாலைவனம் என்பதால், அதற்கேற்ற விலங்கான ஒட்டக வளர்ப்பு, அங்கு தனி இடம் பெற் றுள்ளது. தண்ணீருக்காக, பாலைவனப் பகுதியிலுள்ள கிணறுகளைத் தேடி பல மைல்கள் பயணம் செய்ய, ஒட்டகத்தைப் பயன்படுத்துவர். விவசாயம் மற்றும் போக்குவரத்துக்கு ஒட்டகங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த இரண்டு துறைகளும் இயந்திரமயமாகி வருவதால், ஒட்டகங்களை வளர்க்க மிகவும் பாடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 2002ல், இம்மாநிலத்தில் நான்கு லட்சத்து 98 ஆயிரம் ஒட்டகங்கள் இருந்தன. 2007ல் நான்கு லட்சத்து 39 ஆயிரம் ஒட்டகங்கள் உள்ளன. இதற்கு முன்பு இருந்த அரசுகள், செம்மறியாடு, பசு, எருமை போன்ற வீட்டு விலங்கினங்களுக்கு பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்கள், தீனியில் மானியம் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தன. ஒட்டகங்கள் புறக்கணிக்கப்பட்டன.


பா.ஜ., ஆட்சியின் போது மாநிலத்தில் தண்ணீருக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டதால், செம்மறியாடு வளர்ப்போர் பெரும் இடரைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதனால் அவர்கள், செம்மறியாடுகளுடன் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானாவுக்குச் செல்ல ஆரம்பித்தனர். இதைத் தடுக்க, முதன்முதலாக செம்மறியாட்டுக்கு இன்சூரன்சை பா.ஜ., கொண்டு வந்தது. அத்திட் டம், பின் பசு, எருமை என விரிவடைந்தது. இப்போது, ராஜஸ்தான் அரசு ஒட்டக வளர்ப்போர் எதிர்கொண்டு வரும் நஷ்டத்தைச் சமாளிக்க உதவும் வகையில், ஒட்டகங்களுக்கான இன்சூரன்சை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பாலிசி தொகையில் 25 சதவீதத்தை அரசே வழங்கிவிடும்.


ஒட்டகம் வளர்ப்போர், இன்சூரன்ஸ் மூலம் ஒரு ஒட்டகத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் பெறமுடியும். இதற்காக கட்ட வேண்டிய பாலிசி தொகையான ஆயிரம் ரூபாயில் 25 சதவீதம் அரசால் வழங்கப்படும். ஒட்டகம் இறந்தால் ஒட்டக உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆயுள் காப்பீடாக ஒட்டக உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாயும், ஒட்டகம் பராமரிப்போருக்கு 35 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் ஒட்டக உரிமையாளர் 200 ரூபாயும், பராமரிப்பவர் 100 ரூபாயும் செலுத்தினால் போதும். அரசின் மானியத் தொகையை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு விரைவில் அதன் மீதான தன் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails