சண்டிகர் : தான் வாங்கிய காரின் மொத்த விலையில், பாதி விலை கொடுத்து அதன் பேன்சி எண்ணை வாங்கி இருக்கிறார் ஒரு விவசாயி என்றால், உங்களால் நம்பமுடிகிறதா? ஆம். இப்படி நடந்திருப்பது வெளிநாட்டில் அல்ல; இந்தியாவில் தான்.
பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி நரேந்தர்சிங் ஷெர்கில். இவருக்கு, காரார் மற்றும் குராலி நகரங்களில், பல ஏக்கர் கணக்கில் நிலங்கள் உள்ளன; ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் சமீபத்தில், 20 லட்ச ரூபாய் கொடுத்து, "டொயோட்டா பார்ச்சூனர்' கார் வாங்கியுள்ளார். பஞ்சாப் மாநில கார் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம், கார்களுக்கான 50 பேன்சி எண்களை ஏலத்தில் விட்டது. இந்த ஏலத்தில் சிங்கும் கலந்து கொண்டார். 0001 என்ற எண்ணை, என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட வேண்டும் என்பது இவரது ஆசை. அந்த எண்ணுக்கு ஆரம்ப விலையாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் தொகை அதிகரித்து கொண்டே போனது. இறுதியில் சிங்கும், இன்னொருவரும் தான் போட்டியில் இருந்தனர். அதிகபட்ச தொகையாக, ஐந்தரை லட்ச ரூபாய் வரை போனதும், சிங், அந்த எண்ணை 10 லட்ச ரூபாய்க்கு, ஏலத்தில் எடுப்பதாக அறிவித்தார்.
குறிப்பிட்ட தொகையை கொடுத்து, அந்த எண்ணை வாங்கிவிட்டார். "அந்த எண்ணை வாங்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்' என்று தெரிவித்தார் சிங். உரிமம் வழங்கும் ஆணையம், இந்த ஏலம் மூலம், 39 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தது. 0001 க்கு அடுத்தபடியாக, 0009 என்ற எண், நான்கு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும், 0003 என்ற எண் இரண்டரை லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டன. பள்ளி ஆசிரியையான சிங்கின் மனைவி, இவ்வளவு தொகை கொடுத்து, காருக்கு எண் வாங்க வேண்டுமா என்று புலம்பி கொண்டிருக்கிறாராம்.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment