கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். இவருக்கு முஸ்கின் (11), ரித்திக் (9) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.
இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி:கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர். இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது: எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.
கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். குற்றவாளிக்கு சரியான தண்டவை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
குழந்தைகள் கடத்தல் எப்படி நடந்தது ? : அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த முஸ்கினும், ரித்திக்கும் கடந்த 29ம்தேதி காலை வழக்கம்போல வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பினர். வழக்கமாக குழந்தைகளை அழைத்துச் செல்லும் கால் டாக்ஸிக்கு பதிலாக வேறு ஒரு கால் டாக்சி வந்தது. அதனை ஓட்டிய டிரைவர் இதற்கு முன்பு முஸ்கினையும், ரித்திக்கையும் பள்ளிக்கு அழைத்து சென்ற டிரைவர் என்பதால் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு அழைத்து செல்லத்தான் கால்டாக்ஸி வந்திருப்பதாக எண்ணி அதில் ஏறினார்கள். ஆனால் அந்த வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றது.
குழந்தைகள் இருவரையும் கடத்தி, தந்தை ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் கால்டாக்ஸி டிரைவர் அவர்களை கடத்திச் சென்றான். போகும் வழியில் தனக்கு துணையாக தனது நண்பனையும் அழைத்துக் கொண்ட அந்த டிரைவர், சிறுமி முஸ்கினை நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் போலீசில் மாட்டிக் கொள்வோமோ என பயந்த அவர்கள், குழந்தைகளை கொடூரமாக தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்தான்.
கோவையை உலுக்கிய சம்பவம் : கோவை நகரையே உலுக்கிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அரக்க கொலையாளிகளான கால்டாக்ஸி டிரைவர் மோகன்ராஜ் (33), அவரது நண்பன் மனோகரன் (23) ஆகியோரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ஒன்றுமே அறியாத குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளிகள் என கேள்விப்பட்டதும், சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள், அவர்களை அடிக்க பாய்ந்த சம்பவமும் நடந்தது.
போலீசுடன் செல்ல தயார் : இந்நிலையில் கொலை குற்றவாளிகளான மோகன்ராஜையும், மனோகரனையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றவாளிகளை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், சம்பவம் குறித்து விசாரித்ததுடன், போலீஸ் காவலில் செல்ல சம்மதமா? என குற்றவாளிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், போலீசுடன் செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.
சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான்: கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இன்று அதிகாலை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் விசாரனைக்காக செட்டிபாளையம் அழைத்து சென்றனர். வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்றபோது, கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். அவன் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகிய போலீசார் காயம் அடைந்தனர். குற்றவாளி தப்பி ஓடுவதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மோகன்ராஜை சுட்டார். இதில் மோகன்ராஜ் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்தது. மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தான்.
மோகன்ராஜ் சுட்டதில் காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மோகன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோகரன் போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் கஸ்டடியில் இருக்கின்றான். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்து ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளி மோகன்ராஜையும், அவனது நண்பனையும் விசாரணை இன்றி தூக்கில் போட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். முஸ்கின் மற்றும் ரித்திக்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பலரும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது ; குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கி தூக்கில் போட வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோகன்ராஜ் போலீசாரால் சுட்டுக்கொன்ற சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment