காக்கை இனம், தமக்கு கிடைக்கும் உணவை தான் மட்டும் உண்ணாமல், மற்ற காக்கைகளையும் கரைந்து அழைத்து கூடி உண்ணும் இயல்பு கொண்டவை. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், காக்கைகளைப் போலவே கரப்பான் பூச்சிகளும் உணவை கூட்டாக பங்கிட்டு உண்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்கு காக்கைகளை உதாரணமாக கூறுவதுண்டு. உணவு கிடைத்ததும் தான் மட்டும் உண்ணாமல், மற்ற காக்கைகளையும் அழைத்து, உண்ணும் பண்பு காக்கைகளுக்கு உண்டு. இதுபோன்று, கரப்பான் பூச்சிகளும் உணவை தேடுவதிலும், உண்பதிலும் ஒற்றுமையாக உள்ளன என்பது சமீபத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக் கழகத்தில் கரப்பான் பூச்சிகளின் வாழ்வியல் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு சுவையான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், மனிதர்களைப் போலவே, தரமான உணவு எது என்பதை கரப்பான் பூச்சிகள் தேர்வு செய்கின்றன; இது குறித்து ஒன்றோடு ஒன்று ஆலோசனை செய்த பின், குறிப்பிட்ட ஒரே உணவு இருக்கும் இடத்தை நோக்கி அனைத்து கரப்பான் பூச்சிகளும் செல்கின்றன என்பது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
கரப்பான் பூச்சிகள் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக, அவை தங்கள் உணவை எவ்வாறு தேடிக் கொள்கின்றன என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இரண்டு கரப்பான் பூச்சிகள் தனித்தனியாக வைக்கப்பட்டன. அவை உண்பதற்கு என தனித் தனியாக உணவு வைக்கப்பட்டது. கரப்பான் பூச்சிகளுக்கு பசி எடுத்தபின், அவை இரண்டும் விடுவிக்கப்பட்டன. அப்போது, உணவைத் தேடி அவை தனித் தனியாக செல்லாமல், ஒன்றாகவே சென்றன. வைக்கப்பட்டிருந்த உணவை முகர்ந்து, எதை எடுக்கலாம் என்று இரண்டு கரப்பான் பூச்சிகளும் சேர்ந்து முடிவு செய்தன. பின், இரண்டும் ஒரே உணவை எடுத்துக் கொண்டன.
இந்த ஆய்வு குறித்து லண்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "பெரும்பான்மையான கரப்பான் பூச்சிகள் ஒரே உணவை உண்கின்றன. "ஒவ்வொரு கரப்பான் பூச்சியும், ஒரு உணவு பருக்கையை எடுத்துக் கொண்டு, அவற்றின் மீது நீண்ட நேரம் அமர்ந்து உண்கின்றன. பூச்சிகளை கட்டுப்படுத்துவது அவசியம் என்ற நிலையில், கரப்பான் பூச்சிகளின் வாழ்வியலை தெரிந்து கொண்டு, அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான பூச்சிக் கொல்லிகளை தயாரிப்பதற்கு இந்த ஆய்வு உதவும்' என்றனர்
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment