பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, கடந்த ஜனவரியில் இறந்ததில் இருந்தே, தனியாகக் கிடந்து அவதிப்படுகிறார் பார்வதி அம் மாள். கணவன் இறந்ததை உணர்ந்தும் உணராமலும் அவரை நினைத்தே அழுது கொண்டு இருந்தவரை, ஒருவாறு தேற்றி மருத்துவ சிகிச்சைக்காக மார்ச் 2-ம் தேதி மலேசியாவுக்குக் கூட்டிச்சென்றார்கள். அங்கு இருந்து தமிழகத்துக்கு அழைத்துவந்து, திருச்சியில் சிகிச்சை அளிக்கவும் அவர் குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஏப்ரல் 16-ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தவரை, கீழே இறங்கவிடாமல் திருப்பி அனுப்பிவிட்டது இந்திய அரசாங்கம். பிறகு மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப் பட்ட பார்வதி அம்மாள், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறைமாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பார்வதி அம்மாளுடன் மயிலேறும் பெருமாள்
'' பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர், 'என்னைப் பார்க்க என் பிள்ளைகள் வரமாட்டார்களா? எனக் கேட்டு, 82 வயதில் சிறு குழந்தை போல கண்ணீர் விடுகிறார். கடந்த ஒரு மாத காலமாக அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது...'' என்று யாழ்ப்பாணத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.
கடந்த 10 மாதங்களாகஅவருக்கு சிகிச்சை அளித்துவரும் வல்வெட்டித் துறை மாவட்டமருத்துவமனை அதிகாரி டாக்டர் மயிலேறும் பெரு மாளிடம் பேசினோம். தன் ஆதங்கத் தைக் கொட்டினார்.
''பார்வதி அம்மாவுக்கு தண்ணீர் உணவுதான் கொடுக்கிறோம். பால், திராட்சைப் பழச்சாறு, நெல்லிக்காய் சூப், இடையிடையே ஆப்பிள், பிஸ்கெட்டுகளைக் கொடுக்கிறோம். அய்யா வேலுப்பிள்ளையை நினைச்சு நினைச்சு, 'என்ட அய்யா என்ட அய்யா'ன்னு அடிக்கடி அழறாங்க. இந்த மருத்துவமனையில என்னென்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் செய்து தருகிறோம். சிகிச்சைகளைக் கொடுக்கிறோம். ஆனால், அவருடைய மனப் பிரச்னைக்குத்தான் எங்களால் எதுவும் செய்ய முடியலை. புத்திர பாசத்தால்துடிக்கிறாங்க. ஒரு மாதமா ரொம்ப அடம் பிடிக்கிறாங்க... செவிலிமார் உள்ளூர்க்காரர்களா இருக்கிறதால், சமாளிச்சுப் பார்க்கிறோம்.
கனடாவில் இருக்கிற மகள் வினோதினியும், டென்மார்க்கில் உள்ள மற்றொரு மகன் மனோகரனும் இரண்டொரு நாளுக்கு ஒரு முறை பேசிக்கொண்டுதான் இருந்தாங்க. தினம் தினம் பேசினாலும் என்ன பிரயோசனம்? 'பெத்த பிள்ளைகள் இருந்தும் தன்னை வந்து பார்க்கலையே'ன்னு மனுஷிக்கு வெறுத்துப்போச்சு. உறவினர்கள் அவ்வப்போது வந்துபோகும்போது, அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். இதுதான் இப்போ அவருக்கு அருமருந்து. ஆனா, பிள்ளைகள் ரெண்டு பேருக்கும் இங்க வந்தா எவனாவது சுட்டுப்போடுவான்னு பயம். இவ்வளவு நடந்தபிறகும் இனியும் ஏதாவது நடந்துவிடுமா என்ன..!
வினோதினியோ, மனோகரனோ வெளிநாட்டு பிரஜைகள். கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கும் வெளிநாட்டவர், பாதுகாப்புத் துறை அனுமதி பெற்றுத்தான் இங்க வரமுடியும். அப்படி அவர்கள் வரும்போது கொழும்பில் இருந்து பலாலிக்கு விமான நிலையம் வழியாக பாதுகாப்பாக இங்கு வரமுடியும். இவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் வராமல் பார்க்கவும் முடியும். 10 மாதங்களாக நான்தான் அம்மாவின் சிகிச்சைக்குப் பொறுப்பு என்ற முறையில், இதை என்னால் செய்யமுடியும்.
வினோதினி, 'அம்மாவை கனடாவுக்கு அழைத்துக்கொள் கிறோம்...' என்று சொல்கிறார். எத்தனை மாதமா முயற்சி செய்துகொண்டே இருப்பது? அதனால், 'நீங்க வராவிட்டாலும் உங்கள் பிள்ளைகளையாவது அனுப்புங்க. அவங்களைப் பார்த்து அந்த அம்மா சந்தோஷமா இருப்பாங்க'ன்னு சொல்றேன். அதுக்கு ரெண்டு பிள்ளைகளும் உறுதியான பதில் சொல்லலை. அந்த அம்மாவுக்கு நாளுக்கு நாள் வேகம் குறைஞ்சுகிட்டுஇருக் கிறது. எத்தனை நாளைக்குத்தான் செவிலிமாரும் மருத்துவர்களும் வெற்று சமாதானம் சொல்லமுடியும்?'' என்றார் அவர்.
தற்போது, பார்வதி அம்மாளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் யாழ்ப்பாண எம்.பி-யும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான சிவாஜிலிங்கத்திடம் பேசினோம். ''அம்மா சிகிச்சை பெறுகிற வல்வெட்டித்துறை வைத்தியசாலையில், 94-ம் ஆண்டு, தரைக்குக் கீழே விடுதலைப் புலிகள் அறுவைச் சிகிச்சை கூடத்தை உருவாக்கினாங்க. அதை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கும்முன்பே ராணுவம், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. அந்தக் கூடத்தைப் பார்க்க சுற்றுலாவாசிகளாக வரும் முகமறியாத சிங்கள மக்கள்கூட, அம்மாவையும் பார்த்துட்டுப் போறாங்க. சிலர் தொலைவா நின்று பார்த்துட்டுப் போறாங்க. சிலர் காலில் விழுந்து கும்பிட்டும் போறாங்க. அந்த அம்மாவோட ஒரே ஏக்கம், தன் பிள்ளைகளைப் பார்ப்பதுதான். எப்படியோ, நம் தாயை கடைசிக் காலத்தில் நாம்தானே கண்கலங்காமல் வைத்திருக்க வேணும்...'' என்றார் சிவாஜிலிங்கம்!
source:vikatan |
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment