Wednesday, July 20, 2011

மாறிய மக்கள்! மாறாத அம்மா?

 
 
சில வழக்கு மொழிகள் பழமொழிகளாக, பொன்மொழிகளாக உருபெறுதல் காலம் தரும் பதிவாகும். 
'அம்மா திருந்த மாட்டார்' எனக் கூறிய பொழுதெல்லாம் நம்மை விரோதியாய் நோக்கியவர்கள் சொல்கிறார்கள்: 'அம்மா, எந்தக் காலத்திலும் திருந்தவே மாட்டார்' என்று.
அம்மா பதவியேற்பு விழா யாருக்கு மகிழ்ச்சி என விழாவை தொலைக்காட்சியில் உற்றுநோக்கியவர்கள் அறிவார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக இந்துத்துவா தீவிர ஆதரவாளர் 'துக்ளக்' சோவிற்கு மகிழ்ச்சி. அவரது தோழர் அரசு தீவிரவாதத்தை குஜராத்தில் அரங்கேற்றிய நரேந்திர மோடிக்கு மகிழ்ச்சி! 
நாம் ஒரு பிரபல நாளிதழில் கட்டுரையாளராக எழுதும்போது அடிக்கடி குறிப்பிடுவதுண்டு:
'அவாள் மடி பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது'.
ஆம்! அம்மாவின் மனுதர்ம, பார்ப்பன சித்தாந்தம் ஐந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல்படுத்தப் படும். முதலடியே முதல் கோணலானது நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும். சமச்சீர் கல்வி மறு பரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக் கல்வி திணிப்பு போன்ற பார்ப்பன இனச் சதியின் நூற்றாண்டு கால போராட்ட தொடர்ச்சியாக இனம் காணலாம்.
பொதுவாகவே பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள் பொதுமக்களிடம் நெருங்கிப் பழகி, செய்திகளை, நாட்டு நடப்புகளை விசாரிப்பதுண்டு.
நாம் விசாரித்த வகையில் டோக்கன் பெற்று, தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்ட காரணத்தால், வழங்கப் படாத இலவச தொலைக்காட்சி பெட்டிகள் குறித்த ஆதங்கங்கள், கோபங்கள் நியாயமானதே. மக்கள் சாலை மறியலுக்குத் தயாராவதாக தகவல்கள்!
சூன் 15 இல் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளி அறைகளில் அடைப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டிகளுக்கு விடுதலை இல்லை என்பதே சறுக்கலின் ஆரம்பமாகும். 
அம்மா எப்பொழுதுமே கடந்த கால ஆட்சியின் திட்டங்களை தொடர மாட்டார் என்பதே 'திருந்த மாட்டார்' என்ற வாதத்தின் நிலைத்த தன்மையாகும். 'போட்டாயே ஓட்டு, பாடுபடு' என்பதே தமிழகத்தில் அடிக்கடி ஒலிக்கப்படுகிற சொற்களாகும்.
ஆளும் அம்மாவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண் ஜோதிடம் ஆகியவற்றில் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை இருக்கலாம். அதற்காக 1200 கோடி செலவில் கட்டப்பட்ட தலைமை செயலகத்தைப் பயன் படுத்தாமல் விடுவது மக்களின் வரிப் பண விரயம் என்பதை தவிர வேறென்ன?
இறையாண்மை உள்ள குடியரசில் அரசு நிலைத்த தன்மை மிக்கது. மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் எனும் புதுப்புது கொள்ளைக்காரர்கள் வருவார்கள், போவார்கள். அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிகளுக்கு விசுவாசமாக இருந்து, தமிழகத்தில் மட்டுமே இரண்டு அணிகளாகப் பிரிந்து இருப்பது சாபக்கேடு. அது தமிழரின் தலை எழுத்து!
தமிழக சட்ட சபையில் அமைக்கப்பட்ட நூலகப் புத்தகங்கள் குப்பைபோல லாரிகளில் ஏற்றப்பட்டு, அள்ளி செல்லப்பட்டு எங்கோ குவிக்கப்பட்டதே! இருக்கைகள் ராசிப்படி சட்டசபையில் மாற்றி அமைக்கப்பட்டதே! ஏன் எனில் ஜோதிட ஆலோ சனை. மக்களின் வரிப் பணம். வீண்... வீண்...!
சென்னை நகர மக்களுக்கு பெரிய தலைவலி போக்குவரத்து நெரிசல். துணை நகர திட்டமும் பா.ம.க.வால் முடக்கப்பட்ட நிலையில் மெட்ரோ இரயில் பெரும் ஆறுதலாக அடையாளப்படுத்தப் பட்டது. அம்மா அதற்கும் 'ஆப்பு' வைத்து விட்டார். அதிகாரிகள், உலக வங்கி என எல்லா ஆய்வுகளும் குப்பைக்கு பறந்து விட்டது. அம்மாவைப் போல மக்களும் ஹெலிகாப்டரில் பறந்து பழகுவது மிக நல்லதே.
அதிகாரிகள் சட்ட வரம்புக்கு உட்பட்டு, செயல் பட்டு, ஆளும் கட்சிக்குப் பணியாமல், ஜால்ரா போடா மல் திட்டங்களுக்கு 'கலைஞர்', 'ஜெயலலிதா' என்ற பெயர்களை சிபாரிசு செய்யாமல் 'அரசின் திட்டங் கள்' என்ற வகையில் செயல்பட வேண்டும்.
ஓர் அரசின் மூளையாகச் செயல்பட்ட தலைமை செயலாளர் டேட்டா சென்ட்ருக்கும், உளவுத்துறை டி.ஜி.பி. அகதிகள் முகாமிற்கும் தூக்கியடிக்கப்படுவது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் தி.மு.க., அ.தி.மு.க. அரசியல் என்பதை கல்வெட்டில் பதித்தேயாக வேண்டும்.
பார்ப்பன பத்திரிகைகள் சட்டம் - ஒழுங்கு என்ற பல்லவியை தூக்கி அம்மாவை அரியாசனமேற்றினர். சட்டம் - ஒழுங்கு என்பது சமூக ஒழுக்கங்களின் அடிப்படையிலானவை. அவை காலத்திற்கேற்ப பொருளாதார சமன்பாட்டு நிலை இல்லா காரணங் களால் தனி மனிதர் களால் ஏற்படுத்தப்படுகிற குற்றமாகும். விலைவாசி, சட்டம் - ஒழுங்கு என் பதில் எந்த ஆட்சியும் மாயங்களை, ஓரிரவு மாற்றங்களை கொண்டுவர முடியாது என்பது எதார்த்தம். அம்மா, அய்யா என யாரும் விதி விலக்கில்லை.
ஒரு புதிய ஆட்சியை மூன்று மாதங்களுக்கு விமர்சிக்க கூடாது என்பது தார்மீக கோட்பாடாகும். ஆனால் தமிழக புலனாய்வு வார இதழ்கள் புதிய அரசின் இரண்டாவது வாரத்தில் ஒரு கட்டுரைக்கு இப்படித்தான் தலைப்பிட்டிருந்தன ('நக்கீரன்', 'ஜூனியர் விகடன்'): 'கஞ்சா படலத்தின் முதல் தொடக்கம் ஆரம்பம்' 'ஐயோ, நாடு எங்கே போகப் போகிறது?'
அம்மா பாண்டிச்சேரி ரங்கசாமியிடம் கூட்டணி வைத்து, ஆட்சியில் பங்கு தராத காரணத்தால் கண்டனம், கோப அறிக்கைகள். கேரள முதல்வர் முல்லைப் பெரியாறில் புதிய அணை என அறிவித்து விட்டார். பக்கத்து மாநிலங்களிடம் அம்மா சுமூக உறவு பேண மாட்டார் என்ற சொற்றொடரும் உண்மையாகப் போகிறதா? காவேரி பிரச்சனையை எப்படி கையாளப் போகிறார்? அம்மா ஆட்சியின் திட்டங்கள் குறித்து ஆளுநர் உரைக்கு பின் அலசு வதே பொருத்தமாக இருக்கும். 'அம்மா திருந்த மாட்டார்' என்ற வார்த்தையை இனியாவது மாற்று வாரா? காலமே, அவரது நடவடிக்கைகள், செயல்பாடு கள், திட்டங்களுக்கு உரிய பதில் கூறும்.

source:namvalvu

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails