Wednesday, July 13, 2011

மகள்களின் வாழ்க்கையை நீங்களே சூறையாடலாமா?



image.png

பட்டாம்பூச்சிகளின் கதை! (3)

ஹாய் ரீடர்ஸ்... "பட்டாம்பூச்சிகளின்' உண்மைக் கதை, உங்கள் எல்லாருடைய மனதிலும், "பசக்' என்று ஒட்டிக் கொண்டது குறித்து சந்தோஷமே... "அய்யோ பாவம் நம் கதாநாயகிகள்!' என்று நீங்கள் எல்லாருமே கடிதங்களில் உருகி இருந்தீர்கள். எத்தனை விதமான விமர்சனங்கள். சரி... விஷயத்துக்கு வர்றேன்...

இதுவும் எங்கள் ஊரைச் சேர்ந்த குடும்பத்தினர் கதை தான். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்து, வீழ்ந்து போன குடும்பம். எனவே, அந்த ஆடம்பரம், பகட்டுகளை விட முடியவில்லை. அந்தக் குடும்பத்தினருக்கு இரண்டு பெண்கள்; பேரழகிகள். அதனால், கவரிங் நகைகளை விதவிதமாக போட்டு, எப்போதுமே நகை கடை, "÷ஷா கேஸ்'கள் போல் திரிவர்.
வரதட்சணையாக நகைகளையும், பணத்தையும் கொட்டிக் கொட்டி கொடுத்தால்தான், நல்ல மாப்பிள்ளை அமையும் என்ற காலமல்லவா இது! தம் மகள்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில், மிகப்பெரிய இடத்தில் வரன் பார்த்தனர். ஐம்பது சவரன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் என்று, பேசி முடித்தனர்.
பிளஸ் 2 படித்த பெண்ணை, எம்.ஏ., படித்திருக்கிறாள் என்று பொய்யும் கூறி விட்டனர். கோடீஸ்வர வீட்டுக்கு இவர்கள் போடும், ஐம்பது சவரன் நகை பெரிய விஷயம் இல்லை; இருப்பினும், பெண்ணின் அழகில் மயங்கி, சம்மதித்தனர்.
மாப்பிள்ளை வீட்டார், ஊர்க்காரர்களிடம், பெண் வீட்டாரை பற்றி விசாரித்த போது, ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர். "இவ்வளவு பணம் அவர்களிடம் நிச்சயமாகவே இல்லை; வாழ்ந்து கெட்ட குடும்பம் அது!' என்று, எல்லாரும் சொல்லியும், மாப்பிள்ளை வீட்டார் நம்பவில்லை.
அது மட்டும் இல்லை... "அவங்க வீட்டு பெண்கள், கல்லூரியில் கால் வைத்ததே கிடையாது; பிளஸ் 2 பெயில். பெண்ணை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்!' என்றனர், ஊரார்.
ஆனால், பெண் வீட்டாரின் நடை, உடை, பாவனை, அழகான தோற்றத்தை பார்த்த மாப்பிள்ளை வீட்டார், ஊரார், பொறாமையில் பேசுகின்றனர் என்று நினைத்தனர்.
திருமணம் முடிந்தது.
தம்பதிகள் விருந்துக்கு செல்லும் போதும், வெளியே போகும் போதும், நகைகள் எதுவும் அணிய மாட்டாள் நம் கதாநாயகி. கேட்டால், "லோக்கல்ஸ் தான் நிறைய நகை போடுவாங்க... தாலி செயின் மட்டும் போட்டால் தான், "டீசன்ட்' ஆக இருக்கும்...' என்பாள்; காரணம், நீல சாயம் வெளுத்துப் போகும் என்பதால் தான்.
"படித்த மருமகள், உங்கள் வீட்டில் சும்மா தானே இருக்கிறாள்... நாலு பேருக்கு கல்வி அறிவு கொடுக்கட்டுமே...' என, மாப்பிள்ளைக்கு மிகவும் பழக்கமான ஸ்கூலில் வேலை செய்யும்படி அழைத்து, "சர்டிபிகேட்' கேட்டனர். நம் கதாநாயகி, "திருதிரு'வென விழித்தாள்.
இப்படியாக உண்மைகள் வெளிவர, திடுக்கிட்டனர் மாப்பிள்ளை வீட்டார்.
படிப்பு விஷயத்திலேயே இவ்வளவு அப்பட்டமாக பொய் சொன்னவர்கள், மற்ற விஷயத்திலும் என்ன சொல்லியிருக்க மாட்டார்கள். அப்படியானால், ஊரார் சொன்னதும் உண்மையாக இருக்குமோ என எண்ணி, பெண்ணின் நகைகளை எடுத்து வரக் கூறினர். ஐம்பது சவரன் நகையும் போலி என தெரிந்ததும், பெண்ணை அடித்தே விரட்டி விட்டனர். அவமானம் தாங்க முடியாமல், வீட்டை காலி செய்து, பக்கத்து ஊருக்கு சென்றது நம் கதாநாயகியின் குடும்பம்.
அப்பவாவது திருந்தி இருக்கலாம்! இரண்டாவது பெண்ணை, பணக்கார தேங்காய் மண்டிக்காரர்கள் கேட்டனர்; இவர்களும், "எங்கள் நிலமை இதுதான்...' என்று சொல்லி இருக்கலாம். உண்மையை மறைத்து, அவர்களிடமும், ஐம்பது சவரன் நகை, பணம், படிப்பு எல்லாம் பேசப்பட்டது. புதிய ஊரில் இவர்களைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாததால், திருமணம் தடபுடலாக நடந்தது.
நாட்கள் சென்றன; உண்மை ஒரு நாள் வெளிப்பட்டுத்தானே ஆக வேண்டும். உண்மை தெரிந்து ஏக ரகளை. பெண்ணுக்குப் போட்ட, ஐம்பது சவரன் நகைகளும், "கவரிங்' என்றதும், மாப்பிள்ளை வீட்டார் ருத்ர தாண்டவம் ஆடினர். பெண் வீட்டாரை அழைத்து பஞ்சாயத்து செய்தனர்.
அப்போதுதான், இன்னொரு உண்மையும் தெரிந்தது... இவர்களது அக்கா வாழாவெட்டியாக வீட்டில் இருப்பதும், இதே நகை பிரச்னையால் தான் என்பதும்.
"இவ்வளவு மோசமான குடும்பமா? இதிலேயே இப்படி ஏமாற்றின நீங்க, இன்னும் எத்தனை விஷயத்தில் ஏமாற்றுவீங்க...' என்று சொல்லி, பெண்ணையும் வீட்டுக்கே அனுப்பி வைத்தனர். இன்று, இரண்டு பெண்களும் வாழாவெட்டியாக, வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் விசேஷம் என்னவென்றால், வாழ்ந்து கெட்ட இந்த குடும்பத்தினர் மீது பரிதாபப்பட்ட உறவினர்களில் சிலர், "இந்தப் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுங்க... உங்களால் முடிந்ததை செய்யுங்க... திருமணம் கூட நாங்களே செய்து கொள்கிறோம்...' என, இரு பெண்களின் திருமணத்திற்கு, முன்பே சம்பந்தம் பேசினர்.
அவர்கள் எல்லாம் நடுத்தர குடும்பத்தினர் என்பதால், இவர்களுக்கு மனதில்லை.
"நல்ல வசதியான மாப்பிள்ளைகள் தலையில், ஆயிரம் பொய்யைச் சொல்லி கட்டி விடுவோம். திருமணம் நடந்த பிறகு, குழந்தை, குட்டிகள் வந்து விடும். அதன் பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வர்...' என நினைத்து, பேராசைப்பட்ட பெற்றோரால், நம் கதாநாயகிகள் இருவரும், வாழ்க்கையை இழந்து, வெளியே தலைகாட்ட முடியாமல் நொந்து போய், வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கின்றனர்.
இது தேவையா... பேராசைக்கும் ஒரு அளவில்லையா பெற்றோரே... "பணம்... பணம்' என ஆசைபட்டு, உங்கள் செல்ல மகள்களின் வாழ்க்கையை நீங்களே சூறையாடலாமா?
— தொடரும்.

ஜெபராணி ஐசக்
 

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails