Monday, July 11, 2011

வெட்கமே இல்லாமல் பெட்ரூமுக்கு கூப்பிடுவது, ..........

பட்டாம்பூச்சிகளின் கதை (2)
image.png
ஹாய் வாசகர்களே...
"பட்டாம்பூச்சி'க்கு இத்தனை, "ரெஸ்பான்ஸ்' இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாரம், எங்கள் ஊர்க்காரி மாதங்கி - பெயர் மாற்றியுள்ளேன்; அவளைப் பற்றி சொல்லப் போறேன்...

இவள், பெற்றோருக்கு ஒரே பெண். அதனால், இவள் நினைத்ததெல்லாம் பெற்றோர் செய்து கொடுப்பர் என்றுதானே நினைக்கிறீங்க... அதுதான் இல்லை. தாயார் சரியான கஞ்சம்; பணத்தை சேர்த்து, சேர்த்து தங்கமாக்கினாள்.
என்ன செய்வது? எங்கள் மாவட்டத்து பெண்களுக்கு நிறைய பணம், நகைகள் வரதட்சணையாக கொடுக்க வேண்டும். நடுத்தர குடும்பம்தான் மாதங்கியுடையது; வீட்டில், அவள் அம்மா வைத்ததுதான் சட்டம். ஐம்பது சவரன் என்றால், சாதாரண மாப்பிள்ளை; 70 - 100 சவரன் என்றால் தான் பணக்கார மாப்பிள்ளை கிடைக்கும். மகளை, பெரிய கோடீஸ்வரனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, காசு சேர்க்க ஆரம்பித்தாள் அம்மாக்காரி.
வாழ்க்கையில் சுடிதார் போட்டதே கிடையாது மாதங்கி. காரணம், ரெடிமேடு டிரெஸ் விலை அதிகம் என்பது தான். மாதங்கிக்கு, தீபாவளிக்கு மட்டும் ஒரு டிரெஸ் எடுப்பார்; அதுவும் சாதாரண டிரெஸ் தான்.
மாதங்கியின் அம்மா, முழு, நூறு ரூபாய் நோட்டு கையில் கிடைத்தால் மாற்றவே மாட்டாள்; மாற்றினால், செலவாகி விடும் என்ற பயம். யார் வீட்டில் இருந்து பத்திரிகை வைத்தாலும், "கிப்ட்' கொடுக்கணுமே என்பதற்காக, முக்கிய உறவினர்கள் தவிர, யார் வீட்டு கல்யாணத்திற்கும் போக மாட்டாள்.
வீட்டு வேலை எல்லாம் இருவருமே செய்வர். வீட்டில் விளையும் காய்களை வைத்தே ஓட்டி விடுவர். ஒரு முட்டையை சமைத்து, மூன்று பேரும் பார்த்துக் கொண்டே சாப்பிடுவர். இப்படி சேர்த்த காசுகள் அனைத்துமே சவரன்களாகின.
அத்தை மகன் ஒருவன், மாதங்கியை மிகவும் விரும்பினான்; ராணி மாதிரி வைத்துக் கொள்ள ஆசைப்பட்டான். ஆனால், அம்மாக்காரிக்கு, புருஷன் வீட்டு ஆட்களை பிடிக்கவே பிடிக்காது.
"ஆ... உனக்கெல்லாம் என் பெண்ணை கொடுப்பேனா... நல்ல பணக்காரனுக்குத்தான் கொடுப்பேன்...' என்பாள் தாயார். அவள் ஆசைப்பட்டது போலவே பணக்கார இடம் வந்தது. மாமியார், மெத்த படித்த கோடீஸ்வரி; நான்கு பங்களாக்கள் உண்டு!
மகிழ்ச்சியுடன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தனர். மாப்பிள்ளை வீடு, இவர்கள் வசதிக்கு ஏணி வைத்தாலும் எட்டாது. உறவினர் கூட்டம், மாதங்கிக்கு அடித்த அதிர்ஷ்டத்தை கண்டு வாயில் விரலை வைத்தது. அழகிய பங்களாவில் காலடி எடுத்து வைத்தாள் மாதங்கி. கூடவே, தாயாரின் துர்போதனைகளும் அவள் இதயத்தை ஆட்கொண்டன.
"மகளே... நீ போகிற வீடு பணக்கார வீடு. நீ பணத்தை பார்க்காதவள் என்று கேவலமாக நினைத்துக் கொள்ளப் போகின்றனர். எனவே, ராணி மாதிரி நடந்துக்கோ. வீட்டு வேலைகளைச் செய்யாதே. மாமனார், மாமியார், நாத்தனார் எல்லாருமே பொல்லாதவர்களாக தான் இருப்பர். உங்கப்பா எப்படி என் பேச்சை கேட்கிறாரோ, அப்படியே மாப்பிள்ளையும் உன் பேச்சை கேட்கும்படி அடிமையாக்கு...' என, தூபம் போட்டாள்.
புகுந்த வீட்டில், 9:00 மணிக்கு எழுந்து, ஹாலுக்கு வந்து, கால், மேல் கால் போட்டு அமர்த்தலாக உட்கார்ந்து, "டிவி' பார்த்தாள் மாதங்கி.
இவ்வளவு நாட்களும் வேலைக்காரி கையால் காபி குடித்தோம். இனியாவது, மருமகள் கையால் குடிப்போம் என நினைத்த மாமனாருக்கு அதிர்ச்சி. "அம்மா மாதங்கி... உன் கையால் காபி கொடும்மா!' என்றார் மாமனார்.
"நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா, உங்களுக்கெல்லாம் காபி கொடுப்பதற்கு? நான் ராணி மாதிரி வளர்ந்தவள்...' என்றாள் மாதங்கி.
எப்பவும் மாடியை விட்டு இறங்க மாட்டாள்; கிச்சன் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டாள். சமையல்காரி தான் சமைக்கணும். ராணி மாதிரி வந்து சாப்பிடுவதோடு, "இது குறை... இது நொள்ளை, நொட்டை!' என, சமையலைக் குறை சொல்வாள்.
இதே மாதங்கி, தன் தாய் வீட்டில், "லோ லோ'ன்னு சமையல் செய்வாள். அம்மா பேச்சைக் கேட்டதால் வந்த வினை. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மாமியார், மாமனார், கணவனை நோகடித்திருக்கிறாள்.
கணவரை சும்மா நச்சரிப்பது, "அங்க என்ன பேச்சு... உங்க அம்மாகிட்ட என்ன பேசினீங்க. இப்படி கையை ஆட்டினீங்களே, அதன் அர்த்தம் என்ன? உங்கப்பா கூட கார்டனில் நின்று என்ன பேசினீங்க... எங்க போனீங்க?' என, "டார்ச்சர்' செய்வாள். மகனிடம், மாமனார் - மாமியார், ஏதாவது தூபம் போட்டு விடுவரோ என்ற பயம் தான்.
"நமக்கிருக்கும் பணத்துக்கு, இன்னும் பணக்காரி மருமகளாக வந்தால், வீட்டை கவனிக்க மாட்டாள். எனவே, நடுத்தர குடும்பத்து பெண்ணை எடுத்தால், அவள் நம்மையும் கவனிப்பாள்; புருஷனுக்கும் அடங்கி நடப்பாள்; குடும்ப கவுரவத்தை கட்டி காப்பாள்...' என நினைத்துதான், மாதங்கியை தேர்ந்தெடுத்தனர். ஆனால், அவர்களது கனவு சரிந்ததும், வெறுத்துப் போயினர் மாப்பிள்ளை வீட்டார்.
புகுந்த வீட்டினருக்கு, இவர்கள் வீட்டு வசதி நன்கு தெரியும். இருந்தும், இவளது அதிகப்படியான திமிர்தனம், மாமியாரை எரிச்சல் படுத்தியது. கணவனை அடக்கி ஆள நினைத்தாள் மாதங்கி. அவனோ, கோடிகளில் புரள்பவன். "போடீ...' என்றான். விளைவு... மூன்று மாதத்திலேயே பிறந்த வீட்டிற்கு வந்தாள்.
அம்மாக்காரி என்ன செய்திருக்க வேண்டும்... மகளுக்கு நல்ல வார்த்தை கூறி, கணவன் வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும்; ஆனால், இவள்தானே இதற்கெல்லாம் காரணம்!
"வாடீ என் செல்லமே... அவர்களுக்கென்ன இவ்ளோ திமிர்... நீ நம்ப வீட்லயே இரு...' என்றாள்.
"மாப்பிள்ளை நம் வீட்டோடு வந்து விடுவார்...' என்று நினைத்தாள். இப்படியே ஒருவருக்கொருவர், "ஈகோ' பிரச்னை பெரிதாகியது. அப்புறம் என்ன... டைவர்ஸ் தான்.
இன்று, வேறு திருமணம் செய்து, "ஜாம் ஜாம்' என இருக்கிறான் அவளது மாஜி கணவன்.
மாதங்கியின் தாயார், "நாங்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா...' என்று, ஒரு மாப்பிள்ளை பார்த்து மறுமணம் செய்து வைத்தாள். இன்று, அந்த இரண்டாவது கணவனோ , மாதங்கியை, "ஏய் எச்ச நாயே... உன் முதல் புருஷன் உன்னை எப்படி தொடுவான்...' என்பது போன்ற, காது கூசும் அளவிற்கு பேசி கொடுமைப் படுத்துகிறான்.
புகுந்த வீட்டில், மச்சினன், மாமியார் யார் இருந்தாலும், வெட்கமே இல்லாமல் பெட்ரூமுக்கு கூப்பிடுவது, வர மறுத்தால், "எச்ச நாய்க்கு வெட்கம் என்னடி வேண்டி கிடக்கு... நீ என்ன பத்தினியா... வாடீ...' என, கேவலமாக பேசுவதுமாக இருக்கிறான்.
மாதங்கி உண்மையிலேயே நல்ல பெண். தனக்கு கிடைத்த மகாராணி போன்ற வாழ்க்கையை, அம்மா பேச்சை கேட்டு கெடுத்துக் கொண்டதை எண்ணி, தினமும் கண்ணீர் வடிக்கிறாள். தன் ஒரே மகளின் வாழ்க்கையை பாழாக்கி விட்டோமே என்ற வருத்தத்தில், படுத்த படுக்கையாகி விட்டாள் மாதங்கியின் அம்மா.
பெண்ணை பெற்ற தாய்மார்களே... நீங்கள் உங்கள் செல்ல மகள்களுக்கு நல்ல அறிவுரை கொடுங்க அல்லது உங்க திருவாயை மூடிக் கொண்டிருப்பதே சாலச் சிறந்தது! 
— தொடரும்.

- ஜெபராணி ஐசக்
 

source:dinamalar
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails