Thursday, July 28, 2011

இளம் பெண்களே... "லவ்' பண்ணாதீங்க...

பட்டாம்பூச்சிகளின் கதை! (6)ஹாய்... ஹாய் ரீடர்ஸ்...
"பட்டாம்பூச்சிகளின் கதை படித்ததும், இதயமே கனத்துப் போகிறது. ஒரு வேதனையுடன், "வாரமலர்' இதழை கீழே வைக்க வேண்டியிருக்கிறது. எங்களது, "செல்ல' மகள்களின் வாழ்க்கை நன்றாக அமையணுமே என்ற பயம் ஒரு பக்கம் வாட்டுகிறது...' என, அநேக தாய்மார்கள் எழுதியிருந்தீர்கள்.
என்னால் தாங்க முடியாமல் தான், இந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனியும் இப்படிப்பட்ட அவலங்கள் நடக்கக் கூடாது என்பதே என் ஆசை!
இந்த வாரம், சஞ்சனா பற்றிய கதையை சொல்லப் போறேன்...
சஞ்சனாவின் பெற்றோர் மட்டும் சற்று கண்டிப்பு காட்டியிருந்தால், இவளும், இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க மாட்டாள். ம்ஹும்... என்ன செய்வது...
சஞ்சனாவின் பெற்றோர், காதல் திருமணம் செய்தவர்கள். இவள், குட்டி பாப்பாவாக இருக்கும் போதே நல்ல அழகு, அறிவு. ஸ்மார்ட்டாக இருந்ததால், குடும்பமே அவளை தலை மீது வைத்துக் கொண்டாடியது.
செல்லம்... செல்லம்... அப்படி ஒரு செல்லம். டீன் - ஏஜ் பருவத்தில், அல்ட்ரா மாடர்னாக உடை உடுத்தி, ஸ்டைலாக செல்லும் மகளைக் கண்டு, ஏக பெருமை பெற்றோருக்கு. மகள் மீது, கண் மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருந்தனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும் சஞ்சனா, "மம்மி... 8:00 மணிக்கு மேத்ஸ் டியூஷன்...' என்று சொன்னால், "இந்த இரவு நேரத்திலா...' என யோசிக்காமலேயே, அனுப்பி வைப்பாள் அம்மா. மகள் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை; அதற்கு மேல் டாடி.
பத்தாததற்கு, "மகளே... நீ யாரை வேண்டுமானாலும், "லவ்' பண்ணு; பிரச்னையே இல்லை; அப்பா உன், "லவ்'க்கு குறுக்கே நிற்க மாட்டேன்!' என்று சொல்வது.
அதாவது, இவர்களும், "லவ்' மேரேஜ் தானே... வேறு என்ன சொல்ல முடியும். அத்துடன் இப்படிப் பேசுவது, "பேஷன்' என்று நினைத்தனர். இதனால், சஞ்சனாவுக்கு, "லவ்' பண்ணுவதைப் பற்றிய பயமே இல்லை.
அந்த சமயத்தில், மிகவும் ஸ்டைலாக டிரஸ் பண்ணி, பைக்கில் ஸ்பீடாக வந்து, அசத்தலாக தன்னைச் சுற்றி வந்த, ஜான் என்பவன் மீது ஆசை வந்ததில் தப்பில்லை. மாடர்னா டிரஸ் அணிந்து, வளர்ந்த சஞ்சனா, ஜானின், "லவ்'வில் விழுந்தாள்.
ஜானின் பெற்றோருக்கு, மகன் மீது அத்தனை பாசம்; கண்டிப்பு என்பதே இல்லை. 
வீட்டிலேயே அப்பா தண்ணி அடிப்பார். அப்புறம் மகன் எப்படி இருப்பான்? பிளஸ் ஒன் படிக்கும் போதே, தண்ணி, சிகரெட் என, எல்லா பழக்கங்களும் ஜானுக்கும் உண்டு. இதை எல்லாம் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை 
சஞ்சனா. பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என்ன மெச்சூரிட்டி இருக்கும்?
சஞ்சனாவிடம், உயிரையே விடுவது போல் பேசியிருக்கிறான், வழிந்திருக்கிறான் ஜான். அவள் பேச்சுக்கு மறு பேச்சே இல்லை. கனவுலகில் மிதந்தாள் சஞ்சனா.
"சே... என் லவ்வரை போல் ஒருத்தன், இந்த உலகத்திலேயே கிடையாது...' என, மயங்கி கிடந்திருக்கிறாள்.
எட்டு வருடங்கள் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர். விஷயம் தெரிந்ததும், வழக்கம் போல், சஞ்சனா வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு. காரணம், அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன் என்பதே!
தான் நினைத்ததை சாதித்தே பழக்கப்பட்ட சஞ்சனா, "அப்படின்னா, எனக்கு கல்யாணமே வேண்டாம்...' என ரகளை செய்யவும், வேறு வழியின்றி, இருவருக்கும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது.
சஞ்சனாவிற்கு, திருமண வாழ்க்கை, பத்து நாட்கள் நன்றாக இனித்தது. அதன் பிறகுதான், ஜானின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.
வேலை முடிந்து வந்தவுடனே வீட்டில் உட்கார்ந்து தண்ணியடிக்க ஆரம்பிப்பது, பெற்றோரை மிகவும் கேவலமாக, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, இரவு 1:00 மணி வரை, "டிவி' பார்ப்பது... அதுவரையில், சஞ்சனாவும் அவன் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பது, பிறகு தினமும் அவனுடன், "ஒத்துழைக்க' வேண்டும்.
காலை, 8:00 - 9:00 மணியளவில் இவன் தூங்கி எழுந்ததும், சாப்பாடு சரியில்லை... அது சரியில்லை...' என, தட்டைத் தூக்கி அடித்தாலும், அவனது தாயார் ஒரு வார்த்தை கூட பேசாமல், "நீ தான் என் பிள்ளையை திருத்த வேண்டும்...' என, கரித்துக் கொட்டுவாள்.
இனிய காதல் மொழி பேசிய காதலனின் மறுமுகத்தைக் கண்டு, அதிர்ச்சியில் உறைந்தாள் சஞ்சனா.
ஜானை கண்டித்தால் அடி, உதைதான். "குடிப்பது என்னோட சந்தோஷம்... அதில் நீ தலையிடாதே...' என்பான்.
"இந்த நாத்தம் எனக்கு குடலை புரட்டுது... என் கிட்ட வரும் போது குடிச்சிட்டு வராதே...' என்றாள் சஞ்சனா.
"நான் குடிப்பேன் என்பது தெரிஞ்சிதானேடி என்ன கட்டின... இப்ப என்னடி வேஷம் போடுற?' என்பான்.
இதற்கிடையில், சஞ்சனா கருவுற்று, குழந்தையும் பிறந்தது. குழந்தை அழுதால் போதும்... "இந்த சனியனை எங்காவது தூக்கிட்டு போ!' என்பான்.
ஆசையாக ஓடிவரும் குழந்தையை தூக்கி கொஞ்சுவது இல்லை; அதற்கு ஒரு சின்ன உதவி கூட செய்வதில்லை. "சீக்கிரம் அந்த சனியனை தூங்க வச்சிட்டு வா!' என்பான்.
"குழந்தைக்கு உடம்பு சரியில்லைங்க...' என்றால், "மாசத்துல பாதி நாள் உன் குழந்தைக்கு உடம்பு சரியா இருக்காது; மீதி நாள் உனக்கு சரியா இருக்காது. இந்த வீட்ல, எனக்கு என்னதான் சுகம் இருக்கு!' என்று திட்டுவான்.
உடைந்து போனாள் சஞ்சனா. இப்படி ஒரு நரக வாழ்க்கையை அவள் எதிர்பார்க்கவே இல்லை. கணவருடன் வெளியே சென்றால், நன்கு குடித்துவிட்டு கலாட்டா செய்வது, நண்பர்களுடன் பார்ட்டிக்கு அழைத்துச் சென்று, சஞ்சனாவை விட்டுவிட்டு நல்லா தண்ணி அடித்து, வாந்தி எடுத்து, அந்த ஓட்டலையே நாற வைப்பது... குடிபோதையில் காரை ஓட்ட முயற்சிப்பது...
அழுது கொண்டு நிற்கும் குழந்தையையும், சஞ்சனாவையும் பார்த்து பரிதாபப்படும் நண்பர்கள், இவர்களை காரில், வீட்டில் கொண்டு வந்து விட்டால், விடிந்ததும் நண்பர்களோடு, சஞ்சனாவை சம்பந்தப்படுத்தி, பயங்கரமாக இம்சைப்படுத்தி வேடிக்கை பார்ப்பது தான் ஜானின் வேலை.
இந்த சங்கதிகளை தன் பெற்றோரிடம் மறைத்து விட்டாள் சஞ்சனா. தானே தேடிக் கொண்ட வாழ்க்கை, அத்துடன் தன் பெற்றோருக்கு, தங்கள் செல்ல மகளின் வாழ்க்கை இப்படி அழிந்து விட்டது தெரிந்தால், அவர்களால் தாங்கவே முடியாமல், உயிரையே விட்டு விடுவர் என்பதால், துக்கங்களை தோழிகளிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வாள்.
ஆனாலும், தங்களது மகள் இளைத்து, பொலிவிழந்து இருப்பதைக் கண்டு, பெற்றோருக்கு சந்தேகம் தான். இருந்தாலும் அழுத்தக்கார சஞ்சனா வாயை திறப்பதில்லை.
அதுமட்டுமல்ல... இரவில் நெட்டில் ஆபாச படங்கள் பார்ப்பது, ஆபாச சாட்டிங் பண்ணுவது என, அத்தனை அருவருப்புக்களையும் செய்யும் ஜானைப் பற்றி, மாமியாரிடம் கதறுவாள் சஞ்சனா.
மகனை விட்டுக் கொடுக்காத மாமியார், "நீ தான் அவனை திருத்தணும்... அவனுடன், 'அட்ஜஸ் செய்துபோ...' என்பாள்.
பிளஸ் ஒன் படிக்கும் போதே கெட்டுப் போக ஆரம்பித்த செல்ல மகனை கண்டிக்காமல் வளர்த்த பெற்றோர், இன்று சம்பாதிக்கும் மகனை கண்டிக்கவே பயப்படுகின்றனர். இத்தனைக்கும், மகனின் வருமானத்தை நம்பி இவர்கள் இல்லை. சஞ்சனாதான் திருத்தணும் என்றால், எப்படி திருத்துவாள்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும். மகனை செல்லம் கொடுத்து வளர்த்து, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பு காட்டாமல், மனைவி வந்ததும் திருத்துவாள் என்று எப்படி எதிர்பார்க்கின்றனர்...' என்று புலம்புகிறாள் சஞ்சனா.
"இளம் பெண்களே... "லவ்' பண்ணாதீங்க... "லவ்' பண்ணும் போது கெஞ்சி, கொஞ்சி காலில் விழும் இந்த தடியன்கள், திருமணம் ஆகி, காரியம் முடிந்ததும், தங்களது வேலையை காட்ட ஆரம்பித்து விடுவர். பெற்றோர் பார்த்து திருமணம் செய்தால், அவர்கள் வந்து, இவனை கண்டிப்பர். இது, நானே பார்த்தது என்பதால், என் உறவினர்களிடம் சொல்லவும் முடியாமல், எனக்கு ஒரு குழந்தை இருப்பதால், இவனை விட்டு ஓடவும் முடியாமல் தவிக்கிறேன்... ஸ்டேட் பர்ஸ்ட் மார்க் வாங்கின நான், வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்லி, "தடா' போட்டுள்ளான்... எவ்வளவு டேலன்ட் இருந்தும் என்ன பயன்? என்னோட வாழ்க்கையை பாழாய் போன இந்த, "லவ்' என்ற பெயரால் அழித்துக் கொண்டேன்...' என்று புலம்புகிறாள் சஞ்சனா.
இளம் பெண்களே... "லவ்' பண்ணாதீங்க... பெற்றோரே... உங்கள் பிள்ளைகளுக்கு ஓவர் சுதந்திரம் கொடுத்து, "நீ யாரை, "லவ்' பண்ணினாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்!' என்று, அவர்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்; கொஞ்சமாவது கண்டிப்பு காட்டுங்க.
ஆண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களே... அவர்களையும் கண்டித்து வளங்க. "எம்புள்ள ஆண் சிங்கம்...' என்று நினைத்து, மார்தட்டி வளர்த்தால், பின்னாளில் நீங்கள் தலைக்குனிந்து நிற்கும்படி உங்கள் மண்டையில் தட்டுவர்... ஜாக்கிரதை!
— தொடரும்.

- ஜெபராணி ஐசக்!
 

source:dinamalar






No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails