Sunday, July 24, 2011

வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி

இலங்கை: வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி 


கொழும்பு, ஜூலை.24: இலங்கை தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வடக்குப் பகுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி உள்ளது.

யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகளுக்கும் 13 பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவில் ஒரு பிரதேச சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி இமெல்டா சுகுமார் அறிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்று அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றது.

வன்னியில் சுமார் 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. படையினரின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் ஆகிய பல முறைப்பாடுகள் பதிவாகி இருந்த நிலையிலும் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது பெரும் ஆதரவையும் வழங்கி உள்ளனர்.

அரச தரப்பினரின் சட்டவிரோத செயல்பாடுகள், கடும் அச்சுறுத்தல்கள், அராஜகங்களின் மத்தியில் வடக்கில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகிறது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து இன்று கிடைத்த தகவலின் படி வடக்கில் 18 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி நெடுந்தீவு பிரதேச சபை தவிர்த்த ஏனையவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகின.

source:dinamani
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails