Saturday, July 9, 2011

இளைஞர் பட்டாளமே, "ஜொள்' விட்டுத் திரியும் ராஷ்மி

பட்டாம்பூச்சிகளின் கதை (1)

சில வாரங்களுக்கு முன், வார இதழ் ஒன்றில், சிறுகதை படித்தேன். கதாநாயகி, தன் கணவன் மீது உயிரையே வைத்திருக்கிறாள்; அவனுக்காகவே வாழ்கிறாள். அப்படியிருந்தும், நாயகன் இன்னொருத்தியின் மீது ஆசை கொண்டு, அவளையும், "வைத்து'க் கொள்ள அனுமதி கேட்கிறான். நாயகியோ, தான் விலகி விடுவதாக சொல்கிறாள். கடைசியில் நாயகன், தன் காதலியால் ஏமாற்றப்பட்டு, மனைவியிடம் சரணடைகிறான்; அவளோ, இவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.
இந்தக் கதை என் உள்ளத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது; காரணம், நான் ஒரு ராட்சஷி. என் கணவர் மட்டும் இப்படிச் செய்தால், குழவிக் கல்லை தலையில் போட்டு கொன்று இருப்பேன்.
உண்மைச் சம்பவங்கள் தான் கதைகளாக உருவாகின்றன. நான் ஒரு இளம் தாய். நான் சந்தித்த இளம் தாய்மார்களின் வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்து கொள்வது, பல பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
தொடர்ந்து சில வாரங்கள் எழுதப் போகிறேன்... திருமணமாகாத பெண்கள், இளம் தாய்மார், வளர்ந்த பிள்ளைகளுடைய அன்னையர், முதிர் கன்னியர், இளவயதில் கணவரை இழந்தோர் என, சமூகத்தின் அனைத்து மட்டங்களில் உள்ள பெண்களும் படித்து கருத்துக்களை எழுதுங்கள்...
உங்களது கதையை பகிர்ந்து கொள்வதென்றாலும், என் பெயரிட்டு, வாரமலர் இதழுக்கு அனுப்புங்கள்.
- என்றென்றும் உங்களுடன்,
ஜெபராணி ஐசக்.

என் தோழியின் பெயர் ராஷ்மி; அவள் பெயரை மாற்றியுள்ளேன். கிராமத்தில், வசதியான குடும்பத்தில் பிறந்தவள். நிறம், உடற்கட்டு, உயரம் என, எதிலும் குறைவில்லை.
கிராமத்திலேயே, "மாடர்னா டிரெஸ்' பண்ணுவாள். இரு சக்கர வாகனத்தில் அவள் கல்லூரிக்கு செல்லும் போது, இளைஞர் பட்டாளமே, "ஜொள்' விட்டுத் திரியும். ராஷ்மியை, "மடக்கு'வதில் நடந்த போட்டியில், நண்பர்களாக இருந்த பலர் எதிரிகளாயினர்.
"ஏய் ராஷ்... நம்ப மாணவர் யூனியன் சேர்மன் உன்னை பிடித்தே தீருவேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறான் டீ...' - தோழி.
"அவன் கிடக்கிறான் கருங்குரங்கு... என்னோட கற்பனையே வேறு. நல்ல கலரா, சல்மான், ஷாருக் ரேஞ்சில இருக்கணும்...' இப்படிச் சொல்வாளே தவிர, யாரையும், "லவ்' பண்ணவில்லை. இளைஞர் கூட்டமே இவள் பின்னால் அலைவதில் ஏக பெருமை அவளுக்கு!
"என்ன இப்படி... நடிகை மாதிரி பொண்ண வளக்குற... பேன்ட், டீ - ஷர்ட், ஸ்கர்ட் போட்டுக்கிட்டு திரியிறா உம் மக... கொஞ்சமாவது அடக்கம் வேணாமா... இவ போயி ஒரு இடத்துல குப்ப கொட்ட வேணாம்!' என்ற உறவினர்களின் வசை பாடல்களை பெற்றோர் கண்டு கொள்ளவில்லை.
"அழகு ராணியாக, மாடர்ன் மங்கையாக வலம் வரும் மகள், படிப்பு, விளையாட்டு, நடனம், ஓவியம் என்று, எல்லாவற்றிலும் பிச்சு உதறுகிறாள். எதற்காக அவளை கண்டிக்கணும். என்ன... நம்ம பொண்ணுக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி... வீட்டு வேலைகள் எதுவுமே கத்துக்க மாட்டேங்கறா... எடுத்தெறிஞ்சி பேசுறா... இது, அழகா இருக்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கும் குணம்தானே விடு... எல்லாருக்கும் நம்ப பொண்ண கண்டு பொறாமை...' என்பார் தகப்பனார்.
"பொண்ணுக்கு ஏத்த மாதிரி ராஜகுமாரன் வேணுமே!' என, தேடி, தேடி பிடித்தனர் ஒரு மாப்பிள்ளையை. அழகான, சிவப்பு நிறத்தில், சுருள் சுருள் முடியுடன், இந்தி கதாநாயகன் போல், செல்வ செழிப்புடன் உள்ள ஒரு பிள்ளையை சென்னையில் கண்டதும், தெய்வ அனுக்கிரகம் என்று மகிழ்ந்தனர் பெற்றோர்.
"சென்னையிலுள்ள பெரும்பாலான இளம் பெண்களின் நடவடிக்கைகள் சரியில்லை; கிராமத்து பெண் தான் வேண்டும்!' என, நினைத்த அபிஷேக் - இவரது பெயரையும் மாற்றியுள்ளேன்; பார்த்தவுடன் ராஷ்மியின் அழகில் மயங்கினான். தடபுடலாக நடந்த நிச்சயதார்த்த விழா, கிராமத்தையே அதிர வைத்தது. காக்ரா சோளியில், மணப்பெண் ராஷ்மி ஒரு கலக்கு கலக்கினாள்; திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது. இடைப்பட்ட நாட்களில், அபிஷேக் வருவதும், ராஷ்மியை வெளியே அழைத்துக் செல்வதும், மொபைல் போனில், "கடலை' போடுவதுமாக இருந்தான்.
"ஆகா... நான் மிகவும் கொடுத்து வைத்தவள்; சாமி எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்துட்டார்... என் கனவு பலித்தது!' என மகிழ்ந்தாள் ராஷ்மி. 
உலகத்துக்கு பொறுக்குமா... 
யாரோ ஒரு விஷமி, இவளை ஒருதலையாக காதலித்து ஏமாந்து போனவன், அபிஷேக்குடன் தொடர்பு கொண்டு, " ராஷ்மி, நிறைய பேருடன் சுத்தினாள்... மிகவும் கெட்டவள்... நடத்தை சரியில்லை!' என்று, "பற்ற' வைத்து விட்டான்... அவ்ளோதான்!
நிலைகுலைந்து போன அபிஷேக், "மோசமான உன்னை என்னால் மணக்க முடியாது; திருமணத்தை நிறுத்துங்கள்!' என்று கத்தினான். அதிர்ச்சியடைந்த ராஷ்மி, கெஞ்சி, கதறி அழுதிருக்கிறாள்; சமாதானம் அடையவில்லை அபிஷேக். இரண்டு, மூன்று பேர் இப்படி போன் செய்யவும், மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. ஆனாலும், பணக்கார மாப்பிள்ளையை இழக்க மனதில்லாத பெற்றோரும், ராஷ்மியும், அவன் கால்களில் விழுந்து அழுதனர். தப்பே செய்யாத ராஷ்மி, "நான் தப்பு செய்து விட்டேன்... என்னை மன்னிச்சிடுங்க!' என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறான் அபிஷேக்.
திருமண வரவேற்பும், சினிமா பட ரேஞ்சுக்கு, தடபுடலாக சென்னையில் நடத்தியிருக்கிறான் அபிஷேக்.
"இவளுக்கு வந்த வாழ்வை பாரு!' என, உற்றார், நண்பர்கள் வெந்து மடிந்தனர்.
ஆரம்பித்தது திருமண வாழ்க்கை —
முதலிரவில் இருந்தே, சந்தேகப் பேய் அபிஷேக்கை ஆட்டிப் படைத்தது. "நீ சுத்தமானவள் இல்லை... நீ ஏற்கனவே கெட்டுப் போனவள்!' என்றான் அபிஷேக்.
"இல்லைங்க... நான் ஒரு நீச்சல் வீராங்கனை; அதனால்தான் அப்படி இருக்கு. "ஸ்போர்ட்ஸ்'சில் ஈடுபடும் பெண்களுக்கு எல்லாம், "அப்படி' ஆவது இயற்கை தான்!' என்றாள் ராஷ்மி.
தினம் தினம் சண்டை; சந்தேகம். டிரைவர், காய்கறிக்காரன் முதல், ராஷ்மியை தொடர்புபடுத்தி சந்தேகம். மனைவி நின்றால், உட்கார்ந்தால், சிரித்தால் கூட சந்தேகம். இவை அனைத்தையும் தாங்கியபடி ராஷ்மி வாழ்கிறாள். விவாகரத்து செய்தால், பெற்றோர் தாங்க மாட்டார்கள்.
கர்ப்பமான ராஷ்மி, "கடவுளே... என் குழந்தையை அவரோட ஜாடையில் கொடுத்து விடு... இல்லையென்றால், எனக்கு வாழ்க்கையே இல்லை!' என்று கதறி அழுது, ஆண் குழந்தை பிறந்தது.
அபிஷேக் மாதிரி இருந்தும், அவனால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. "இது, என் குழந்தை இல்லை...' என்று, காதால் கேட்க முடியாத சொற்களில் அர்ச்சனை செய்தான்; அடுத்தும் கர்ப்பமானாள். நாட்களை எண்ணிப் பார்த்து, "இதுவும் என் குழந்தை இல்லை... இதோட அப்பா யாரு?' என்று, தினம், தினம் அடி, உதை, சண்டை.
ஆனால், பெண் குழந்தையோ, தேவதை போன்று, அவ்வளவு அழகு. குழந்தைகளுக்காக, இந்த சித்ரவதைகளை சுமந்து, பட்டாம் பூச்சியாய் திரிந்த ராஷ்மி, இன்று ஒரே, "அழுவாச்சியா' இருக்கிறாள்.
சில தினங்களில், "ஏய்... இன்று நம் வீட்டில் பார்ட்டி... கையில்லாத சோளி, விலை உயர்ந்த சேலை கட்டிக்கோ... பார்லர் போய், தலைமுடி, புருவங்களை அழகு பண்ணிக்கோ!' என்பான் அபிஷேக்.
பார்ட்டி முடியும்; இரவு வரும். "ஏய் கச்சடா... உன்ன கல்யாணம் பண்ணி என் லைப்பே போச்சுடீ... கிராமத்து நாயே... பிச்சக்காரி... என்னடீ இங்கிலீஷ் பேசுற... உன்னோட உச்சரிப்பு சரியில்லை... சிட்டி பொண்ணுங்க மாதிரி நடந்துக்க தெரியல... என்னோட நண்பர்கள்ட்ட உன்ன அறிமுகம் செய்யவே அவமானமா இருக்கு! என் நண்பர்களை காமப் பார்வை பார்த்து, ஜொள்விட்டயேடீ... நீ திருந்தவே மாட்ட... உன்ன விவாகரத்து பண்றேன்... நீ ஓடிப் போ!' என, இதுபோன்று, இரவு முழுவதும் ஒரே கொடுமை தான்.
இது, அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சியாகி விட்டது, ராஷ்மியின் வாழ்வில்! 
"நான், எல்லாவற்றையும் தாங்கிப் போவதால், உன்னை மன்னிச்சி ஏத்துகிட்டு இருக்கிறேன். வேறு ஆளாக இருந்தால், உன்னை வெட்டிடுவான்...' - இப்படி தினமும், "டார்சர்' கொடுப்பான் அபிஷேக்.
இவ்வளவையும் தாங்கியபடி, அரண்மனை வீட்டில் இருந்து, தேவதை போன்ற குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அழுதபடியே ஸ்கூலுக்கு வருவாள்.
"என் குழந்தைகளுக்காக, இந்த அவமானங்களை தாங்கிக்கிறேன். வசதி குறைவாக இருந்தாலும், தெருவில் போகும் அன்பான ஜோடிகளை பார்க்க ஆசையா இருக்கு... என் பின்னால் அலைந்தவர்கள் எத்தனை பேர்... இன்று நான் அனுபவிக்கும் அவமானம் எத்தனை!' என, வாழ்ந்தும், வாழாவெட்டியாக உள்ள என் தோழி, நொந்து நூலாகிக் கிடக்கிறாள்.
பெற்றோரே... கணவனாக வரப் போகிறவனுக்கு, இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டால், குடும்ப கவுரவம், கல்யாணம் நடக்கும் முன் ஏற்பட்டுவிட்ட செலவுகள், பணக்கார வரன் என்றெல்லாம் எண்ணி, பெண்ணின் வாழ்வை பாழடித்து விடாதீர்.
"இந்தக் கல்யாணம் வேண்டாம்!' என்று அபிஷேக் எவ்வளவோ சொல்லியும், ராஷ்மியின் பெற்றோர், குடும்ப கவுரவம் கருதி, பிடிவாதமாக, கட்டிக் கொடுத்ததால், அவள் மீது தவறு இல்லாவிட்டாலும், அவன் சந்தேகப்படுகிறான். இதனால், அபிஷேக் - ராஷ்மி இருவரின் பெற்றோருக்கு மட்டுமல்ல, யாருக்குமே நிம்மதி இல்லை.
இந்த சந்தேகம், சண்டைகள், பிள்ளைகள் வளர்ந்தும், அவர்கள் மனதிலும் தாயை பற்றிய நல்ல எண்ணத்தை கொடுக்காது; அவர்கள் ராஷ்மியை மதிக்கவே மாட்டார்கள்.
வேண்டாமே இதுபோன்ற விபரீதக் கல்யாணம். 
— தொடரும்.
ஜெபராணி ஐசக்

source :dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails