Thursday, July 7, 2011

சிக்க வைத்த சி.பி.ஐ., சிங்கிரி அடிக்கும் தயாநிதி

image.png


புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு விவகாரத்தில், தயாநிதிக்கும் பங்கு உள்ளது என, சி.பி.ஐ., அம்பலப்படுத்தியுள்ளது. "2004ம் ஆண்டு, தயாநிதி, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனபங்குகளை மலேசியநிறுவனத்திற்கு விற்க, அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கான அடிப்படைமுகாந்திரம் உள்ளது' என, சி.பி.ஐ., நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த விரிவானஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரையில் நடந்துள்ள விசாரணை விவரங்கள் அடங்கிய 71 பக்கங்கள்கொண்ட அறிக்கையை, சி.பி.ஐ., நேற்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது.இந்த வழக்கு விசாரணையை கண்காணித்துவரும் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்' முன், சி.பி.ஐ., மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அந்த அறிக்கையை அளித்தார்.


அதில் அவர் கூறியிருந்ததாவது:கடந்த 2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது.ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன. உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன.ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது.


இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.அந்த நெருக்கடியின் விளைவாக, சிவசங்கரன், ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், அதாவது 2006, மார்ச் மாதத்திற்கு பின்தான், ஏர்செல் நிறுவனத்திற்கான உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின. இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.


மேக்சிஸ் நிறுவனத்திற்கான, "இன்டென்ட்' 2006 நவம்பரில் அளிக்கப்பட்டு, டிசம்பரில் உரிமம் வழங்கப்பட்டு விட்டது. இந்த பரிமாற்றத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அதேநேரம், சிங்கப்பூர் வங்கி மூலம், நடந்த இறுதிக் கட்ட பணப் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரித்து வருகிறது. வரும் 13ம் தேதி அந்த வங்கி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சி.பி.ஐ., தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், தயாநிதி,முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, சி.பி.ஐ.,க்கு அளித்த விளக்கத்தில் ," தயாநிதி , தனது அண்ணன் கலாநிதி நிறுவனத்திற்கு சாதகமாக, ஏர்செல் நிறுவனத்தை குறிவைத்தார்' என்று தெரிவித்துள்ளார். இவ்வழக்கை, வரும் 11ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.


* ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் கைப்பற்றியது.
* இதற்காக, ஏர்செல் நிறுவன தலைவர் சிவசங்கரனை தயாநிதி மாறன் மிரட்டினார் என்பது குற்றச்சாட்டு.
* ஏர்செல் நிறுவனம் கைமாறியதும், சன் குழுமம் நடத்தும் "சன் டி.டி.எச்' நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் 600 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
* "2ஜி' ஊழல் விசாரணையை, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடித்துக்கொள்வதாக சி.பி.ஐ., தரப்பில் மூத்த வக்கீல் வேணுகோபால், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.
* கடந்த 2001 முதல் 2008 வரையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடிகள் பற்றிய விசாரணை, செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிந்து விடும் என்றும் தெரிவித்தார்


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails