இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 5
முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை, அழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நண்பர்கள், அதன்படியே தான் குரான் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குரானை மனப்பாடமாக தெரிந்திருந்தவர்களின் மனதில் குரான் பாதுகாக்கப்பட்டது தான் முதன்மையானது. எழுத்து வடிவில் பாதுகாப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே குரானின் பாதுகாப்பில் பிரச்சனை ஒன்றுமில்லை என நிலைப்படுகிறார்கள். ஆனால் முகம்மது அப்படி நினைத்திருக்க முடியாது. அப்படி நினைத்திருந்தால் எழுத்துவடிவில் அன்றிருந்த வசதிகளின் படி மரப்பட்டைகளிலும், தோல்களிலும் எழுதி பாதுகாத்துவைக்குமாறு ஒரு குழுவை நியமித்து பணித்திருக்கத்தேவையில்லை, ஏனென்றால் அல்லாவே குரானை பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அறிவித்துக்கொண்டுள்ளான். அப்படி இருக்கும்போது தொழுகையின்போது ஓதுவதை கட்டாயமாக்கி மனப்பாடமாகவும், எழுதிவைத்து திட ஆதாரமாகவும் பாதுகாக்கும் தேவை முகம்மதுக்கு இல்லை. ஆகவே முதன்மையானது இரண்டாம்பட்சமானது எனும் பேதமின்றி குரானை பாதுகாக்கும் தெரிவுதான் முகம்மதுவிடம் இருந்திருக்கும். ஆனால் அவரின் மரணத்திற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே வரிசைப்படி இல்லை எனக்கூறி அது அழிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? என்பது தான் மையமான கேள்வி. அதுவும் உலகில் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனிதன் பிறந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முகம்மது தான் அழகிய முன்மாதிரி என்று அறிவிக்கப்பட்டு, அவர் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் இன்றுவரை பாதுகாத்துவைத்திருக்கும் நிலையில் குரான் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை இணைத்துப்பார்க்கவேண்டும்.
அபூபக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட குரான் உமரின் காலத்திற்குப்பின் உஸ்மானிடம் வரவில்லை என்றால் அதற்க்கு, அபூபக்கர் தனக்குப்பின் உமரைத்தேர்ந்தெடுத்ததுபோல் உமர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனவே தான் அந்த குரான் உஸ்மானிடம் கொடுக்கப்படவில்லை என்று எண்ணுகிறார்கள். உமர் தனக்குப்பின் ஆட்சிசெலுத்த யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது மெய்தான். அவர் ஒரு குழுவை அமைத்து யாரை நியமிப்பது என்பதை அந்தக்குழு முடிவு செய்யும் என விட்டுவிட்டார், அந்தக்குழுவில் தன் மகனை உறுப்பினராக்குவதற்கும் கூட மறுத்துவிட்டார். ஆனால் குரானை அந்தக்குழுவிடம் ஒப்படைத்து அடுத்துவருபவரிடம் ஒப்படைக்குமாறு பணித்திருக்க முடியும் அவ்வாறன்றி தன் மகளிடம் கொடுக்கும் அவசியமென்ன? இதை அவர் தன்னிடம் வைத்திருந்த குரானை தன் மகளிடம் கொடுத்தார் என புரிந்துகொள்ளமுடியாது. ஏனென்றால் அன்றிருந்த நிலையில் அரசியல் முதல் சமூகம் வரையான அனைத்திற்கும் வழிகாட்டியான குரான் அதுமட்டும்தான் மற்றப்படி மனப்பாடமாய் தெரிந்து வைத்திருந்தவர்கள்தான். அவர்களும் தொடர்ச்சியான போர்களினால் குறைந்துபோய் சிலரே எஞ்சியிருந்த நிலையில், ஒரே ஆவணமான குரானை முகம்மதின் மனைவி என்றாலும்கூட தன்மகளிடம் கொடுக்கும் தேவை என்ன? என்பதுதான் கேள்வி.
இப்படி குரானை உஸ்மானுக்கு முன் உஸ்மானுக்கு பின் என்று பிரித்து குரானின் பாதுகாப்பில் கேள்வி எழுப்புவதன் காரணம் என்ன? குரான் வசனம் 31:27
"பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதிமுடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்"
என்கிறது. இதே பொருளில் இன்னொரு வசனமும் 18:109 இருக்கிறது. இந்த வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? எழுதுவதற்கு தாள் பயன்படுகிறது அது மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது அதில் திரவமான மை கொண்டு எழுதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால் முகம்மதின் காலத்தில் எழுதுவதற்கு தாளும் மையும் பயன்படுத்தப்படவில்லை. முகம்மது குரானை எழுதிவைப்பதற்கு அமைத்த குழு பேரீத்த மரப்பட்டைகளிலும், தோல்களிலும் தான் எழுதியதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதே காலத்தில் வந்த வசனமோ மரங்களை எழுதுகோல்களாகவும் கடல்களை மையாகவும் பயன்படுத்தச்சொல்கிறது. இது முகம்மது சொன்ன வசனமா? இல்லை அவர் காலத்திற்குப்பின்னர் வந்தவர்களால் சேர்க்கப்பட்ட வசனமா? இந்த ஐயத்தை எப்படிபோக்கிக்கொள்வது? அல்லா அனைத்தும் அறிந்தவன் முக்காலமும் உணர்ந்தவன், எல்லாம் தெரிந்த அவனுக்கு பின்னர் தாளும் மையும் வரவிருப்பது தெரியாமலா போயிருக்கும் என சிலர் நினைக்கலாம். ஆனால் தாளும் மையும் தேவையில்லாமலேயே கணிணியில் எவ்வளவு அளவிலும் எழுதிவிட முடியும் எனும் இன்றைய நிலை அந்த எல்லாம் அறிந்த அல்லாவுக்கு தெரியவில்லையல்லவா? இன்றைய முன்னேற்றங்கள் தெரியவில்லை அதனால் அதை குறிப்பிடவில்லை ஆனால் அன்றைய காலத்திற்கு சற்றைக்கு பின்னான முன்னேற்றங்கள் தெரியும் அதனால் அதை குறிப்பிட்டுள்ளான் என்பது முரணில்லையா? இஸ்லாமியர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? ஒன்று அல்லாவுக்கு எதிர்காலம் முழுமையாக தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும் அல்லது குறிப்பிட்ட அந்த வசனம் முகம்மதின் காலத்திற்குப்பின் குரானில் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடும். இந்த இரண்டில் எதை ஏற்பார்கள்? எதை மறுப்பார்கள்?
முஸ்லீம்கள் தங்கள் வேதமான குரானுக்கு அடுத்தபடியாக மதிப்பது ஹதீஸ் நூல்களைத்தான். ஹதீஸ் என்பது முகம்மதுவின் வாழ்வில் அவர் செய்ததும் சொல்லியதுமான தொகுப்பு. இந்த ஹதீஸ் நூல்களில் முதலிரண்டு இடங்களில் இருப்பது ஸஹீஹுல் புகாரி என்பதும், ஸஹீஹ் முஸ்லீம் என்பதும். இதில் ஸஹீஹ் முஸ்லீமில் 3421ஆவது ஹதீஸ்
"ஆயிஷா அவர்கள் கூறியதாவது: பத்துமுறை பால் கொடுத்துவிட்டால் திருமணம் நிச்சயமற்றதாகிவிடும் என்று குரானில் இருந்தது பின்னர் இது ரத்து செய்யப்பட்டு ஐந்து தடவையாக குறைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது"
என்று இருக்கிறது. அதாவது கணவன் மனைவிக்கிடையான உறவில் மனைவியிடமிருந்து கணவன் குறிப்பிட்ட முறைகளுக்கும் அதிகமாக பாலருந்திவிட்டால் மனைவியானவள் கணவனின் தாயைப்போன்றவளாகிவிடுவாள் எனும் பொருள்படும்வசனம் முகம்மது இறக்கும் வரையிலும் குரானில் இடம் பெற்றிருந்தது என்று முகம்மதின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா கூறுவதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ். இது இட்டுக்கட்டிய ஹதீஸ் என்றோ, பொய்யானது என்றோ ஏற்றுக்கொள்ளப்படாதது என்றோ கூறிவிட முடியாது. ஏனென்றால் இது இடம்பெற்றிருப்பது ஸஹீஹ் முஸ்லீமில். (ஹதீஸில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டாதது என்று இரண்டு வகை உண்டு. இவை பற்றி பின்னர் பார்க்கலாம்) முகம்மதுவுக்கு மிகவும் விருப்பமான மனைவியாகிய ஆயிஷா அவர்களால் சுட்டப்படும் இந்த வசனம் தற்போதைய குரானில் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்று கூறவேண்டிய கடமை முஸ்லீம்களுக்கு இருக்கிறது. இல்லை தற்போதைய குரானில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை. அது எப்போது காணாமல் போனது? எப்படி இல்லாமல் போனது? நீக்கியது யார்? எந்த அடிப்படையில் நீக்கப்பட்டது? எல்லாம் அறிந்த அல்லாவால் அருளப்பட்டு கடைசி மனிதன் வரை நிலைத்திருக்கக்கூடிய குரானின் வசனங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருந்தது?
குரானை எழுதுவதற்கென்றே முகம்மது ஏற்படுத்திய குழு எழுதிய குரானை அப்படியே வைத்திருக்க வேண்டுமென்பதில்லை, அந்த எழுத்து முக்கியமானதல்ல அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுதான் முக்கியமானது. அந்த குரானுக்கும் தற்போதைய குரானுக்கும் எந்தவித்தியாசமும் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கும் முஸ்லீம்கள், ஆய்ஷாவின் அந்த வரிகளை கவனித்துப்பார்க்கவேண்டும். "அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது" முகம்மது இறந்தபிறகு குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூற முன்வந்த முகம்மதின் மனைவி யாரால் எப்போது மாற்றப்பட்டது என கூற முன்வரவில்லை. அதன் காரணம் என்னவாக இருந்தாலும் குரான் மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியமானது
source:senkodi
http://thamilislam.tk
No comments:
Post a Comment