Wednesday, March 14, 2012

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..

 

நுழைவாயில்

பொதுவாக மதம் என்பது மக்களிடையே சக்திவாய்ந்த நம்பிக்கையாக இருக்கிறது. மக்கள் தங்களின் உயிர்ப்பிற்கும், மரணத்திற்கும்; சுக துக்கங்களுக்கும்; இன்னும் அனைத்திற்கும் அதுதான் காரணமாக இருக்கிறது என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே உலகை சீர்பட நடத்திவருவதாக ஏற்கிறார்கள், தற்போதைய சீர்கேடுகளுக்கு அந்த நம்பிக்கை குறைந்ததே காரணம் என கருதுகிறார்கள். வேறு எந்த நம்பிக்கையை காட்டிலும் மத நம்பிக்கையே, கடவுள் நம்பிக்கையே வீரியம் மிக்கதாய் இருக்கிறது. சிலபோதுகளில் அந்த நம்பிக்கையில் கீரல் விழுந்தாலும் மறு கணமே மனதிலிருந்து ஒரு உந்துதல் கிளம்பி அந்த கீரல் சரிசெய்யப்பட்டுவிடுகிறது. இது மனதில் நம்பிக்கை என்ற அளவில், ஆனால் நடப்பிலோ அவர்களின் வாழ்க்கையும் அதன் வலிகளும் அவர்களை கோபம் கொள்ளச்செய்கிறது. தங்களின் பிரச்சனைகளுக்கு காரணமாகத் தெரிபவர்களை பழிவாங்க முயல்கிறார்கள். மீண்டும் அதேபோல் நேராவண்ணம் தற்காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு இருக்க முயல்கிறார்கள். ஆனாலும் கடவுள் தங்களுக்கு விதித்ததை தவிர வேறெதுவும் நேராது என உறுதியாக நம்புகிறார்கள். மேலும் பிரச்சனைகள், மேலும் மேலும் பிரச்சனைகள் அவர்களை அழுத்த அழுத்த நாட்கள் கடந்து கடந்து ……ஒரு நாள் மரணித்தும் விடுகிறார்கள். தங்களின் பிரச்சனைகள் இந்த உலகிலிருந்தே எழுந்து வருபவைகள். சிலர் கொழுக்க நினைப்பதாலேயே தமக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும், தம்முடைய உழைப்பு முழுவதும் தமக்கு கிடைப்பதில்லை என்பதும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி தெரியவிடாமல் செய்வதில் கடவுள் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. இப்படி கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவு வீரியமாக இருப்பதற்குக்கு காரணம் என்ன?

 

மனிதன் பிறந்தது முதலே ஏதாவது ஒரு மத நம்பிக்கையின் நிழலிலேயே வாழ நேரிடுகிறது. வளர்ந்த பிறகு அந்த நம்பிக்கையின் சடங்குகளுக்குள் சிக்கிக்கொள்கிறான். அவனுக்கு போதிக்கப்படும் அத்தனையும் ஏதாவது ஒரு ரீதியில் கடவுளின் இருப்பை பத்திரப்படுத்துகின்றன. அவன் சிந்திக்கும் பருவத்தை அடையும் போது வேதங்களும் அதன் விளக்கங்களும், விரிவுரைகளும் பொழிப்புரைகளும் அவனுள் நுழைந்து அவனின் சிந்தனைக்கான வழியை கைப்பற்றிக்கொள்கின்றன. எதைப்பற்றி சிந்தித்தாலும் இந்த வழியை மீறிவிடாதவாறு சொந்தங்களும் சமூகமும் பார்த்துக்கொள்கின்றன. கூடவே இன்றைய வாழ்முறைகளும் பொழுதுபோக்கு கட்டமைப்புகளும் ஒரு செக்கு மாட்டுத்தனத்தை ஏற்படுத்திவிட, பொருப்புகள் அதை சுமந்தே ஆகவேண்டிய கடமைகள் அவைகளுக்காக பொருளீட்டும் தேவை, அந்த தேவைகளுக்காக வரித்துக்கொண்டேயாகவேண்டிய தகுதிகள்……. மூச்சுவிடத்திணரும் அவதியில் ஏன் எனும் அந்தக்கேள்வி எழும்பும் வலுவற்றே போய்விடுகிறது.

 

இவைகள் போதாதென்று தற்போது தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் மத பரப்புரைகள் விஞ்ஞான விளக்கங்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு நிஜம் போலவே வலம் வருகின்றன. அதெப்படி பொய்களுக்கு அறிவியல் விளக்கங்கள் தரமுடியும்? தருகிறார்கள். மதம் பேசுபவர்கள் இப்போது அறிவியலையும் குழைத்தே பேசுகிறார்கள்.

 

பேரண்டம் என்றாலும் அணுப்பிளவு என்றாலும் வேத வசனங்களை பொருள் பிரித்து அடுக்குகிறார்கள். நீட்டி முழக்குகிறார்கள், அறைகூவல் விடுகிறார்கள். வாழ்க்கையின் பற்சக்கரங்களிடையே திமிறிக்கொண்டு வரும் வெகுசில நேரங்களில் மக்களுக்கு ஏற்படும் கேள்விகளை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வியக்கவைத்தே பலங்குன்றச் செய்துவிடுகின்றன. மதப்பிரச்சாரக்கூட்டங்களுக்கு மக்கள் தேடிப்போய் கேட்பது குறைவு, மதவிளக்க நூல்களை படிப்பது அதனிலும் குறைவு ஆனால் திரைப்பட நிகழ்ச்சியின் அல்லது விளையாட்டின் விளம்பர இடைவேளையில் தெரியாமல் இதுபோன்ற நிகழச்சிகள் பார்வைக்கு வந்துவிட்டால் கூட இதன் தாக்கம் மக்களின் மனதில் இருக்கை போட்டு அமர்ந்துவிடுகிறது. இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. ஏனையோர்களைவிட இஸ்லாமியர்களிடம் மதப்பிடிப்பும், இது தான் சரியான மதம் எனும் உறுதியும், அதை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும் அதிகம்.

இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.

 

இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை. அதோடு இன்றைய சூழலில், எந்தஒரு மதத்திலும் அதில் பிடிப்பும் பற்றார்வமும் கொண்டிருப்பவர்கள் தவிர்க்கவே முடியாமல் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோவதையே வழியாக கொண்டிருக்கிறார்கள்.

 

அரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள். புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூகத்தேவையாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் இத்தொடர் பயன்படுமென நம்புகிறேன்.

 

ஒரு வேண்டுகோள்: இஸ்லாமும் அதன் சட்டதிட்டங்களும் மட்டுமே சரியானது ஏனைய அனைத்தும் ஏதோ ஒருவகையில் தவறானவை என்பனபோன்ற முன்முடிவுகளை தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான வகையில் வினையாற்ற வாருங்கள் என அனைவரையும் அழைக்கிறேன்.

தோழமையுடன்

செங்கொடி


source:senkodi 


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails