Monday, March 12, 2012

புதிய காணொளி :தமிழின தலைவர் பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி

 

பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி: புதிய காணொளி தொகுப்பை வெளியிடுகிறது சேனல் 4 

லண்டன் : இலங்கையில், 2009ல் நடந்த போர்க் குற்றங்களை மேலும் நிரூபிக்கும் வகையில், பிரிட்டனில் இயங்கி வரும் சேனல் 4 செய்தி நிறுவனம், நாளை மறுநாள் (14ம் தேதி) மற்றொரு காணொளித் தொகுப்பை வெளியிட உள்ளது. இதன் மூலம், சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்கா தீர்மானம்:சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலின் 19வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், கடந்த 7ம் தேதி, இலங்கை தனது கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (எல்.எல்.ஆர்.சி.,) தெரிவித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.இம்மாதம் 23ம் தேதி இத்தீர்மானம் கவுன்சிலில், ஓட்டெடுப்புக்கு விடப்படும் என தெரிகிறது. இத்தீர்மானத்திற்கு எதிராக நாடுகளை தன் அணியில் திரட்டும் வேலையில் இலங்கை முழு மூச்சுடன் இறங்கியுள்ளது.தீர்மானம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அதேநேரம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பலர், தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய நிற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய காணொளி தொகுப்பு:இலங்கை நடத்திய போர்க் குற்றங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய சேனல் 4 செய்தி நிறுவனம், இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில், நாளை மறுநாள் (14ம் தேதி) மற்றொரு காணொளித் தொகுப்பை வெளியிட உள்ளது.


சுட்டுக் கொல்லப்பட்டாரா பிரபாகரன் மகன்?இது குறித்து பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும் "தி இண்டிபெண்டென்ட்' பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: "இலங்கையின் கொலைக் களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்ற தலைப்பிலான இந்த காணொளித் தொகுப்பில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், 12, உடலில், ஐந்து குண்டுகள் பாய்ந்துள்ள காட்சி பதிவாகியுள்ளது.பாலச்சந்திரனோடு, மேலும் ஐந்து உடல்கள் கிடந்துள்ளன. இவர்கள் பாலச்சந்திரனின் பாதுகாவலர்களாக இருக்கக் கூடும். இவர்கள் அனைவரும் உடைகள் கழற்றப்பட்டு, பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில், சிங்கள ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.


ஆய்வு செய்யப்பட்ட தொகுப்பு: இதிலிருந்து சரணடைந்த, விடுதலைப் புலி வீரர்கள், தலைவர்கள், சிறுவர்கள் கூட சிங்கள ராணுவத்தால் சட்டத்திற்கு புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது.இந்த காணொளியில் 2009, மே 18 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பு, பிரபல டெர்ரிக் பவுண்டர் என்பவரால் ஆராயப்பட்டுள்ளது. அதன்படி, கையை நீட்டித் துப்பாக்கியைத் தொடும் தூரத்தில் தான் சிறுவன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்தக் காணொளித் தொகுப்பு வரும் 14ம் தேதி, இரவு 10.55 மணிக்கு (பிரிட்டன் நேரப்படி) சேனல் 4ல் ஒளிபரப்பாகும்.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய காணொளித் தொகுப்பால், இலங்கை மீதான சர்வதேச நெருக்கடி மேலும் அதிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails