இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௨
குரான் என்பது எல்லாவற்றின் மீதும் அனைத்துவித ஆற்றலையும் கொண்டிருக்கும் மீபெரும் சக்தியான அல்லா முகம்மதுவுக்கு வழங்கியது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. அதனால்தான் அதில் எந்தஒரு முரண்பாடும் இருக்கமுடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைப் பாத்திரமான குரானிலிருந்து சில வசனங்கள்,
………உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன் என்று கூறினான். குரான் 7:124
…….. மற்றவரோ, சிலுவையில் அறையப்பட்டு அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித்திண்ணும் ……….. குரான் 12:41
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்து ……… குரான் 7:54
பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை ……….. அதில் அவறின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்……. இரண்டு நாட்களில் அவறை ஏழு வானங்களாக ஏற்படுத்தினான்……… குரான் 41:9,10,12
இந்த வசனங்களில் ஒன்றுக்கு இன்னொன்று முரணான கால அளவீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. முரணான காலங்களை குறித்ததனால் இந்த வசனங்களைப் புனைந்தது, குரானை எழுதியது அனைத்தும் அறிந்த ஒருவராக இருக்கமுடியாது அதாவது அல்லா என்ற ஒரு சக்தி கிடையாது முகம்மது தன்னுடைய ஆக்கங்களை எற்புடையதாக ஆக்குவதற்காக பயன்படுத்திய கற்பனைதான் அல்லா என்பது வெளிப்படுகிறது.
இவற்றில் முதல் இரண்டு வசனங்களில் சிலுவை பற்றிய குறிப்பு இருக்கிறது. 7:124 வசனம் எகிப்தில் மன்னனாய் இருந்த ஃபிர் அவ்ன் கூறுவதாக வருகிறது. அந்த நேரத்து இறைவனின் தூதரான மூஸாவுடன் (மோசஸ்) போட்டியிட சில வித்தைக்காரர்களை வரவழைக்க, அவர்களோ மூஸாவின் வித்தையைப் பார்த்து நீயே பெரியவன் என்று மூஸாவை ஏற்றுக்கொள்ள அந்த ஆத்திரத்தில் அவர்களை எச்சரிக்கும் விதமாக அம்மன்னன் இப்படி கூறுகிறான். 12:41 வசனம் இன்னொரு இறைத்தூதரான யூசுப் (ஜோசப்) சிறையில் அடைபட்டிருக்க, அவருடன் சிறையிலிருந்தவர்கள் தங்கள் கண்ட கனவுக்கு விளக்கம் கேட்க, அவர்களின் கனவுக்கு யூசுப் கூறும் விளக்கமாக வருகிறது. இவர் மூஸாவைவிட காலத்தால் முந்தியவர்.
இந்த இரண்டு வசனங்களிலும் சிலுவை தண்டனையாக சொல்லப்பட்டிருக்கிறது. பண்டைய காலத்தில் சிலுவைத்தண்டனை என்பது மரண தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை. இந்த தண்டனையைப் பற்றி குரான் எந்தக் காலத்தில் குறிப்பிடுகிறது என்பதில் தான் பிழை இருக்கிறது. ஃபிர் அவ்ன் என்று மதவாதிகளால் அழைக்கப்படும் இரண்டாம் ரமோஸஸ் எனும் மன்னனின் காலம் கிமு 1279ல் இருந்து கிமு 1213 வரை. யூசுப் என்பவரின் காலம் குறித்து அறிந்து கொள்ள வழி எதுவும் இல்லை என்றாலும் இரண்டாம் ரமோஸஸ் காலத்திற்கு சற்றேறக்குறைய 300 ஆண்டுகள் முந்தியதாக இருக்கலாம். தோராயமாக கிமு 1600 க்கும் கிமு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறை இருந்தது என்று குரான் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை பெர்சியர்களால் ஏற்படுத்தப்பட்டது. பெர்சிய (இன்றைய ஈரான்) மன்னனான முதலாம் டேரியஸ் எனும் மன்னனால் கிமு 519 ல் தரப்பட்டதுதான் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை. ஆனால் குரான் இதற்கு சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சிலுவைத் தண்டனை இருந்ததாகக் குறிப்பிடுகிறது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஏசு என்று ஒருவர் இருந்ததாகவும், அவர் மக்களினிமித்தம் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கதைப்பது கிருஸ்தவர்களின் நம்பிக்கை. இதைச் செவியுற்ற முகம்மது, தன்னுடைய குரானில் தகுந்த இடத்தில் பயன்படுத்திக்கொண்டார். காலம் குறித்த தெளிவு அவரிடம் இல்லாததால்தான் குரானில் காலக் குறிப்புகள் பெரும்பாலும் இடம்பெறவில்லை. அதே தெளிவின்மையால் பிற்காலத்தில் செவியுற்ற சிலுவைத் தண்டனை முறையை காலத்தால் முற்பட்ட சிலருக்கு பொருத்திவிட்டார்.
அடுத்த இரண்டு வசனங்களில் 7:54 ல் வானங்களையும் பூமியையும் படைக்க ஆறு நாட்களை எடுத்துக்கொண்டதாகவும், அடுத்து குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களில் தனித்தனியாக பூமியை படைக்க இரண்டு நாட்களும், அதில் உணவு வகைகளை படைக்க நான்கு நாட்களும் வானங்களைப் படைக்க இரண்டு நாட்களும் என்று மொத்தம் எட்டு நாட்களும் குறிப்பிடப்படுகிறது. அதாவது மொத்தமாக கூறுமிடத்தில் ஆறு நாட்கள் என்றும் தனித்தனியாக கூறுமிடத்தில் எட்டு நாட்கள் என்றும் இருக்கிறது.
வானங்கள் பூமி என்று மட்டும் இவ்வசனங்களில் கூறினாலும் வேறு சில வசனங்களில் வானங்களும் பூமியும் அதற்கு இடையிலுள்ளதும் என்றும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் மொத்த பிரபஞ்சமும் ஆதிமுதல் ஆறு நாட்களில் படைத்து முடிக்கப்பட்டுவிட்டது என்பது. ஆனால் பிரபஞ்சத்தில் இன்னும் கூட புதுப்புது விண்மீன்களும், கோள்களும் தோன்றிக்கொண்டிருக்கின்றன; நெபுலாக்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன; கருந்துளைகள் பருப்பொருட்களை இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றன. ஆறு நாட்களிலோ, எட்டு நாட்களிலோ தொடக்கத்தில் படைத்து முடித்துவிடப்பட்டது என்றால் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் கோள்களையும், பருப்பொருட்களையும் எந்த நாட்கணக்கில் சேர்ப்பது? அல்லது படைப்பது தொடர்கிறது என்றால் ஆறு நாள் எட்டு நாள் என்பது எந்தக்கணக்கில் கூறப்பட்டது?
முதல் இரண்டு நாட்களில் பூமி படைக்கப்பட்டது என்றால் எந்த அடிப்படையில் நாட்கள் கணக்கிடப்பட்டது? ஏனென்றால் பூமி படைக்கப்பட்டு அதில் உணவு வகைகளுக்காக நான்கு நாட்களைச் செலவு செய்து அதன்பிறகுதான் வானமும் ஏனையவையும் வருகின்றன. வானம் படைக்கப்படாமல் அதில் சூரியன் படைக்கப்படாமல் எந்த மையத்தில் பூமி சுழன்று நாட்கள் கணக்கிடப்பட்டது? (வானமா பூமியா எது முதலில் படைக்கப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே எழுதப்பட்டதையும் இதனுடன் சேர்த்து படித்துக்கொள்ளவும்) பூமி உருவாகி பல கோடி ஆண்டுகள் நெருப்புக்கோளமாக சுற்றிக்கொண்டிருந்ததை எந்தக்கணக்கில் சேர்ப்பது?
குரானில் பல இடங்களில் ஆறு நாட்களில் அனைத்தும் படைக்கப்பட்டது என்று முகம்மது கூறியிருந்தாலும், தனித்தனியாக கூறும் போது இரண்டு நாட்களை அதிகமாக கூறி முரண்பட்டிருக்கிறார், காரணம் குரானை அவர் சீராக ஒரே தடவையில் சொல்லி முடித்துவிடவில்லை. பல தடவைகளில் சற்றேறக்குறைய இருபத்து மூன்று ஆண்டுகளில் படிப்படியாக கூறியதுதான், அதிலும் அறிவியலோடு ஒரு தொடர்பும் இல்லாமல்.
ஆக எல்லாம் அறிந்த ஒரு சக்திதான் முகம்மதுவுக்கு குரானைக் கொடுத்தது என்பது கற்பனையானது. அவர் தன் கற்பனையை குரானாகத் தந்தார் என்பதே மெய்யானது.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?
20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?
19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?
17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
15. விந்து குறித்த குரானின் விந்தைகள்
14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்
7. குரான் கூறுவது அறிவியலாகுமா?
6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….
source:senkodi
http://thamilislam.tk
No comments:
Post a Comment