இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௩
பொதுவாக காலம், வெளி இரண்டும் தனித்தனியானது என அறியப்பட்டிருந்தாலும், இரண்டும் பிரிக்கவொண்ணாதபடி பிணைந்திருப்பவை. காலம் என்பதை வெளியில் இருக்கும் பருப்பொருளின்றி முற்றறிந்து கொள்ள முடியாது. அதன் படி ஒரு நாள் என்பதின் முழுமையான பொருள் பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம். ஒரு ஆண்டு என்பது சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம்.
இப்போது குரானின் சில வசனங்களைப் பார்க்கலாம்.
வேதனையை அவர்கள் அவசரமாகத் தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். குரான் 22:47
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான். ஒரு நாள் அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். குரான் 32:5
ஒருநாள் மலக்குகளும், அவ்வான்மாவும் அவனிடம் ஏறிச் செல்வார்கள். அதின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் இருக்கும் குரான் 70:4
இந்த மூன்று வசனங்களும் பூமியின் ஒரு நாளின் அளவு தன்னிடத்தில் அல்லது தான் இருக்கும் கோளின் சூழலில் எத்தகைய அளவாக இருக்கும் என்பதை ஒப்பிட்டுக் காட்டும் விதமாக அல்லா கூறுவதாக அமைந்த வசனங்கள். முதல் பார்வையிலேயே இதன் கால வித்தியாசம் முரண்பாடு காட்டும், அதாவது முதலிரண்டு வசனங்களில் ஆயிரம் ஆண்டுகள் என்றும் மூன்றாவது வசனம் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்றும் குறிப்பிடுகிறது.
ஆனால் இவைகள் காலம் காட்டும் வசனங்களல்ல வேகத்தைச் சுட்டும் வசனங்கள் என்கிறார்கள் மதவாதிகள். எப்படி?
முதலிரண்டு வசனங்களில் ஆண்டவனின் கட்டளை பூமிக்கு வந்தடையும் வேகத்தை குறிப்பதாக விளக்கம் கொடுக்கிறார்கள். உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் நியாயத் தீர்ப்பு நாளில் ஒன்றாக எழுப்பப்பட்டு விசாரித்து செய்த தவறுகளுக்கு தண்டனை தரப்படும் என்பது இஸ்லாமிய நம்பிக்கைகளில் முக்கியமானது. அது எப்போது வரும்? இன்னும் வரவில்லையே என்று அக்கால மனிதர்கள் முகம்மதுவிடம் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு அல்லா பதில் கூறுவதாகத்தான் முகம்மது இந்த வசனத்தை அமைத்திருக்கிறார். அதாவது அவசரப்படாதீர்கள், அந்த நாள் நிச்சயம் வந்து சேரும் என்பது அந்த வசனத்தின் சுருக்கமான பொருள். இதில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டு என்று தேவையில்லாத ஒரு ஒப்பீடு ஏன்? அல்லா மிகப்பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்பது இஸ்லாத்தில் பிரபலமான ஒரு முழக்கம். இதை வலியுறுத்தும் விதமாகத்தான் முகம்மது அந்த ஒப்பீட்டை செய்திருக்கிறார். மனிதர்களது நாளின் நீளத்தைப் போல் அல்லாவின் நாளின் நீளத்தை சாதாரணமாக நினைத்துவிடாதே உன்னுடைய நாளைவிட அல்லாவின் நாள் ஆயிரம் ஆண்டு அளவுக்கு பெரியது என்று வியப்பாக எடுத்துக்காட்டுகிறார்.
ஆனால் இப்போது அந்த வசனத்தின் பொருளை நேரடியாக எடுத்துக்கொண்டால் ஒரு சிக்கல் வருகிறது. 22:47, 32:5 வசனங்களில் ஒரு நாளுக்கு இணையாக ஆயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடும் குரான் 70:4ம் வசனத்தில் ஒரு நாளுக்கு இணையாக ஐம்பதாயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. இதில் 22:47ம் வசனமும் 70:4ம் வசனமும் ஒரே கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள், அதாவது யுகமுடிவு நாட்கள் எப்போது வரும் எனும் கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள். எனவே இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகத்தான் இரண்டு வசனங்களும் வேறு வேறு விசயத்தைக் கூறுவதாக பிரித்துப் பொருள் கொண்டு சமாளித்திருக்கிறார்கள். 22:47ம் வசனத்தில் அல்லாவின் கட்டளை பூமிக்கு வந்து சேரும் வேகத்தைக் குறிப்பதாகவும் அதாவது யுகம் முடியட்டும் என்று அல்லா கட்டளையிட்டுவிட்டால் அது மனிதர்களின் வேகத்தைவிட 365000 மடங்கு அதிக வேகத்தில் பூமியை வந்தடையும் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும்; 70:4ம் வசனத்தில் வானவர்கள் (அல்லாவின் உதவியாளர்கள்) பூமிக்கு வந்து செல்லும் வேகத்தைக் குறிப்பதாகவும் அதாவது பல்வேறு வேலைகளுக்காக பூமிக்கு வந்து செல்லும் வானவர்கள் மனிதர்களின் வேகத்தை விட 18250000 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும் அவ்வசனங்களுக்கு வியாக்கியானங்கள் அளிக்கிறார்கள்.
மதவாதிகளின் வியாக்கியானங்களின்படியே அவற்றை வேகங்களாக பொருள் கொண்டாலும் அந்த வேகங்களின் மனிதர்களின் வேகம் ஒப்பிடப்பட்டு மடங்குகளாகக் கூறப்படுகிறது. அன்றைய மனிதர்கள் பயணிக்கும் வேகம் என்றால் ஒட்டக வேகம் அல்லது குதிரை வேகம். இந்த வேகங்களோடு ஒப்பிட்டு ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்று குரான் கூறியிருக்குமானால் இன்று மனிதர்களின் வேகம் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துவிட்டது. இன்றைய மனிதனின் விரைவுப்படி ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்பதை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மட்டுமல்லாது மனிதனின் வேகம் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும், அப்படி அதிகரித்துச் செல்லச் செல்ல இந்த குரான் வசனங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் மதக் கொள்கையோடு மிகப் பலமாக மோதக் கூடிய ஒரு விசயமல்லவா? எப்படிச் செய்வார்கள்? இஸ்லாமியர்கள் விளக்கம் கூறுவார்களா?
இந்த வசனங்களோடு ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாட்டையும் கட்டிவைத்திருக்கிறார்கள். ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்லது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்பது கடந்த நூற்றாண்டுவரை யாருக்கும் புரியாமல் இருந்தது சார்பியல் கோட்பாட்டை கண்டடைந்த பிறகுதான் அதன் பொருள் புரிந்தது என்று கூறிக்கொள்கிறார்கள். (அப்படியானால் குரானை புரிந்து கொள்வதற்காக சுலபமாக ஆக்கிவைத்திருக்கிறேன் என்று அல்லா கூறுவதன் பொருள் என்ன? என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்)
ஒளியின் வேகத்தை ஒட்டி ஒரு பொருள் பயணம் செய்யும் போது அதன் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது சார்பியல் கோட்பாட்டின் ஒரு பகுதி. இதைப் பயன்படுத்தித் தான் அந்த வசனங்களுக்கு வேகம் எனும் பொருளைக் கொண்டுவருகிறார்கள். அதாவது, அதிவிரைவாகச் செல்லும் போது வாழ்நாள் அதிகரிப்பதால்தான் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமானதாக ஆகமுடிகிறது என்பது அவர்கள் முடிபு. ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது. ஒளியின் வேகத்தை ஒட்டி விரைகையில் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது ஒரு பகுதிதான் மற்றொரு பகுதி உருவம் சுருங்கும் என்பது. எடுத்துக்காட்டாக ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது அதன் வாழ்நாள் இரண்டு மடங்காகும் என்றால் அதன் நீளம் அரை மீட்டராகும்.
இதன்படி, இந்த விரைவில் உயிரினங்கள் பயணிக்க முடியாது அல்லது பயணித்தால் உயிருடனிருக்கமுடியாது என்றாகிறது. ஏனென்றால் அளவு குறைந்தாக வேண்டும். இந்த சமன்பாடைக் கொண்டுதான் ஒருவிதத்தில் கணக்கிட்டு ஒளியின் வேகத்தை விட அதிக வேகம் பிரபஞ்சத்தில் இருக்கமுடியாது என்கிறார்கள். ஆனால் அல்லாவின் உதவியாளர்களான வானவர்களால் எப்படி ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டு உயிருடன் இருக்கமுடிகிறது எனும் கேள்வி இங்கு தவிர்க்கவியலாமல் எழுகிறது. அடுத்து ஒளியை மிகைத்த வேகம் என்பது பிரபஞ்சத்தில் இல்லை. ஆனால் வானவர்கள் சர்வ சாதாரணமாக ஒளியைவிட மிகைத்த வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்களே எப்படி?
மேற்கூறிய அந்த மூன்று வசனங்களையும் வேகம் குறித்த வசனங்களாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு முகாந்திரமும் இல்லை. இறைவன் பெரியவன் என்பதைக் காட்டும் ஒரு சொல்லாடல்தான் அந்த வசனங்களில் இடம் பெற்றிருக்கிறது. இறைவனின் வார்த்தைகளை கடல்களை மையாக கொண்டாலும் எழுதிமுடிக்க முடியாது என்று குரானில் வேறொரு இடத்தில் குறிப்பிடப்படுவதையும் இதனுடன் இணைத்து புரிந்து கொள்ளலாம். வேகம் குறித்து கூறுவதாக அர்த்தப்படுத்திக்கொண்டால் மட்டுமே இங்கு முரண்பாடு எழுவதை தவிர்க்கமுடியும் என்பதால் அவ்வாறாக பொருள் படுத்தப்படுகிறது.
அதே நேரம் இது கால அவகாசம் வழங்குவதை குறித்த வசனம் தான் இதில் வேகம் குறித்த குறிப்பு ஒன்றுமில்லை என்பதை இதற்கு அடுத்து வரும் ஒரு வசனம் மிகத் துல்லியமாகவே விளக்கி விடுகிறது.
அநியாயங்கள் செய்துகொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன். பின்னர் அவறைப் பிடித்துக்கொண்டேன். மேலும் என்னிடமே மீண்டும் வரவேண்டும். குரான் 22:48
இப்படி பலவிதமாக வித்தைகள் செய்து முலாம்பூசி குரானை நிலைநிறுத்த முயல்வதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், குரானில் போர்த்தப்பட்டிருக்கும் புனிதப் போர்வை போலியானது என்பதை மதவாதிகளும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதை.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
http://thamilislam.tk
No comments:
Post a Comment