ஆப்கானிஸ்தானில் மதகுருமாரின் கவுன்சிலொன்று பெண்களுக்கென கடுமையான கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது.
ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாயும் கூட இந்த புதிய விதிமுறைகளுக்கு அவரது அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் சமூக இணைய வலைத்தளங்களில் தோன்றியுள்ள அந்நாட்டு இளைஞர்கள், இந்த கட்டுப்பாடுகளையும் அதனை உருவாக்கிய மதகுருமாரையும் சாடி விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
'இது மிக வன்முறைத் தனமானது' என்று ஆப்கன் இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
'அடுத்தபடியாக, அவர்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறுவார்கள், பாதி ஆண்களுக்கு, அடுத்த பாதி பெண்களுக்கு' என்று அந்த விமர்சனம் தொடர்கிறது.
நையாண்டியான விமர்சனங்கள்
ஆப்கானிஸ்தானின் முக்கிய மதகுருமார்கள் கவுன்சில் பள்ளிக்கூடங்களிலும் வேலைத்தளங்களிலும் மற்ற எல்லா நாளாந்த நடவடிக்கைகளும் ஆண்களும் பெண்களும் பிரிந்திருக்க வேண்டும், அவர்களைக் ஒன்றுசேர விடக் கூடாது என்று அறிவித்ததை அடுத்து சமூக இணைய தளங்களில் இவ்வாறான ஆயிரக்கணக்கான கண்டனங்கள் வெளியாகியுள்ளன.
கவுன்சிலின் அறிவிப்பை அதிபர் கர்சாயும் அங்கீகரித்தை அடுத்தே மக்கள் தங்கள் ஆத்திரங்களை இவ்வாறு இணைய தளங்களில் கொட்டித்தீர்ப்பது இன்னும் தீவிரமடைந்துள்ளது.
ஆண்-பெண் வகுப்பு வாதத்துக்கு எதிராக அங்கு புதிய இணைய தளங்களும் இப்போது துவக்கப்பட்டு பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.
இதேபோல இன்னும் சிலர் தமது கோபத்தை நையாண்டியாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
காபூல்வாசி ஒருவர், 'அரசாங்கத்தின் செலவினம் இன்னும் அதிகரிக்கும், இனி பெண்களுக்கு என்று தனியான நாடாளுமன்றம், தனியான பல்கலைக்கழகங்கள், வங்கிகள், அங்காடிகளை எல்லாம் அமைக்க வேண்டுமே' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னும் கேலியாக, 'ஆப்கன் பெண்களே, உங்கள் தந்தைமார், கணவன்மார் ,அல்லது உலமா கவுன்சிலின் அனுமதி இல்லாமல் எவரும் எனக்கு குறிப்புகளை போடவேண்டாம்' என்று ஒருவர் டுவிட்டர் தளத்தில் எழுதியுள்ளார்.
பிபிசியின் பாரசீகமொழிச் சேவையிடம் காபூலில் இருந்து பேசிய இளம் மாணவி ஒருவர், 'நாங்கள், இந்த அறிவிப்புகளைப் பொருட்படுத்தவும் போவதில்லை, கட்டுப்படவும் போவதில்லை' என்று தெரிவித்தார்.
உலமா கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு ஆப்கன் அரசின் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றமை, தாலிபன் காலத்தை நோக்கி நாடு செல்வதையே காட்டுவதாக இளம் ஆப்கானியர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாலிபன்கள் அதிகாரத்தில் இருந்தபோது, ஆப்கனிலிருந்து இரானுக்கு தப்பியோடிய பெண் உரிமை ஆர்வலர் சாக்கியா நவா, 'அரசின் நடவடிக்கை ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபன்கள் கட்டுப்படுத்தவே வழிவகுக்கும்' என்று தெரிவித்தார்.
எதிர்காலம்?
இந்தப் புதிய பரிந்துரைகளை நாடாளுமன்றத்திலும் சிலர் கண்டித்துள்ளனர்.
ஆப்கன் அரசியலமைப்பையே மீறும் செயல் என்று எதிரணியின் துணைத் தலைவர் அஹ்மட் பேஹ்சாட் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள பிரபல கவிஞர் சமய் ஹமெத்,' 'நீ பெண்களுக்கு எதிரான கருத்துடையவன் என்றால், நீ உன் தாய்க்கு எதிரானவன் என்று தானே அர்த்தம்', வாழ்க்கையில் எல்லாமே பெண்ணால் தானே சாத்தியம், ஆனால் தொடர்ந்து நீ அவளுக்கு எதிராகத் தானே குரல் எழுப்புகிறாய்' என்று பதிவு செய்திருக்கிறார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, இப்போது இந்த சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்திவருபவர்கள், அங்குள்ள இளம், படித்த, மேல்தட்டு வர்க்கத்தில் இருப்பவர்கள் தான்.
ஆனால், அங்கு இன்னொரு உலகம் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறது. ஆழமாக பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றும், நம்பும் ஒரு ஆப்கானும் அங்கு இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.
தெற்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய கோட்பாட்டுக் கல்வியை பயிலும் மாணவன் அப்துல் சலாம், 'உலமா சபையின் பரிந்துரைகளை நான் ஆதரிக்கிறேன், ஏனென்றால் அவை இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவானவை' என்று கூறுகின்றார்.
இனி, அடுத்தகட்டமாக இந்த பரிந்துரைகளுக்கு என்ன நடக்கும், புதிய சட்டமாக அமுலுக்கு வருமா என்பது தெளிவில்லை. ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் பற்றி சர்வதேச அரங்கில் பல கேள்விகளுக்கு இன்னும் பதில் காணப்பட வேண்டியிருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
source:BBC
http://thamilislam.tk
No comments:
Post a Comment