தமிழக இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ஆணோ, பெண்ணோ கொடையளிக்காமல் திருமணம் செய்யும் சமூகங்களும் உலகில் இருக்கின்றன என்பதை அறியாதவர்களைப் போல் தான் நடந்து கொள்வார்கள். பெண்ணிடமிருந்து ஆண் பெறும் வரதட்சனை என்பது சமூகப் பெருங்கேடு, எனவே ஆணிடமிருந்து பெண் பெறும் தனதட்சனையே சிறந்தது என்பது முஸ்லீம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அடிப்படையில் இருந்து தான் யாரும் வழங்க முடியாத உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக புழகமடைந்து கொள்கிறார்கள்.
மஹ்ர் என்பது திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் வழங்கும் தொகை. இத்தொகையை மணமகள் தான் விரும்பும் அளவுக்கு கேட்டு வசூலித்துக் கொள்ளலாம். திருமணத்திற்கு முன்பே இதை வசூலித்து பெண் தன்னுடைய பொறுப்பில் வைத்துக் கொள்வதால் இது பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்பது இஸ்லாமியர்களின் வாதம். இதற்கு இந்தியாவில் நடக்கும் வரதட்சனை கொடுமைகளை துணையாக அழைத்துக் கொள்கிறார்கள்.
வரதட்சனையோ, தனதட்சனையோ இரண்டுமே தனியுடமையின் இருவேறு வெளிப்பாடுகள் தாம். பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாமல் தனக்கான சொத்து, தனக்கான வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவி எனும் சிந்தனையிலிருந்து தான் திருமணத்தின் போது பொருளாதார மதிப்பை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தோன்றியிருக்கிறது. வரதட்சனை என்றாலும், தனதட்சனை என்றாலும் சமூகவியலாளர்கள் அதற்கு கொடுக்கும் விளக்கம், ஆணுக்கு சாதகமான பெண்ணின் இடப்பெயர்வால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது என்பதும், பெண்ணை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஆண் ஏற்றுக் கொள்வதால் அதற்கான ஈட்டு என்பதும் தான். ஆக திருமணத்தின் போது ஆண் கொடுத்தலும் பெற்றாலும் அதன் பொருள் பெண் ஆணின் சொத்தாக இருக்கிறாள் என்பது தான். இதில் வரதட்சனை சமூகச் சீர்கேடு, தனதட்சனை பெண்ணுக்கான உரிமை என்று பிரித்துக் காட்டுவது உள்நோக்கம் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியும்.
இந்தியாவில் வரதட்சனைக் கொடுமைகள் பரவலானவை. திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த பின்பும் பணமோ, பொருளோ வாங்கி வருமாறு துன்புறுத்துவதில் தொடங்கி கொலை செய்வதுவரை நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம், முப்பதைக் கடந்த பின்பும் திருமணமாக வழியின்றி முதிர்கண்ணிகளாக நிற்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு மாற்று தனதட்சனையாக இருக்க முடியுமா? எகிப்து போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் திருமணத்திற்கு பொருள் சேர்ப்பதற்காகவே இளமையைச் செலவழிக்கும் முதிர்கண்ணன்கள் நாற்பதைக் கடந்தும் இருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவில் நிகழும் கொடுமைப்படுத்தலும், கொலை புரிவதும் அந்த நாடுகளில் இல்லை. இது வரதட்சனை, தனதட்சனை வித்தியாசத்தால் நேர்ந்ததல்ல, ஆணாதிக்க சிந்தனையும், ஆணாதிக்க சமூகமும் இணைந்து பெண்ணுக்கு எதிராக நிற்பதால் ஏற்படும் விளைவு.
இந்த அடிப்படைகளை அறியாமல், சமூக, கலாச்சார ஆழங்களுக்குள் இதன் அடிவேர் புதைந்திருப்பதை புரிந்து கொள்ளாமல்; வரதட்சனை கொடூரங்களையும், ஸ்டவ் வெடிப்புகளையும் சுட்டிக் காட்டி, மரபு ரீதியான அரபு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இஸ்லாமிய மஹ்ர் தான் இதன் ஒரே தீர்வு என்றும், இதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறிவிட்டது என்றும் நீட்டி முழக்குவது மதவாதிகளின் மூன்றம் தர பரப்புரை உத்தியேயன்றி வேறொன்றுமில்லை.
பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை முன்னிட்டே மஹ்ர் தொகையை மணப்பெண்ணே தீர்மானித்து, வாங்கி, தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதற்கான உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் பெண்களுக்கு இவ்வுரிமையை இஸ்லாம் வழங்கியிருப்பது சமூகப் புரட்சியில்லையா? என்பது மதவாதிகள் முன்வைக்கும் கேள்விகளில் முதன்மையானது. இதை இரண்டு விதங்களில் அணுகலாம், 1. இஸ்லாம் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா? 2. உரிமையை முன்னிட்டுத் தான் இதை பெண்களுக்கு வழங்கியதா?
செமித்திய பிரிவின் அனைத்து இனங்களிலும் மணமகன் மணமகளுக்கு மணக்கொடை வழங்குவது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வழக்கமாக இருக்கிறது. ஆப்ரஹாமின் ஊழியன் ரெபேக்காளுக்கு கொடுத்த மணக்கொடை குறித்து ஆதியாகமம் 24:53 கூறுகிறது. ஹம்முராபியின் சட்டங்களில் மணக்கொடை குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹீப்ரு மொழியில் மொஹர் என்றும், சிரிய மொழியில் மஹ்ரா என்றும் குறிப்பிடப்படும் மஹ்ர், அரபுக்கு மட்டுமல்லாது அந்தப் பகுதியின் அனைத்து மொழியிலும் குறிப்பிடப்படும் சொல்லாக இருப்பதே அனைத்து இனங்களிலும் இந்த வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றாகும்.
முகம்மதுவுக்கு முந்திய அரேபியாவில் சதாக் என்றும் மஹ்ர் என்றும் இரட்டை வழக்கங்கள் இருந்திருக்கின்றன. மஹ்ர் மணப்பெண்ணின் தந்தைக்கும், சதாக் மணப்பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. குரானின் 4:4 வசனம் மணக்கொடையை குறிப்பதற்கு 'சதக்கா' எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறது. 'ஷிகார்' எனும் திருமண முறையை தடை செய்வதாக குரான் பேசுகிறது. கொண்டு கொடுக்கும் திருமண முறைக்குத் தான் ஷிகார் என்று பெயர். ஏன் இதை தடை செய்கிறது என்றால் இரண்டு பக்கமும் மஹ்ர் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக மஹ்ரை நீக்கிக் கொள்கிறார்கள் என்பதால், மஹ்ர் கட்டாயம் கொடுக்கப்பட்டாக வேண்டும் எனும் அடிப்படையில் ஷிகார் திருமணத்தை தடை செய்கிறது. இவைகளெல்லாம் முகம்மதின் காலத்திற்கு முன்பே திருமணத்தில் பெண்ணுக்கு மஹ்ர் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள். முகம்மது இதில் செய்ததெல்லாம் சதாக் என்றும் மஹ்ர் என்றும் தனித்தனியாக கொடுக்கப்பட்டு வந்ததை ஒன்றாக்கி மஹ்ர் மட்டும் என்று ஆக்கியது தான். முகம்மதின் காலத்தில் மஹ்ர் பெண்ணின் தந்தைக்கு உரியது என்பதால், இனி மஹ்ர் பெண்ணுக்கு உரியது என்பதை தனது குரானில் சற்றே அழுத்தத்துடன் குறிப்பிடுகிறார் முகம்மது. அந்த அழுத்தம் தான் பெண்ணுரிமையாக ஜோடனை செய்யப்படுகிறது.
மஹ்ர் என்பது எந்த அடிப்படையில் பெண்ணின் உரிமையாக பாதுகாப்பாக கருதப்படுகிறது? மணக்கொடையாக கொடுக்கப்படும் பணம் பெண்ணிடம் இருப்பதால் எதிர்காலத்தில் மணமுறிவு ஏற்பட்டாலோ, வேறு வகைகளில் பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அந்த பணத்தைக் கொண்டு தன் எதிர்காலத்தை பெண் ஏற்படுத்திக் கொள்ளலாம் எனும் அடிப்படையிலேயே இதை பெண்ணுக்கான உரிமை, பெண்ணுக்கான பாதுகாப்பு என்பனபோல் விதந்து கொள்ளப்படுகிறது. ஆனால் மரபு வழி வழக்கம் என்பதைத் தவிர வேறொரு காரணம் இல்லை என்பதை குரானும், ஹதீஸ்களும் தெளிவாகவே நிருவுகின்றன.
….. அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். குரான் 4:4
…… மஹ்ரை பேசி முடித்தபின் அதை கூட்டவோ அல்லது குறைக்கவோ இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மீது குற்றமாகாது ….. குரான் 4:24
இந்த வசனங்களில் முதல் வசனம் மஹ்ர் கொடுத்து திருமணம் முடிந்தபின் அதை செலவு செய்வதற்கு அனுமதிக்கிறது. இரண்டாம் வசனமோ திருமணத்திற்கு முன்னரே இருவரும் பேசி தேவைப்பட்டால் கூட்டி குறைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இங்கு மஹ்ரின் நோக்கம் பெண்ணின் எதிர்கால பாதுகாப்பாக இருந்தால் அதை செலவு செய்வதற்கும், கூட்டிக் குறைத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கியது என்ன பொருளில்?
"(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். ……. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (ஓதுவேன்)" என்று சொன்னார் "உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்; நீர் செல்லலாம்!" என்று சொன்னார்கள். முஸ்லிம் 2785
திருமணம் முடிக்க தன்னிடம் மணக்கொடையாக எதுவுமில்லை என்று கூறும் ஒருவரிடம் முகம்மது ஒரு இரும்பு மோதிரமாவது கொண்டுவாரும் எனக் கேட்க. அதுவும் இல்லை என்று தன்னுடைய ஆடையில் பாதியை கிழித்து தரட்டுமா என்றவர் வினவ, உனக்கு குரான் வசனங்கள் தெரியுமா என்று முகம்மது கேட்க, தெரியும் என்றதும் அந்த வசனங்களை இவளுக்கு கற்றுக் கொடுப்பது தான் நீ கொடுக்கும் மணக்கொடை என்று கூறி திருமணம் செய்து வைக்கிறார். இதுதான் நீண்ட அந்த ஹதீஸின் சுருக்கம். இந்த மணக்கொடையில் என்ன பாதுகாப்பு இருக்கிறது பெண்ணுக்கு? இது மட்டுமா? பேரீத்தம்பழம், காலணியைக் கூட மஹ்ராக கொடுப்பது அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இவைகள் பெண்ணுக்கு என்னவிதமான எதிர்கால பாதுகாப்பை வழங்கும்?
ஆக, மஹ்ர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்பது அந்தக் காலத்தில் இருந்து முகம்மதால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நடைமுறை வழக்கம். இதைத்தாண்டி அதில் பெண்ணின் உரிமையோ, சமூகப் புரட்சியோ இருப்பதாக யாரும் கூறக் கேட்டால் ஒருமுறை சப்தமாக சிரித்துக் கொள்ளலாம். அதைத்தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து
37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை
36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா
35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4
34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3
33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2
32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1
31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்
30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்
29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா
28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?
27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்
26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்
25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா
24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?
23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா
21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?
20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?
19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?
18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்
17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
15. விந்து குறித்த குரானின் விந்தைகள்
14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்
7. குரான் கூறுவது அறிவியலாகுமா?
6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….
மின்னூலாக(PDF) தரவிறக்க
http://thamilislam.tk
No comments:
Post a Comment