லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியமுக்கும்(28) அவரது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனுக்கும்(29) நேற்று, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சில், கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 1,900 வி.ஐ.பி., விருந்தினர்கள் நேரடியாக கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் வழியாக, 200 கோடி பேர் பார்த்து மகிழ்ந்தனர்.
வேல்ஸ் இளவரசர் சார்லஸ், மறைந்த இளவரசி டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம், தனது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனை நேற்று கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்தைக் கண்டு களிக்கவும், மணமக்களை நேரில் பார்த்து வாழ்த்தவும், நேற்று முன்தினம் முதல், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச் வரையிலான வழியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். நேற்று காலை பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, ராணி எலிசபெத்துடன் மணமகன் வில்லியமும், தனது தந்தையுடன் மணமகள் மிடில்டனும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு காரில் வந்தனர். அவர்களுக்கு முன்பாக, இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா, வில்லியமின் சகோதரர் ஹேரி ஆகியோர் வந்து காத்திருந்தனர். மணமக்கள் வந்த பின், பேராயர் ரோவன் வில்லியம்ஸ் இருவருக்கும் மண உறுதிமொழி செய்வித்தார். அந்த உறுதிமொழியில் வரக் கூடிய,"கணவருக்குக் கட்டுப்பட்டு' என்ற வார்த்தையை கதே மிடில்டன் சொல்லவில்லை. அதற்கு பதிலாக,"கணவரிடம் அன்பு செலுத்துவேன்' என்று மட்டுமே சொன்னார். தொடர்ந்து, வில்லியம், மிடில்டனின் மோதிர விரலில், தங்க மோதிரத்தை அணிவித்தார். அடுத்து, பைபிளில் இருந்து சில வாசகங்கள் படிக்கப்பட்டன. "பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால், இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று அறிவிக்கிறேன். ஆமென்' என்று பேராயர் தெரிவித்தார்.
மணமக்களை வாழ்த்தும் விதத்தில் பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, மணமகன் வில்லியம், கேம்பிரிட்ஜ் அரசர் என்றும், மணமகள் கதே மிடில்டன் கேம்பிரிட்ஜ் அரசி என்றும் ராணி எலிசபெத்தால் பட்டம் சூட்டப்பட்டனர். திருமணத் துக்கான ஆவணத்தில், இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர், மணமக்கள் சர்ச்சில் இருந்து வெளியே வந்து, அரச குடும்பத்துக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க சாரட் வண்டியில் பக்கிங்காம் அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதே வண்டியில் தான், 1981ல் சார்லஸ் - டயானா தம்பதிகள் ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழியெங்கும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், உற்சாகமாகக் குரல் எழுப்பியும், கையசைத்தும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சில இடங்களில், மணமக்கள் படம் நடுவில் பொறித்திருந்த தேசியக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. நேற்று இரவு பக்கிங்காம் அரண்மனையில், 650 வி.ஐ.பி.,க்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு, ராணி எலிசபெத் சிறப்பு விருந்தளித்தார். திருமண நிகழ்ச்சியை காலையில் இருந்தே, பி.பி.சி., உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு வெளியே, நூற்றுக்கணக்கான பத்திரிகைகளின் நிருபர்கள் தங்கள் புகைப்படக் கலைஞர்களுடன் செய்தி சேகரித்தபடி இருந்தனர்.
யார் இந்த கதே மிடில்டன்? வில்லியமின் தாயார் மறைந்த டயானா, பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனால், தற்போது பக்கிங்காம் அரண்மனையின் மருமகளாகியுள்ள கதே மிடில்டன், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனின் பெர்க்ஷைர் பகுதியைச் சேர்ந்த மிடில்டன், பிரிட்டன் ஏர்வேசில் அதிகாரியாக பணியாற்றியவர். இவர் தான் கதேவின் தந்தை. சில ஆண்டுகளுக்கு முன், மிடில்டன்,"பார்ட்டி பிசெஸ்' என்ற மெயில் ஆர்டர் நிறுவனத்தை துவக்கினார். இதில் பணம் கொட்டியது. இதனால், மிடில்டன் குடும்பம் கோடீஸ்வர குடும்பம் ஆனது.
தெருக்கள் எங்கும் "பார்ட்டி'கள்
* வில்லியம் - மிடில்டன் திருமணத்தைக் கொண்டாடும் வகையில், லண்டன் நகரில் உள்ள தெருக்கள், வீடுகள், "பப்'புகளில் கோலாகலமாக நேற்று 5,000 "பார்ட்டி'கள் கொண்டாடப்பட்டன.
* நேற்று நடந்த திருமணத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்காக, 8,500 பத்திரிகையாளர்கள் லண்டனில் குவிந்தனர். 180 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
* மிடில்டனின் சொந்த கிராமத்தில் நடந்த ஒரு பார்ட்டியில், இரண்டரை அடி உயர கேக், மக்களால் வெட்டப்பட்டு, திருமணம் கொண்டாடப்பட்டது.
* உலகம் முழுவதும் 200 கோடி பேர் நேரடி ஒளிபரப்பை கண்டுகளித்தனர். பல கோடி பேர் "ட்விட்டர்' "பேஸ்புக்' மூலம் திருமண நிகழ்ச்சியைப் பற்றி விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.
திருமண உடை ரகசியம்
* மணமகள் கதே மிடில்டன்னின் திருமண உடை பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரியத்தைப் பேணும் வகையில், வெளிர் சந்தன நிறத்தில் அவர் "கவுன்' எனப்படும் உடை அணிந்திருந்தார். அவரது உடையின் பின்புறம் மிக நீண்ட பட்டாடை பொருத்தப்பட்டிருந்தது. அதை தாங்கிப் பிடிக்க, இளம் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
* நீல வைரம் பொருத்தப்பட்ட கிரீடத்தை மிடில்டன் தன் தலையில் அணிந்திருந்தார். இந்த கிரீடம், 90 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ராணி மேரியால் அணியப்பட்டது.
* மணமகன் வில்லியம், தனது கவுரவ பதவியான அயர்லாந்து கர்னல் பதவிக்குரிய சிகப்பு உடையை அணிந்திருந்தார்.
* திருமணத்திற்கு அறிகுறியான மோதிரம் மாற்றும் நிகழ்ச்சியில், மிடில்டனில் விரலில் வில்லியம் மோதிரம் அணிவிக்கும் போது, சிறிது தடுமாறினார். பின் சமாளித்தபடி மோதிரம் அணிவித்தார்.
* இந்த மோதிரம் பரம்பரை பரம்பரையாக அரச குடும்பத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மோதிரத்தை, ராணி எலிசபெத் தனது பேரன் வில்லியமிடம் அளித்தார்.
வயதை மறைத்த "கதே'வின் உடை: பிரிட்டன் இளவரசர் வில்லியம்சிற்கும் அவரது நீண்ட நாள் தோழியான கதே மிடில்டனுக்கும் நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அரச குடும்பத்தின் திருமணத்தில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், மணமகளின் திருமண உடை மீது சற்று கூடுதல் கவனம் இருக்கும். திருமணத்திற்கு முன்பே கதேவின் திருமண உடை குறித்து தகவல்கள் வந்தவாறு இருந்தன.
இது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்:
* கதே மிடில்டன் அரச குடும்பத்தின் பாரம்பரியமான வெள்ளை மற்றும் யானை தந்தம் நிறத்தில் கவுன் அணிந்திருந்தார்.
* ஐந்த மாதமாக உடையை தயார் செய்பவர்களுக்கான தேடல் நடந்தது.
* இறுதியாக அலெக்சாண்டர் மெக் குயின் நிறுவனத்தின் "கிரியேட்டிவ் டைரக்டர்' ஷாரா பட்டன் வடிவமைத்தார்.
* கவுனின் நீளம் 8.8 அடி.
* உடையுடன் இணைந்திருந்த வலை (லேஸ்) ராயல்ஸ் "ஸ்கூல் ஆப் நீடில் வொர்க்' என்ற இடத்தில் தயார் செய்யப்பட்டது.
* கதே அணிந்திருந்த "ஷூ' மெக்குயின் நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்பு.
* பெற்றோர் பரிசளித்த வைர கம்மலை கதே அணிந்திருந்தார்.
* இந்த உடையில் கதேவை நேரில் பார்த்தாலும் போட்டோக்களில் பார்த்தாலும் வயதை கணக்கிட இயலாது. இதுவே இந்த உடையை அவர் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம்.
* கதே, கையில் வைத்திருந்த பூங்கொத்தை ஷான் கானோலி என்பவர் வடிவமைத்திருந்தார். லில்லி ஆப் வேலி, ஸ்வீட் வில்லியம் போன்ற நறுமண மலர்களால் இந்த பூங்கொத்து வடிவமைக்கப்பட்டது. லில்லி ஆப் வேலி என்றால் மகிழ்ச்சி பொங்குவது என்று அர்த்தம். அதே போல் ஸ்வீட் வில்லியம் என்றால் பாராட்டுதலுக்குரிய நடத்தை என்று அர்த்தம். இந்த பூங்கொத்தை "மிரில்' என்று அழைப்பார்கள். இதற்கு திருமணம் மற்றும் காதலின் சின்னம் என்று அர்த்தம்.
* 1945ல் விக்டோரியா மகாராணியால் உருவாக்கப்பட்ட பூந்தோட்டத்திலிருந்து "மிரில்' பூக்கள் பறிக்கப்பட்டுள்ளது.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment