Friday, April 29, 2011

ராஜபக்சே போட்ட கள்ள ஓட்டு தில்லுமுல்லு அம்பலம்!

கள்ள வாக்கு தில்லுமுல்லு அம்பலம்! – 'ரைம்ஸ்'

உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ராஜபக்ஷ. 'ரைம்ஸ்' பத்திரிகை வாக்கெடுப்பில் முந்துகிறார்! கடந்த வாரம் இலங்கை ஊடகங்களில் இப்படி ஒரு செய்தியைப் பார்த்தவர்​களுக்குப் பயங்கர அதிர்ச்சி!

அமெரிக்காவின் வார இதழான 'ரைம்ஸ்', உலகின் முன்னணிப் பத்திரிகை. இதன் வாசகர்கள், உள்நாட்டில் இரண்டு கோடி பேர். வெளிநாடுகளில் 2.5 கோடி பேர். ஆகையால், 'ரைம்ஸ்' பிரசுரிக்கும் விஷயங்கள், சர்வதேச கவனத்தைப் பெறும்.

ஆண்டுதோறும் 'மேன் ஆஃப் தி இயர்' (Man of the year) ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, அந்தப் பத்திரிகையின் அட்டையில் இடம் பெறுபவர்கள், கிட்டத்தட்ட நோபல் பரிசு பெற்றதற்கு இணையான புகழைப் பெறுகிறார்கள்!

இந்த நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் 'செல்வாக்கு மிக்க 100 பேர்' பட்டியலையும் அந்தப் பத்திரிகை வெளியிடத் தொடங்​கியது.

பிரபலங்களைத் தேர்ந்தெடுப்பதில், இணைய வாக்கெடுப்பின் மூலம் வாசகர்களும் பங்கேற்கலாம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் பட்டியல் வெளியாகும்.

இந்தப் பட்டியலில், 'ராஜபக்ஷ இடம் பெற்று இருக்​கிறார்' என்று வெளியிட்டன இலங்கை ஊடகங்கள்!

ஈழப் பிரச்சினையைப் பொறுத்த அளவில், 'ரைம்ஸ்' எப்போதுமே இரு தரப்புத் தவறுகளையும் விமர்சித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இலங்கை அரசின் தவறுகளைத் தொடர்ந்து விமர்சிக்கும் பத்திரிகையாகவே அது இருந்து இருக்கிறது.

இத்தகைய சூழலில், இது எப்படி சாத்தியம்?' என்று குழம்பினார்கள் வாசகர்கள்.

ஆனால், 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில், ஏப்ரல் 17-ம் தேதி ஒரு செய்தி வெளிவந்தது. அதில், 'ரைம்ஸ்' பட்டியலில் ராஜபக்ஷ இடம்பெற்று இருப்பதை உறுதி செய்ததுடன், இரண்டு லட்சத்து 3,117 வாக்குகளுடன் 4-ம் இடத்தில் அவர் இருப்பதாகவும் தெரிவித்தது.

பயங்கரவாதத்துக்கு எதிராக ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளுக்கும், ஜனநாயகம் செழிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கும் கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம் இது என்று அது குறிப்பிட்டது.

அதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா 40-வது இடத்திலும், காங்கிரஸ் தலைவர் சோனியா 100-வது இடத்திலும் பின்தங்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டி புளகாங்கிதம் அடைந்து இருந்தது.

ரைம்ஸ் இதழின் இணையத்தளமும் இந்தச் செய்தியை உறுதி செய்தது.

ஆனால், ஏப்ரல் 21-ம் தேதி இந்த வாக்கெடுப்பு முடிந்து, மறுநாள் 'செல்வாக்கு மிக்க 100 பேர் அறிவிக்கப்பட்ட நிலையில், பட்டியலில் இருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டது ராஜபக்ஷ பெயர்!

என்ன நடந்தது பின்னணியில்?

பட்டியலில் ராஜபக்ஷ இடம் பெற்று இருக்கும் தகவல் வெளியானதுமே, 'உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு போர்க் குற்றவாளியை முன்னிலைப்படுத்துவதா?' என்று 'ரைம்ஸ்' பத்திரிகைக்குக் கண்டனங்கள் குவிந்தன. தவிர, உலகம் வெறுக்கும் ஒரு நபர் இவ்வளவு வாக்குகளைப் பெற வாய்ப்பு இல்லை என்றும் ஏராளமானோர் சந்தேகம் எழுப்பினார்கள்.

இதே சந்தேகம் 'ரைம்ஸ்' ஆசிரியர் குழுவில் உள்ளவர்​களுக்கும் எழ, தன்னுடைய தொழில்நுட்பக் குழுவிடம் ராஜபக்ஷ விவகாரத்தை ஒப்படைத்தது தேர்வுக் குழு. அந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில்தான், இலங்கை இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைக் கையில் வைத்துக்கொண்டு ராஜபக்ஷ செய்த தில்லுமுல்லு அம்பலமாகி இருக்கிறது!

இலங்கை இராணுவம் அரங்கேற்றிய போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. குழு தயாரித்துள்ள அறிக்கை வெளிவரும் போது ரைம்ஸ் தகவல் வந்தால் நல்லது என்று நினைத்திருக்கிறார் ராஜபக்ஷ.

இதைத் தொடர்ந்து, களத்தில் இறங்கிய ராஜபக்ஷவின் கைத்​தடிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவருக்கு ஆதரவாகக் கள்ள வாக்குப் போட்டனர். இலங்​கையில் இராணுவத்தின் தொழில்நுட்பத் துறையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் இந்தப் பின்னணியில் இருந்திருக்கின்றன.

ராஜபக்ஷவுக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் அவ்வளவும் கொத்துக் கொத்தாக விழுந்து இருப்பதைக் கண்டுபிடித்த 'ரைம்ஸ்' தொழில்நுட்பக் குழு, இது திட்டமிட்ட சதி என்று ஆதாரபூர்வமாக தேர்வுக் குழுவிடம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாகவே, ராஜபக்ஷேவின் பெயர் நீக்கப்பட்டது.

இந்தப் பின்கதையை எல்லாம் எதிர்பார்க்காமல், பட்டியல் வெளியாவதற்கு முன்னதாகவே ஆர்வக்​கோளாறில் செய்தியை இலங்கை அரசு தரப்பே சொல்லிவிட்டதால், வெளியே தலைகாட்ட முடியாத அவமானத்தில் சிக்கி இருக்கிறார் ராஜபக்ஷ.

போர் வெற்றிக்குப் பின் அவரது அசுர ஆட்டத்தில் ஆட்டம் கண்டு, அடங்கிப்போய் இருந்த எதிர்க்கட்சிகளும், இதையே சாக்காக வைத்து, சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார் ராஜபக்ஷ என்று பிரசாரத்தில் இறங்கிவிட்டன. இதனால், கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறார் ராஜபக்ஷ!


source:tamilspy


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails