Monday, April 11, 2011

மெகா தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல்


ன்பார்ந்த வாசகப் பெருமக்களே... 

தமிழகச் சட்டசபைத் தேர்தல் களத்தில், 234 தொகுதிகளிலும் வெற்றியின் முகட்டைத் தொடப்போவது யார் என்றும் தோல்வியைத் தழுவத் தயாராக இருப்பவர் யார் என்ற நிலவரங்களைக் காட்டும்  மெகா ரிசல்ட் ஸ்பெஷல் உங்கள் கைகளில் தவழ்கிறது!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுவையின் 30 தொகுதிகளில் வெற்றி பெறப்​போகும் வெற்றி வேட்பாளரை அறிய, ஜூ.வி-யின் பிரமாண்டமான நிருபர் குழு, தேர்தல் களத்தின் மூலை முடுக்கு எல்லாம் புகுந்து புறப்பட்டது.

மூன்று முக்கியமான நெருக்கடிகளை நமது குழு எதிர்கொண்டது!

அதில் முதலாவது... இதுவரை இருந்த 234 தொகுதிகள் மறு சீரமைப்புக்குப் பிறகு பல விதங்களில் மாறி உள்ளது. 234 என்ற எண்ணிக்கை மாறவில்லையே தவிர... நகரங்களும் கிராமங்களும் வெவ்வேறு தொகுதிகளாக மாறி உள்ளன. எனவே கடந்த கால வெற்றி, தோல்விகளை மையமாக வைத்து... எந்த முடிவுக்கும் வர முடியாது!

அரசியல் தட்ப வெட்பம், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி சீரான நிலையில் இல்லை. ஆளும் கட்சிக்கான எதிர்ப்போ... எதிர்க் கட்சிக்கான ஆதரவோ... தொகுதிக்குத் தொகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் மாறியபடியே இருந்தது. அதாவது 1996 சட்டமன்றத் தேர்தலிலோ, 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதோ இருந்த ஒரே சீரான அலை இம்முறை இல்லை... இது இரண்டாவது!

வேட்பாளரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பணம் மிக மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. பணம் கொடுத்தால்தான் ஜெயிக்கலாம் என்று பெரும்பாலான வேட்பாளர்கள் நினைப்பதும், பணம் கொடுத்தால் கொடுத்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்று பெரும்பாலான வாக்காளர்கள் நினைப்பதுமான மனோபாவம் அனைத்துத் தொகுதியிலும் வெளிப்படையான விஷயமாக இருக்கிறது. மக்கள் மனசை பணம் படைத்தவர் மாற்றலாம் என்ற விதி... மூன்றாவது சிக்கல்!

கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் (ஏப்ரல் 6, 7) இந்தத் தேர்தல் நிலவரங்களை அறிய நமது நிருபர் படை முயன்றது. மகுடம் யாருக்கு என்பது மே 13-ம் தேதிதான் தெளிவாகத் தெரியும். ஆனாலும் மகுடத்தை எட்டிப்பிடிப்பதற்கான ஓட்டத்தில் யார் முன்னே போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஜூ.வி-யின் இந்தத் தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல் உங்களுக்கு கலங்கரை விளக்கமாகக் காட்டும்.

நமக்குக் கிடைத்துள்ள எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தனித்து ஆட்சியை அமைக்கத் தேவையான மந்திர எண் 118 கிடைக்காது என்பதே இன்றைய நிலவரம். சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக அ.தி.மு.க. வரும் என்றே தெரிகிறது. அவர்கள் கூட்டணி ஆட்சியை அமைப்​பதற்கான சூழ்​நிலையே உருவாகும்​போல!

தேர்தலுக்கு இன்னமும் 6 நாட்கள் இருக்கும் சூழலில் 3 காரணங்கள் நாம் இதுவரை எடுத்த முன்னணி நிலவரத்தில், மாற்றங்கள் ஏற்படுத்தும் சக்தி படைத்தவை!

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளையும் மீறி, (அல்லது அவர்கள் தங்களைத் தாங்களே இறுக்கம் தளர்த்திக்கொண்டால்!) நினைத்த தொகுதி​களில் எண்ணிவைத்த பணத்தை விநியோகிக்க முடிந்தாலோ...

'மன சாட்சிப்படி வாக்களியுங்கள்' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தது. தமிழகத்தில் பரவலாக 48 தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி ம.தி.மு.க-வுக்கு இருப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது. இந்தக் கட்சியினருக்கு கருணாநிதி என்றால் எட்டிக் காய்தான். ஆனால், சமீபத்திய கடுப்பு ஜெயலலிதா மீதே அதிகமாக இருக்கிறது. மன வேதனை ஜெயலலிதா மீதான கோபமாக மாறினாலோ....

கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களது கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்தப்​போகும் லாஸ்ட் புல்லட் தாக்குதலைப் பொறுத்தோ...

இந்த முன்னணி நிலவரத்தில்  மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்​கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

இது நமக்கான தேர்தல். யாரோ 234 பேரை எம்.எல்.ஏ.க்களாக ஆக்க... எந்தக் கட்சியையோ ஆட்சியில் அமர்த்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா அல்ல இது.

இதில் நாம் பார்வையாளர்கள் அல்ல. நாம் ஒவ்வொருவரும் பங்கேற்பாளர். நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம். படைப்புக் கடவுளுக்கு இருக்கும் வலிமை நமக்கும் உண்டு. அதை நிரூபிக்கும் நாள் ஏப்ரல் 13...

வாக்களிக்க மறவாதீர்கள்

source:vikatan

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails