புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்தான வழக்கில், இன்று இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் சேர்க்கப்படவில்லை. மகள் கனிமொழி உள்பட 5 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மத்திய அரசுடனான தி.மு.க.,வின் உறவு நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளன. உச்சகட்ட எதிர்ப்பாக தி.மு.க., மத்திய அரசில் இருந்து தன் அமைச்சர்களை வாபஸ் பெறும் நிலையும் ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., 17 மாதங்களுக்கு பின், தனது முதல் குற்றப் பத்திரிகையை, கடந்த 2ம் தேதி தாக்கல் செய்தது. மொத்தம் 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரின் அப்போதைய தனிச் செயலர் சந்தோலியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, சுவான் டெலிகாம் புரமோட்டர் ஷாகித் பல்வா, சுவான் டெலிகாம் இயக்குனர் விவேக் கோயங்கா, யுனிடெக் ஒயர்லெஸ் இயக்குனர் சஞ்சய் சந்திரா, அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களின் அதிகாரிகள் கவுதம் டோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகிய ஒன்பது பேர் மீது, சதி செய்தது மற்றும் மோசடிக்கு உதவியாக இருந்தது உட்பட, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அரசு அதிகாரிகள், சுவான் புரமோட்டர் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சி.பி.ஐ., இரண்டாவது குற்றப் பத்திரிகையை இன்று தாக்கல் செய்தது.
அரசுக்கு சேர வேண்டிய வருவாயை மறைத்து, தனிப்பட்ட நபர்கள் தங்களின் சுய லாபத்துக்காக கோடிக்கணக்கில் சுரண்டியுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் எப்படி ஒதுக்கீடு பெற்றனர், எவ்வித மோசடிகளை செய்திருந்தனர் என்ற தகவல்கள் முதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று இருந்தன.இதைத் தொடர்ந்து, ஒதுக்கீடு செய்து கொடுப்பதற்காக யார் யாரெல்லாம் எந்த வகையில் செயல்பட்டனர்; இதில் கிடைத்த கோடிக்கணக்கான பணம் எப்படியெல்லாம் கைமாறியது; அதை எங்கே முதலீடு செய்துள்ளனர் என்ற விவரம் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெற உள்ளது.
ஏனெனில், இப்பணியில் அமலாக்கத்துறை உதவியையும் சி.பி.ஐ., நாடி தகவல் கேட்டது. இதனால், பலரும் கதிகலங்கி உள்ளனர். இந்த வரிசையில், "2ஜி' ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற சுவான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திற்கும், கலைஞர் "டிவி'க்கும் இடையே நடந்த 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம், குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
சினியுக் நிறுவனத்திடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகை திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்று, கலைஞர் "டிவி' தரப்பில் இருந்து விசாரணையின் போது தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. கடன் கொடுத்தனரா, திருப்பிச் செலுத்திவிட்டனரா என்பது பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம். ஒதுக்கீட்டில் கிடைத்த முறைகேடான பணம் எப்படி கலைஞர் "டிவி'க்கு போய் சேர்ந்தது என்பதற்கும், கடன் போல ஆவணங்களெல்லாம் எப்படி திரித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதற்கும் தங்களிடம் ஆதாரம் உள்ளதாக சி.பி.ஐ., கூறுகிறது.
இது தொடர்பாக, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களும், குற்றப் பத்திரிகையில் இடம் பெற உள்ளது என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. கலைஞர் "டிவி'யில் இவர்கள் இருவரும் 80 சதவீத பங்கு வைத்திருக்கின்றனர். சரத்குமாருக்கு 20 சதவீத பங்குள்ளது. இவர்கள் பெயர்கள் இடம் பெற்றதால் அடுத்ததாக கைது படலம் தொடரும் என்பதால், தி.மு.க., தரப்பில் பரபரப்பு நிலவுகிறது. இருப்பினும் ஏற்கனவே முதல் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்ற சிலர் கோர்ட் வரை சென்று, கைதை தவிர்த்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பரான மறைந்த சாதிக் பாட்சாவின் முக்கிய பங்கு குறித்து, இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெறலாம்.
இந்நிலையில், மத்திய அரசுடனான தி.மு.க.,வின் நிலை குறித்து முடிவு செய்யப்படும் சூழ்நிலையை தி.மு.க., சந்திக்க நேரிடும் என தெரிகிறது. அந்த நிலையில், மத்தியில் உள்ள தன் ஆறு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி தி.மு.க., மேலிடம் முடிவு செய்யலாம். அந்த நிர்பந்தத்தை தரக்கூடிய சூழ்நிலையை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் ஏற்படுத்தலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment