சென்னை, ஏப்.27-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அரசின் பொறுப்புடைமை குறித்த ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டு விட்டது. "அப்பாவி மக்களுக்கு சேதமின்மை" என்ற கொள்கையின் அடிப்படையில் மனிதாபிமான மீட்புப் பணி நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் இலங்கை அரசின் இனிப்பான வாதத்தினை 214 பக்கங்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தவிடுபொடி ஆக்கியுள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி டாருஸ்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழு 16.9.2010 அன்று தனது பணியை தொடங்கியது. இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான செப்டம்பர் 2008 முதல் மே 2009 வரையிலான காலத்தையும், அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமை யையும் இந்தக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டது.
குண்டு மழை பொழிவிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீதே இலங்கை அரசின் ராணுவ படைகள் குண்டு மழை பொழிந்ததை நம்பிக்கையூட்டும் ஆதாரங்களுடன் மூன்று நபர் வல்லுநர் குழு கண்டறிந்துள்ளது.
மிகப் பெரிய ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தாலும், அப்பாவி தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் திட்டமிட்டு குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்று வல்லுநர் குழு முடிவு செய்துள்ளது. மிகப் பெரிய பீரங்கிகளையும், குண்டுகளையும் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் வட இலங்கையில் உள்ள வன்னி பகுதியைச் சுற்றி மிகப் பெரிய தடையை இலங்கை அரசும் அதன் படைகளும் உருவாக்கின.
மயக்க மருந்து அல்லது வலியை இழக்கச் செய்யும் மாத்திரைகள் எதுவும் இல்லாமல், மருத்துவ காரணங்களுக்காக தேக உறுப்புகளை வெட்டி எடுக்கும் மருத்துவ மனைகள் மீதும்; மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் மரங்களுக்கு கீழ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பகுதிகளிலும் குறி வைத்து இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது. உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்துள்ளனர்.
உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போர்ப் பகுதிக்கு சென்றடையக் கூடாது என்பதற்காகவே, போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்து மதிப்பீடு செய்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்துதல், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல், தன்னுடைய கட்டுப் பாட்டிலிருந்து தப்ப நினைக்கும் அப்பாவி தமிழர்களை கொல்லுதல் மற்றும் கூலி வேலை செய்யுமாறு கட்டயாயப்படுத்துதல் உட்பட பல மனித உரிமை மீறல்களை விடுதலைப் புலிகள் நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், போர் நடந்த கடைசி மாதங்களில், விடுதலைப் புலிகள் மிகவும் குன்றிய நிலையில் இருந்ததாகவும், எனவே, விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, தன்னுடைய சொந்தக் குடிமக்களான தமிழ் மக்கள் மீது விபரீத அளவு தாக்குதல் நடத்தியதை இலங்கை அரசு நியாயப்படுத்த முடியாது என்றும், இது இனப் படுகொலைதான் என்றும், நாகரிகம் மற்றும் பண்பாடுள்ள மக்கள் இதை இனப்படுகொலை என்று கருத்தில் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளி வராமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியிடப்பட்டால், இது தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமரச முயற்சிகளுக்கு தடையாக அமைந்துவிடும் என்ற வாதத்தை இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே முன்வைத்தார். ஐ.நா. அறிக்கையை வெளியிடாமல் தடுப்பதற்காக மஹிந்தா ராஜபக்ஷேவின் சகோதரர் கோத்தபைய ராஜபக்ஷே அமெரிக்காவிற்கு பறந்து சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நா. அறிக்கை வெளியிடப்படாமல் இருக்க தன்னால் இயன்ற உதவியை செய்யுமாறு மஹிந்தா ராஜபக்ஷே பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியதை இலங்கை அரசு உறுதி செய்ததாக ஊடகங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தனை நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் ஐ.நா. குழுவின் அறிக்கை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையில் இனிமேலும் இந்தியா மவுன பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மொழி, மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, கடலுக்கு அப்பால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் தங்களது சொந்த நாட்டிலேயே ஆற்றொணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது.
இந்த நிலைமையை சரி செய்ய, ஏராளமானவற்றை இந்தியாவால் நிச்சயம் செய்ய முடியும். இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; கண்ணியத்துடன் வாழ அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், சர்வதேச இயக்கம் ஒன்றை தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவைப்படின், எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் அடக்குமுறை என்பது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது, ஒருதலை பட்சமானது என்ற முந்தைய கூற்றினை தகர்த்தெறிந்து, இலங்கையில் மனித உரிமை மீறல்களும், மிருகத்தனமான அடக்குமுறைகளும் நடைபெற்றதை ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது. எனவே, ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக மஹிந்தா ராஜபக்ஷே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இதைச் செய்யாமல், தற்போது போல் தொடர்ந்து இந்தியா மவுனம் சாதிக்குமேயானால், கண்ணியத்துடன் வாழ்வதற்குரிய உரிமை உட்பட இலங்கை தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாழும் தமிழர்களை தன்னுடைய நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் ராஜபக்ஷேவின் கொள்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது என்று தற்போது கூறப்படும் கூற்றிற்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிடும். இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
source:maalaimalar
http://thamilislam.tk
No comments:
Post a Comment