Sunday, May 1, 2011

அமெரிக்காவின் முக்கிய எதிரி ஒசாமா ஒழிந்தான்;

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.


சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .


இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.


ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.


இந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.


ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி? : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.


அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லாடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails