'நேர்மையின் சம்பளம் மரணமா?' என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த குரூர சம்பவம்!
நாசிக் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக இருந்தவர் யஷ்வந்த் சோனாவானே. நேர்மையான அதிகாரியான யஷ்வந்த், கடந்த செவ்வாய்க்கிழமை நந்துகோன் என்ற இடத்துக்கு தாசில்தாருடன்அலுவலக காரில் சென்றார். வழியில் கெரசின் நிரப்பப்பட்ட சில டாங்கர்கள், ஆயில் டிப்போ அருகில் நின்று இருந்தன. ஏற்கெனவே, இந்த இடம் கெரசின் திருட்டுக்குப் பிரபலமானது. ஹெச்.பி.சி.எல்., பி.பி.சி.எல்., ஐ.ஓ.சி. போன்ற நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகள் அருகே, 'எதற்கு இத்தனை டாங்கர்கள்?' என்ற சந்தேகம் யஷ்வந்த்துக்குத் தோன்றவே... காரில் இருந்து இறங்கி விசாரித்தார்.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான் இந்தியாவை உலுக்கின. நடந்தது என்ன என்பது பற்றி கூடுதல் டி.ஜி.பி-யான ரகுவன்ஷி, ''சிலர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் டாங்கர்களில் இருந்து கெரசினை திருட்டுத்தனமாக நிரப்பிக்கொண்டு இருந்தனர். அங்கு போன யஷ்வந்த், ஒருவனிடம் கேள்வி கேட்கவே, அவன் உடனே ஓடிவிட்டான். மற்றவர்களிடம் விசாரித்து, அதனைத் தன் செல்போன் கேமராவில் படம் எடுத்திருக்கிறார். மேலும், உடனடியாக இந்தஇடத்தில் 'ரெய்டு' நடத்தவும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
அப்போது அந்தக் கும்பலுக்கும் கூடுதல் கலெக்டருக்கும் இடையே விவாதம் காரசாரமாக... ஒருவன் போபட் ஷிண்டேவுக்குத் தகவல் சொல்லி இருக்கிறான். இவன் கெரசின் கடத்தல் வழக்குகளில் ஏற்கெனவே பல முறை கைது செய்யப்பட்டவன். உடனே வந்த அவனுக்கும் கூடுதல் கலெக்டருக்கும் தீவிரமான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் நிலைமை சிக்கலாவதை அறிந்த ஷிண்டே திடீரென யஷ்வந்த மீது கெரசினை ஊற்றித் தீவைத்துவிட்டான்.ஷிண்டே நெருப்பு பற்றவைத்ததும் அவன் ஓடிவிடாமல் இருக்க வேண்டும் என்பதால் அவனையும் கட்டிப்பிடித்து இருக்கிறார் யஷ்வந்த். இதனால் தீக்காயங்களுடன் அவன் மருத்துவமனையில் இருக்கிறான். ஷிண்டே, மகன் குனால், மச்சான் சீதாராம் பலேரோ மற்றும் அவன் கூட்டாளி ராஜு ஷிர்சாத் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள் போலீஸார்!'' என விவரித்தார்.
நாசிக் மாவட்ட கலெக்டர் வேலரசு, ''யஷ்வந்த் மிகஅமைதியானவர். கடின உழைப்பாளி. அவருக்கு இப்படி ஒரு சம்பவம் நேர்ந்தது கொடுமையானது. உடல் முழுக்க அவர் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் அவரது டிரைவரும், உதவியாளரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவிட்டனர். உள்ளூர் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை...'' என்றார் சோகத்துடன். நேர்மையாக இருந்த அதிகாரிக்கே இந்த நிலை என்றால்..?
- ந.வினோத் குமா
source:vikatan
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment