Monday, January 24, 2011

கலைஞர் கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்து விலகல்

தலைவர் பதவியில் தொடரப் போகிறேன் : கருணாநிதி அறிவிப்பு


சென்னை:""முதல்வர் பதவியில் தொடர்வதை விட, தி.மு.க., தலைவர் பதவியில் தொடரவே விரும்புகிறேன்,'' என, அமைச்சர் பெரியகருப்பன் இல்லத் திருமண விழாவில், கருணாநிதி பேசினார்.


அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மகன் கோகுலகிருஷ்ணன் - பாரு பிரியதர்ஷினி திருமணம், சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:மத்திய அமைச்சர் சிதம்பரம், தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்றார். அதனால், என்னை பெண் வீட்டுக்காரனாக ஆக்கி, இந்த இல்லறக் கூட்டணியின் சார்பாக இருவரும் இணைந்து மணமக்களை வாழ்த்துவோம். பெரியகருப்பனின் பணிகள் என்னை மாத்திரமல்ல, ஆன்மிகவாதிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன். பெயராலும், மீசையாலும் பெரியகருப்பன் அச்சுறுத்தல் தரக் கூடியவர்; ஆனால், உள்ளத்தால் நம் அன்பையெல்லாம் கவர்ந்தவர்.அவர் கொண்டிருக்கும் தெய்வ நம்பிக்கையைக் கூட, என் மீது கொண்டிருக்கும் மரியாதையால், அதை கொஞ்சம் மறைத்து திறம்பட பணி புரிகிறார்.


சட்டசபையில், ஒருநாள், எதிர்க்கட்சியினர் பல கேள்விகளை அடுக்கிய போது, பின்னால் அமர்ந்திருந்த பெரியகருப்பனை திரும்பி பார்த்து, "இந்த ஆண்டு எத்தனை கோவில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம்' என்ற விவரம் கேட்டேன்.அவர், என்னிடம் ஒரு பட்டியலை கொடுத்தார். அதில், ஒவ்வொரு மாதம், வாரம் தவறாமல் குடமுழுக்கு நடைபெறுவதும், அந்த கோவில்களுக்கு தேவையான எல்லாவகையான பூஜைகளும் நடைபெறுவது குறித்து இருந்தது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆன்மிகத்திற்கு, நாம் எதிரானவர்கள் அல்ல.


பனகல் அரசரால் நிறுவப்பட்டதுதான் இந்து அறநிலையத்துறை. கோவில்களில் ஆகும் செலவுகளுக்கு, பணியாளர்களின் ஊதியத்திற்கு கணக்கு இருக்கிறதா என ஆராய்ந்து, அதிலே, சிறு ஓட்டை உடைசல் வராமல், ஊழல் வராமல் பார்த்துக் கொண்டதுதான் அந்த சட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி. அவ்வெற்றியின் ஒரு கட்டத்தைத்தான், சிதம்பரத்தில் நாம் அனுபவித்தோம்.தீட்சிதர்கள் கையில் இருந்த கோவில் ஆதிக்கம் மாற்றப்பட்டு, இன்று அரசுடமையாகி உள்ளது. அந்த துறையில் நல்லவர்களை அமைச்சர்களாக்க வேண்டும். அதே நேரத்தில், அவர்கள், மனிதாபிமானத்தோடு பணியாற்ற வேண்டும் என்று தான், பெரியகருப்பனை அமைச்சராக ஆக்கினேன்.


தமிழகம் மேலும், மேலும் வளம் பெற வேண்டும். இந்த ஆட்சி தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை, பெரியகருப்பனுக்கு உள்ளது.அவரை அமைச்சர் என சொல்வதை விட, மாவட்டச் செயலர் என கூறிய போது, நீங்கள் அதிக ஆர்வம் காட்டினீர்கள். எனக்குக் கூட அப்படி ஒரு ஆசை இருக்கிறது. முதல்வர் என்பதை விட, தி.மு.க., தலைவர் என்பதில் தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.


திருமணத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அழகிரி, தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட, பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர். பெரியகருப்பன் நன்றி கூறினார்


source:dinamalr


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails