எனக்கு ஒரு பக்கம் வெட்கமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் 'இப்படியும் கூட நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது, மனைவி, குடும்பம், வாழ்க்கை என்று மட்டும் இல்லாமல் நட்பை மறக்காத பண்பு மிகவும் சிறந்தது' என்று எனக்கு உணர்த்தியதை எண்ணி அவரை பெருமையுடன் நினைத்தேன். அதன்பின் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இப்படி பள்ளியிலும், கல்லூரியிலும் பழகிய நண்பர்களை அதன்பின் பார்க்கவே முடியாமல் தொடர்பறுந்து விடுகிறவர்கள் எத்தனையோ பேர்.
ஆனால் இன்றைய தலைமுறையினரை கேட்டுப்பாருங்கள். நம்மைத்தான் கேலி செய்வர். 'இதுக்குத்தான் பேஸ்புக், ஆர்க்குட் போகணும்ங்கறது...' என்று கிண்டலடிப்பார்கள்.
நல்லது அதிகம்; கெட்டது கொஞ்சம்!
சோஷியல் நெட்வொர்க்கிங் என்று சொல்லப்படும் ஆர்க்குட், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. நல்ல எண்ணத்தில் பரிமாறப்படும் தகவல்கள், படங்களை திரித்து தவறாக பயன்படுத்துவோர் வெகு சிலர்தான். அவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த சக மாணவ, மாணவியை தொடர்பு கொள்ள வேண்டுமானால், இதில் போய் பள்ளி பெயரை, நாம் படித்த ஆண்டை பதிவு செய்தால் போதும்; உங்கள் அன்றைய நண்பர்களில் சிலர் கண்டிப்பாக சிக்குவர். அவர்களை 'நெட்' வழியில் தொடர்பு கொண்டு, மற்ற நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இப்படி நண்பர்களை, உறவினர்களை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் உறவை, நட்பைத் தொடரச் செய்ய முடிகிறது என்றால், இன்னொரு பக்கம் நம் கருத்துகளையும் பதிவு செய்ய முடியும். பொது விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்க்க இந்த பக்கங்கள் பயன்படுகின்றன. நம் ஆதங்கத்தைக் கொட்டவும் முடிகிறது; அதே கருத்தைக் கொண்டவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. ஆனால், இப்படி பொது விஷயங்களை பரிமாறிக்கொள்ளும்போது கட்டுப்பாடு தேவை. தனிப்பட்ட விமர்சனங்கள் சட்ட சிக்கல்களில் கொண்டுபோய் விடும். 'ப்ளாக்' எனப்படும் வலைப்பூக்களிலும் இப்படித்தான்!
கருத்து கந்தசாமி சிக்கினாரு!
அவர் எம்டெக், எம்பிஏ படித்தவர். முன்னணி சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுபவர். சம்பளம் மாதத்துக்கு 70 கே. அதாவது, 70 ஆயிரம் ரூபாய். ஆனால், கார் வாங்க விருப்பமில்லை; பஸ்சில்தான் போவார். கண்டக்டர் 50 பைசா சில்லறை தராவிட்டால் சும்மா விட மாட்டார். 'சே, இந்தியா எப்படி முன்னேறும்...' என்று சலித்துக்கொள்வதுடன், உடனே தன் பிளாக்பெர்ரி மொபைலை எடுத்து, நெட்வொர்க்கில் கருத்தை பதிவு செய்தும் விடுவார்.
இவர் வீட்டு நாய் பக்கத்து வீட்டுக்குப் போய் அசுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. எவ்வளவோ சொல்லியும் இவர் கேட்பதாக இல்லை. அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டு எரிச்சல் அடைய வைத்தார். சண்டை பெரிதானது. அந்த வீட்டிலும் ஒரு சாஃப்ட்வேர் பெண் இருக்கிறார். அவரும் வந்து ஆங்கிலத்தில் தாட்பூட் என்று மல்லுக்கு நிற்க, மனிதர் டென்ஷன் ஆகி விட்டார். கத்தி விட்டு ஆபீசுக்கு போக பஸ்சில் ஏறி உட்கார்ந்தவர், வழக்கம்போல் இந்த சம்பவத்தையும் எழுதி, அந்த சாஃப்ட்வேர் பெண்ணை மட்டரகமாக விமர்சித்திருந்தார். இதை எப்படியோ அறிந்த அந்தப் பெண் போலீசில் புகார் செய்ய, இந்த மனிதர் 'ஙே...' என்று விழித்து மன்னிப்பு கேட்டதால் சும்மா விட்டது போலீஸ்.
முதல் 'ப்ளாக்' கிரிமினல்!
சைபர் க்ரைமில் எத்தனையோ விதங்கள் உண்டு. கண்டபடி திட்டித்தீர்ப்பது முதல் அடுத்தவர் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடுவது வரை சொல்லலாம். முதன்முதலாக 'ப்ளாக்' விஷமத்தில் இறங்கி இன்னொரு பெண்ணுக்கு அவமானத்தைத் தேடித் தந்தவன் சிக்கியது 2001ல்தான். மனிஷ் கதூரியா என்பவன், ரித்து என்ற பெண்ணின் பெயரை தவறாக பயன்படுத்தி, ரித்து படங்களை, போன், இமெயில் முகவரியைப் பதிவு செய்து, ரித்து படங்களை திரித்து, ஆபாசமாக வெளியிட்டான். பழிவாங்குவதற்காக இப்படிச் செய்தவன், சில நாட்களில் பிடிபட்டான். ப்ளாக் கிரிமினல் நடவடிக்கையில் முதல் முதலாக பிடிபட்டவன் இவன்தான்.
கொட்டித் தீர்; பழி தீர்க்காதே!
நட்பு வட்டத்திற்கு மட்டும் தெரியும் வகையில், ப்ளாக்குகளில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இளைய தலைமுறையினர் பலர் உள்ளனர். இந்தக் கருத்து பரிமாற்றம் நட்பு வட்டத்துடன் முடிந்து விடும். தேவையில்லாமல் சர்ச்சை கிளம்பாது. இதில் கோபம், வருத்தம், மகிழ்ச்சி எல்லாம் இருக்கும். ஆனால், பழி தீர்க்கும் நெடி இருக்காது. பழி தீர்க்க 'ப்ளாக்'குகளை பயன்படுத்தாமல், கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல பயன்படுத்தலாம். அரசியலில் லாலு முதல் நடிப்பில் அமிதாப் வரை பல பிரபலங்களும் 'ப்ளாக்' வைத்துள்ளனர். அவ்வப்போது தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இப்படி நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். உறவை, நட்பை பேணுவோம்.
No comments:
Post a Comment