Monday, January 24, 2011

கம்ப்யூட்டர் கேள்வி - பதில்

 


கேள்வி: நான் எப்போது இன்டர்நெட் இணைப்பில் சென்றாலும், என்னுடைய கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்படத் தொடங்குகிறது. டாஸ்க் மேனேஜர் மூலம் செக் செய்தால், அது செயல்பாட்டினை 100% எனக் காட்டுகிறது. இதற்குக் காரணம் என்ன?
–சி. உத்தம் குமார், உடுமலைப் பேட்டை
பதில்:
 இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களுக்கு எதிரான புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டு, அவை அப்டேட் செய்யப்பட்டுள்ளதனை உறுதி செய்திடுங்கள். மைக்ரோசாப்ட் நிறுவனமும், மலிசியஸ் சாப்ட்வேர் ரிமூவர் ஒன்றினை ஒவ்வொரு மாதமும் உங்கள் கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் அப்டேட் மூலமாக அனுப்புகிறது. இதுவும் பதியப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். இவை எல்லாம் ஒழுங்காக இருந்தால், இவற்றை இயக்கி, முழுமையாக உங்கள் கம்ப்யூட்டரைச் சோதனை செய்திடவும். இவை வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் மற்ற புரோகிராம்களை நீக்கிவிடும். 
அடுத்து விண்டோஸ் ஹெல்ப் சிஸ்டத்தில் helpsvc.exeஎன்ற பைல் ஒன்று உள்ளது. இந்த உதவிடும் பைல் சில வேளைகளில் உபத்திரவம் கொடுக்கும் பைலாக மாறும். இதுதான் பிரச்னையைத் தருகிறதா என்று அறிய, டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் கிளிக் செய்து,  Task ManagerI த் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Processes என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அங்குள்ள தலைப்புகளில்'CPU'  என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் அப்போது இயங்கும் புரோகிராம்கள், எடுத்துக் கொள்ளும் ப்ராசசர் நேரம் காட்டப்படும். நேரத்தின் அடிப்படையில் இது பட்டியலிடப்படும். இந்த பட்டியலில் முதலாவதாகhelpsvc.exe இருந்தால், உங்களுக்குப் பிரச்னைக்குக் காரணம் இதுதான் என அறியலாம். இதன் இயக்கத்தினை நிறுத்த, இதனைத் தேர்ந்தெடுத்து, அதன் மீது லெப்ட் கிளிக் செய்து மூடிவிடவும். இனி பிரச்னை வராது. 
இது குறித்து மேலும் விபரங்கள் அறிய http://support.microsoft.c om/kb/839017/enus  என்ற முகவரியில் உள்ள இணையதளத்தை அணுகவும்.


கேள்வி: மல்ட்டி மீடியாவிற்கென பல இணைய தளங்களில் டூல்கள் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். நீங்களும் அவ்வப்போது இமேஜஸ், மூவீஸ் என சிலவற்றிற்கான தளங்கள் குறித்து எழுதி உள்ளீர்கள். மற்ற மல்ட்டி மீடியா பிரிவிற்கான தள முகவரிகளை மட்டுமாவது தர முடியுமா?
– எஸ். நிரஞ்சன், விழுப்புரம்
பதில்:
 அருமையான ஸ்லைட் ÷ஷாக்களைத் தயாரிக்க http://animato.com.  வேகமாகச் செயலாற்றி போட்டோக்களைச் செம்மைப்படுத்த http://citrify.com எந்தப் பாடலையும் ரிங் டோன் அளவிற்கு கட் செய்து ட்ரிம் பண்ணித் தரும் http://cutmp3.com, வேறுபட்ட இசை மற்றும் சமூக நிகழ்வுகளை இணைத்துத் தரும் http://grooveshark.com,  ஆடியோ புக்ஸ் அதிக அளவில் டவுண்லோட் செய்திடத் தரும் http://librophile.com  மற்றும் சென்ற வாரம் தந்த வீடியோ எடிட்டிங் டூல்ஸ் கொண்ட http://pixorial.comஇன்னும் தேடினால் இவற்றைக் காட்டிலும் சிறந்த தளங்கள் கிடைக்கலாம். தேடுங்கள், தேடுங்கள், தேடலில் தான் நிறைய விஷயங்கள் தெளிவாகும்.


கேள்வி: நோட்பேட் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள். ஆனால் வேர்ட் பேட் குறித்து எழுதுவதில்லை. இரண்டும் ஒன்றுதானா? இல்லை எனில், வேர்ட் பேட் குறித்து அதிக தகவல்களைத் தரவும்.
–கா. மனோகரன், மதுரை
பதில்:
 இரண்டும் வெவ்வேறு எடிட்டிங் சாப்ட்வேர் புரோகிராம்கள். கம்ப்யூட்டர் மலரில் எழுதப்படும் குறிப்புகள் எல்லாம், வாசர்கள் அனுப்பும் கடிதங்களில் அதிகம் கேட்கும் விஷயங்களின் அடிப்படையில் தரப்படுகின்றன. நோட்பேட் குறித்து பல கடிதங்கள் கிடைக்கின்றன. வேர்ட் பேட் குறித்து அவ்வளவாக யாரும் எழுதுவதில்லை. இனி இதோ பதில்.
நோட்பேட் என்பது அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் இணைக்கப்பட்டு தரப்படும் ஒரு எளிய டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம் ஆகும். இதில் TXT என முடியும் டெக்ஸ்ட் பைல்களை எடிட் செய்திடலாம். இதன் ஐகான் மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் சில வரிகள் எழுதப்பட்டவையாகக் காட்சி அளிக்கும். நோட்பேடில் அனைத்து வகையான பாண்ட்களையும் கையாள முடியாது. அதே போல பார்மட்டிங் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. மிக எளிதான சில நோட்ஸ் வரிகளை எழுதி வைக்க முடியும்.
நோட்பேடிலிருந்து சற்று மேம்படுத்தப்பட்ட வேர்ட் ப்ராசசராக வேர்ட் பேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேர்ட் ப்ராசசர் அளவிற்கு, டெக்ஸ்ட் இதிலும் அமைக்க முடியாது. இந்த இரண்டும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்கினால் மட்டுமே கிடைக்கும். 
ஓப்பன் ஆபீஸ் டாட் ஓ.ஆர்.ஜி. (Open Office.org) என்ற இலவச வேர்ட் ப்ராசசிங் புரோகிராம் இலவசமாக நமக்குக் கிடைக்கும் ஒரு நல்ல அப்ளிகேஷன் புரோகிராம் ஆகும். வேர்ட் புரோகிராமில் மேலே சொன்னவை கிடைக்காத போது, அனைத்து வசதிகளையும் பெற, இதனைப் பயன்படுத்தலாம்.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது வாட்டர் மார்க் உருவாக்க முடிகிறது. ஆனால் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் இதனை எப்படி அமைப்பது என்று தெரியவில்லை. நண்பர்கள் அதற்கு வழியே இல்லை என்கின்றனர். ஏதேனும் வழி உள்ளதா?
–சி.முத்துராஜ், செஞ்சி
பதில்: உங்கள் நண்பர்கள் சொல்வது சரியே. எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க் ஒன்றினை ஏற்படுத்தி, அதனை அச்சில் கொண்டு வருவதற்கான வசதி இல்லை. ஆனால் சுற்று வழி ஒன்றில் கொண்டு வரலாம். சிலர் Format | Sheet | Background என்று சென்று வாட்டர்மார்க் கொண்டு வருகின்றனர். ஆனால் இது உங்கள் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் பின்புறம் கிராபிக் ஒன்றை ஏற்படுத்தும். இது பிரிண்ட் பிரிவியூவில் தெரியாது. அச்சிலும் வராது. இதற்கு ஒரே வழி வேர்ட் தொகுப்பில் உள்ள வேர்ட் ஆர்ட் வழியாக வாட்டர்மார்க் ஒன்றை உருவாக்கலாம். இதன் கலரை Semi Transparent என அமைத்து, லைட் கிரே பில் கொடுத்து அந்த கிராபிக்ஸை, தேவைப்படும் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் எடுத்து ஒட்டலாம். ஆனால் இது சிறிது நேரம் எடுக்கும் செயல். 
சில பிரிண்டர்கள் இது போல வாட்டர்மார்க்கினை ஏற்படுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளன. எச்.பி. 5550 லேசர் ஜெட் பிரிண்டரில் இந்த வசதி உள்ளது. பிரிண்ட் டயலாக் பாக்ஸில், ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து அதில் கிடைக்கும் டேப்களில் ஒன்றில் இந்த வசதி தரப்பட்டிருப்பதைக் காணலாம். இன்னொரு வழி, உங்களுக்குப் பழக்கமான இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் வாட்டர்மார்க் ஒன்றைத் தயார் செய்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் ஹெடரில் ஒட்டி அமைக்கலாம்.
நேரடியாக வேண்டும் என்றால், இதற்கென கிடைக்கும் சில சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். http://www.fineprint.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் என்ற சாப்ட்வேர் கிடைக்கிறது. இந்த சாப்ட்வேர் எக்ஸெல் ஒர்க்ஷீட்டிற்கான வாட்டர் மார்க் உருவாக்கப் பயன்படுகிறது.


கேள்வி: விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் எனக்கு பிரச்னை ஏற்பட்டது. அதனுடைய எர்ரர் குறியீடாக 0x80070020  கிடைத்தது. இதற்கு என்ன பொருள் என விளங்கவில்லை. மைக்ரோசாப்ட் தளத்திலும் இதற்கான விளக்கம் கிடைக்கவில்லை. 
–சி. பாலசிங்கம், கோவை
பதில்:
 உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான அப்டேட் பைல்களைத் தேடுகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால், அதற்கான குறிப்பிட்ட பைல் ஒன்றை, அதனால் பெற முடியவில்லை என்று இந்த குறியீடு குறிக்கிறது. இது பரவலாக ஏற்படும் பிரச்னை தான். இதற்குக் காரணம் பைல் மைக்ரோசாப்ட் தளத்தில் இல்லை என்பதல்ல. உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், இந்த அப்டேட் பைலைத் தடுக்கிறது. இதற்கான தீர்வு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், அப்டேட் செய்திடுகையில், ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தச் சொல்கிறது. இதனால், நம் கம்ப்யூட்டர், வைரஸ்களினால் தாக்கப்படும் நிகழ்வு ஏற்படலாம். ஆனால், விண்டோஸ் அப்டேட்டுக்குத் தேவையான பைல்கள் இன்றி இருப்பதுவும் ஆபத்துதானே. இருப்பினும் முழுமையான முன்னெச்சரிக்கை வேண்டும் என்றால், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் இயக்கத்தை முடக்கி, இணையத்திலிருந்து பைல்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், அனைத்திற்குமாக ஒரு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. கூடவே ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனால் விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் வைரஸ் நுழைந்து, இயக்கம் முடங்கிப் போனால், ரெஸ்டோர் பாய்ண்ட் மற்றும் பேக் அப் பைலைப் பயன்படுத்தி இயக்கத்தினை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம்.
இது குறித்து மேலதிகத் தகவல்கள் வேண்டுவோர் http://support.microsoft. com/kb/883825  என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகவும்.


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails