Sunday, January 2, 2011

முதல் மனிதன் தோன்றியது எங்கே?வரலாற்றை திருத்தும் புதிய முடிவு

இஸ்ரேல்:"உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான்' என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதுநாள் வரையில், கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது.


சமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிவங்களை கண்டெடுத்துள்ளனர்.இதுகுறித்து டெல் அவிவ் பல்கலை விஞ்ஞானிகள் கூறியதாவது:நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்களின், உடல் படிவங்கள் "குசேம்' குகையில் கிடைத்துள்ளன. மனித பல் போன்றுள்ள இந்த படிமம் மத்திய "பிளைஸ்தோகின்' காலத்தை சேர்ந்தது.


இதை ஆய்வு செய்ததில், உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளான்.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஆப்ரிக்காவில் தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்ரிக்கா எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகளின் புதிய முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்படும் என தெரிகிறது.


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails