தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டதாக கருதப்படுபவை உள்ளிட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய ஆதார வீடியோ காட்சிகளை இங்கிலாந்தின் 'சேனல் 4′ தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஐ.நா., மன்னிப்பு சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளால் நெருக்குதல் அதிகரித்துள்ளது.
பதறவைக்கும் வீடியோ…
இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் என நம்பப்படும் புதிய ஆதார வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ள சேனல் 4, கடந்த ஆண்டு தமது சேனலில் ஒளிபரப்பட்ட வீடியோவின் விரிவான பகுதியே என்று குறிப்பிட்டுள்ளது.
அந்த வீடியோவில், இலங்கை ராணுவத்தினர் போன்றவர்களால் பலர் சுட்டுக் கொல்லப்படும் கோரக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அந்தக் கோரத்தின் உச்சமாக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தமிழ்ப் பெண்களில் உடல்கள் நிர்வாண நிலையில் காண்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது எடிட் செய்யப்பட்டே இந்தக் காட்சிகளை வெளியிடுவதாவும், அப்படி கத்தரி போடாத வீடியோ பகுதியில் வயது வந்தவர்கள் கூட காண முடியாத வகையிலான படுகோரமான காட்சிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (அது தொடர்பான வீடியோ செய்தி கீழே… (நன்றி: சேனல் 4)
கற்பனைக்கு அப்பாற்பட்ட சித்ரவதைகளுக்கு இளைஞர்கள் ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதும் அந்தப் புதிய ஆதாரக் காட்சிகளின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, பத்திரிகையாளரான அருட்பிரகாசம் சோபனா எனும் இயற்பெயர் கொண்ட இசைப்பிரியா உள்ளிட்டோர் சித்ரவதைச் செய்து கொல்லப்பட்ட காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்த வீடியோ காட்சிகளை இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகம் முற்றிலும் நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல் வெளியான வீடியோவை தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தி, அவற்றை போலியானவை என்று இலங்கை அரசு கூறியதையும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரத்தில், கடந்த ஆண்டு வெளியான வீடியோ உண்மையானதாகவே தெரிந்தது என ஐ.நா. சோதனைகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஷேவுக்கு நெருக்குதல்…
போர்க் குற்றங்களின் ஆதாரமாக சில வீடியோ காட்சிகளை சேனல் 4 வெளியிட்டதை அடுத்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஐ.நா., மன்னிப்பு சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நெருக்குதல் தந்துள்ளன.
சேனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் இலங்கை அதிகாரிகள் மீதும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும் வேண்டுகோள் விடுத்துள்ளது
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment