Monday, December 13, 2010

பேய் ஆட்சி செய்தால்...


பேய் ஆட்சி செய்தால்...


'மக்கள், சுதந்திரத்தை வென்றடைய வேண்டும் என்று விரும்பும்போது, ஆகாய விமானத்தைக் கல் எறிந்து வீழ்த்துவார்கள். ராணுவ டேங்குகளை வெறும் கையால் திருப்பு வார்கள்!' - பாடிஸ்டா நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, தனது வாக்கு மூலத்தில் சொன்னது இது!

கடந்த வாரம், லண்டன் வீதிகளில் இது நிஜமாகவே நடந்தது. இலங்கை தேசத்தின் 'மாட்சிமை தாங்காத' அதிபர் மகிந்தா ராஜ பக்ஷேவுக்கு இங்கிலாந்து அரசு ஆறு அடுக்குப் பாதுகாப்பு கொடுத்தாலும், அவர் தங்கி இருந்த விடுதியைச் சூழ்ந்த தமிழர்களின் முழக்கத்தில், முழி பிதுங்கிப்போய்... ஆறு நாட்கள் பயணத்தை இரண்டே நாட்களில் முடித்துக்கொண்டு கொழும்பு போய்க் குதித்தார்.

முல்லைத் தீவில், கிளிநொச்சியில், வன்னியில் திரண்ட தமிழர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால், லண்டனில் நின்றவர்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை. நெஞ்சுரம் இருந்தது. அதில், 'நம் கண் முன்னால் இத்தனை பேரைச் சாகக் கொடுத்துவிட்டோமே' என்ற குற்ற உணர்வும் கூடுதலாக இருந்தது. கண்ணி வெடிகள்  சாதிக்க முடியாததை, அவர்கள் டிசம்பர் 2-ம் தேதி நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள்.

இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் நடந்தனவா என்பதை விசாரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு யஸ்மின் சூகா, மார்சுகி டரூஸ்மன், ஸ்ரிவன் ரட்னர் ஆகியோர் வரும் ஜனவரி மாதம் அறிக்கை அளிக்க இருக்கிறார்கள். சிங்களர்களின் காவல் தெய்வமாகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு இருக்கும் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு மிகப் பெரிய நெருக்கடி காத்திருக்கிறது.  இதை உடைப்பதற்குத்தான் பகீரத முயற்சி  செய்து வருகிறார் ராஜபக்ஷே.

உலகம் உருவான காலம் முதல் அனுபவிக் காத மிகப் பெரிய சோகத்தைச் சந்தித்த வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு மக்களை 300 கிலோ மீட்டர் தாண்டிப் போய் இன்னும் பார்க்காத ராஜபக்ஷே... பல்லாயிரம் கி.மீ தூரத்துக்கு வாரம்தோறும் பல நாடுகளுக்குப் பயணம் போய்க்கொண்டு இருப்பதன் சூட்சுமமும் அந்த விசாரணையை நீர்த்து போகச் செய்யும் முயற்சிகளுக்காகத்தான். லண்டனுக்குப் போவதைத் தனது வாழ்நாள் வெற்றியாக நினைத்து இருந்தார் ராஜபக்ஷே. மூன்று லட்சம் ஈழத் தமிழர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பது மட்டும் இதற்குக் காரணம் அல்ல; போர்க் குற்றவாளியாக அவரைக் குற்றம் சாட்டும் முக்கிய நாடுகளில் பிரிட்டன் முதலாவது நாடு. அங்கே போய்த் திரும்பிவிட்டால் போதும் என்று நினைத்தார் ராஜபக்ஷே.

ஆனால், அன்றைய தினம் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ காட்சிகள் ராஜபக்ஷே மீதான கோபத் தீயில் நெய் வார்த்தன. கண்கள் கட்டப்பட்டு... இரண்டு கைகளும் பின்னால் பிணைக்கப் பட்டு... உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லா மல் நிர்வாணமாக... ஒவ்வொரு ஈழத் தமிழர்களும் சுட்டுக் கொல்லப்படும் அந்தக் காட்சிகளைப் பார்க்கவே பதறித் துடிக்கிறது. எப்படித்தான் அரங்கேற்றினார்களோ அரக்கர்கள்?

அருட்பிரகாசம் சோபனா என்கிற இசைப்பிரியா. ஈழத் தமிழர் அனைவரும் அறிந்த பெயர். அவரது நளினமான குரலும் குறும்படங்களில் யதார்த்தமான நடிப்பும் அம் மக்களை வசீகரித்து இருந்தது. இரக்கமற்ற சாத்தான்கள் சுற்றி நிற்க... வெறி நாய்களிடம் சிக்கிய முயலாக அந்த சகோதரி துடிதுடிக்கப் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட பிறகு கொல்லப்பட்டார் என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது சேனல்-4. தமிழ் இனத்தில் பிறந்தவள் என்பதைத் தவிர, இசைப்பிரியா மீது என்ன குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட முடியும்?

வெள்ளைக் கொடி ஏந்தி வரச் சொல்லிவிட்டு, நடேசன், புலித்தேவனைக் கொன்றதற்கும் சாட்சி இருக்கிறது. தமிழர் வாழ்ந்த பகுதியில் எல்லாம் மனிதப் புதைகுழிகள் வெட்டப்பட்டதற்கான சேட்டி லைட் படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இராக் யுத்தக் கொடுமைகளை அம்பலப்படுத்திய 'விக்கிலீக்ஸ்' இணையதளம் இப்போதுதான் இலங்கை தொடர்பான ஆவணங்களை வெளியில் விட ஆரம்பித்துள்ளது.

இந்தக் கொலை பாதகச் சூழ்நிலை 2009 மே மாதத் துக்குப் பிறகு, மாறிப் போய்விடவில்லை. இணைய தளத்தில் ஒரு தமிழ் இளைஞர் நான்கு வரி எழுதி இருக்கிறார். 'நான் குவைத்தில் இருக்கிறேன். சமீபத்தில் ஸ்ரீலங்கா சென்று வந்த என் தமிழ் நண்பன் என்னிடம்,  'என் ஊரில் 13, 14 வயதுச் சிறுமிகள் எல்லோருமே இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள்' என்று அந் நாட்டின் நிலைமையைச்  சொன்னதும், என் நெஞ்சம் பதறியது. எனக்குத் தமிழக, இந்திய அரசுகள் மீது வெறுப்புதான் வந்தது!' என்று எழுதி இருக்கிறார்.

குளோபல் தமிழ் அமைப்பைச் சேர்ந்த இமானுவேல் அடிகளார் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  ராஜபக்ஷே மீது வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலம், இங்கிலாந்துதான் தமிழர் தாயகம் என்று சொன்னால் தப்பா?


ப.திருமாவேலன்

source:vikatan

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails