Sunday, December 5, 2010

உயிர் பயத்தில் நடுங்கிய மகிந்த! லண்டனில் ஓயாத அலைகள்

 

கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!' என அறிவிக்க…உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார்.

இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

காட்சி:1
இரு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்படும் போராளிகள் ஓர் இடத்தில் தலைகுப்புறத் தள்ளப்படுகிறார்கள். சிங்கள ஷூக்கள் அவர்களின் முதுகுகளை வெறித்தனமாக மிதிக்கின்றன. அடுத்த கணமே போராளிகளின் தலைகளைக் குறிவைத்து சிங்களர்கள் கண்மூடித்தனமாகச் சுடுகிறார்கள். தலை சிதறி, குலுங்கக்கூட சக்தியற்று போராளிகள் செத்து விழ… நம் ஈரக்குலையே இற்றுப்போகிறது.

காட்சி:2
சுட்டுக் கொல்லப்பட்ட பல போராளிகளின் உடல்கள் அலங்கோலமாகக் கிடக்கின்றன. விடுதலைப் புலிகளின் 'நிதர்சனம்' தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அருட்பிரகாசம் சோபனா என்கிற இசைப்பிரியாவின் உடலும் அங்கே கிடக்கிறது. ஆடைகள் கிழிக்கப்பட்டு, அலங்கோலமாகக் கிடக்கும் இசைப்பிரியாவின் உடலைக் கைகாட்டும் சிங்கள அதிகாரிகள் கெக்கலி கொட்டிச் சிரிக்கிறார்கள். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவர்களின் வக்கிர உரையாடலைக் கேட்டால்… கொல்வதற்கு முன் அந்தப் பெண் போராளிகளை சிங்கள வெறி எப்படி எல்லாம் சிதைத்து இருக்கிறது என்பது அப்பட்டமாக நம் நெஞ்சை அறுக்கிறது.

காட்சி:3
இரு போராளிகளைக் கொன்று அவர்களின் உடல்களைத் தலை மட்டுமே வெளியே தெரியும்படி மண்ணுக்குள் நட்டுவைத்து இருக்கிறார்கள். அந்தப் போராளிகள் யார் எனத் தெரியக் கூடாது என்பதற்காக அவர்களின் முகம் தீயால் கருக்கப்பட்டு இருக்கிறது. நாடு கேட்டுப் போராடியவர்கள் பிணமாக நட்டுவைக்கப்பட்டு இருக்கும் காட்சி, இனவெறிக் கொடூரத்தின் உச்சபட்ச சாட்சியாய் உலுக்குகிறது.

இங்கிலாந்தில் உள்ள 'சேனல் 4' சிங்கள அரசின் இனவெறிக் கொடூரங்களாக சமீபத்தில் ஒளிபரப்பிய இந்தக் காட்சிகள் உலகையே உலுக்கி இருக்கின்றன. இலங்கை அதிபர் ராஜபக்ஷே லண்டனுக்கு வர ஆயத்த மான வேளையில், இந்தக் கொடூரக் காட்சிகளை அம்பலப்படுத்திய 'சேனல் 4' தொலைக்காட்சி, "ஈழத்தில் நடந்த கொடூரமான படுகொலைகள், கதற வைக்கும் கற்பழிப்புகள், உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாத அளவுக்குப் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி ரசித்திருக்கும் சிங்கள வெறித்தனங்கள் என நூற்றுக்கணக்கான காட்சிகளின் பதிவுகள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பார்ப்பதற்கான சக்தி இந்த உலகத்துக்குத்தான் இல்லை!" என்று அறிவித்தது. அதோடு, இனவெறியின் உச்சபட்சக் கொடூரமாக சிங்கள அதிகாரிகள் நடத்திய நெஞ்சு நடுங்க வைக்கும் அட்டூழியத்தை ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவாக உருவாக்கி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவுக்கும் அனுப்பி இருக்கிறது 'சேனல் 4'.

ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்தே 'சேனல் 4' தங்களுக்குக் கிடைத்த வீடியோ பதிவு களையும், புகைப்பட ஆதாரங்களையும் தொடர்ந்து உலகின் பார்வைக்கு வெளிச்சமாக்கி வருகிறது. "அந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை!" என ஆரம்பத்தில் மறுத்த சிங்கள அரசு, இப்போது ஒளிபரப்பாகும் அப்பட்டமான காட்சிகளைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறது.

போர் நடந்தபோதும், ஆயிரமாயிரம் துயரங்களோடு போர் முடிவுக்கு வந்தபோதும் உலக நாடுகளும் ஐ.நா. சபையும் பாராமுகத்தை மட்டுமே பதிலாக்கின. ஆனால், 'சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் இப்போது இந்த உலகத்தைப் பதறவைக்கிறது. இசைப்பிரியா சீரழித்துக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த ஐ.நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியான கிறிஸ்டோபர் ஹேன்ஸ், "இந்தக் கொடூரக் காட்சிகள் குறித்து உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!" என வலியுறுத்தி இருக்கிறார். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் சிங்கள இனவெறி மீறலை விசாரிக்கச் சொல்லி ஐ.நா-வை வற்புறுத்தி வருகின்றன.

இதற்கு மத்தியில் கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற் காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். போர்க் கொடூரக் காட்சிகளைப் பார்த்து உறைந்து போன பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் ராஜ பக்ஷே தங்கி இருந்த 'டோசெஸ்டர்' ஹோட்டலை முற்றுகையிடவும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் ராஜபக்ஷேவின் உரையைப் புறக்கணிக்கவும் தயார் ஆனார்கள்.

இதற்கிடையில், பிரிட்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை, "பிரிட்டனிலேயே ராஜபக்ஷே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ராணுவ அத்துமீறலை நடத்திய அனைவரையும் பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் விசாரிக்க வேண்டும்!" என அறிவிக்க… பதறிப்போனார் ராஜபக்ஷே. இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!' என அறிவிக்க… உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்பினார் ராஜபக்ஷே. லண்டனில் இலங்கைத் தூதராக இருக்கும் அம்சா, (ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் துணைத் தூதராக சென்னையில் பணியாற்றிய அதே அம்சா.) தமிழகத்தில் செய்ததைப்போலவே லண்டனிலும் சில பத்திரிகையாளர்களைத் தன்வசமாக்கி ராஜபக்ஷேவின் விளக்கத்தை அறிவிக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், 'சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகளுக்கு எவ்வித விளக்கத்தையும் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ராஜபக்ஷே, அனைத்து மீடியாக் களையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். 'ராஜபக்ஷே கைது செய்யப்படும் வரை போராட்டங்களைக் கைவிட மாட்டோம்!' என பிரிட்டன் தமிழ்ப் பேரவையினரும் களமிறங்க… ராஜபக்ஷே பத்திரமாகக் கிளம்பிச் செல்ல தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரைக் கையில் பிடிக்காத குறையாக ராஜபக்ஷே இலங்கை சென்று சேர்ந்தார்.

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன… ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!

ஜூனியர் விகடன்



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails