Friday, December 10, 2010

ஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…!

உயர்தர மற்றும் உயர் நடுத்தர குடும்பப் பெண்களை நோக்கியதாகவே இருக்கிறது. டி.வி.யில் தற்போது வரும் நாப்கின் விளம்பரங்களும், அதன் விலையும் நடுத்தர மற்றும் ஏழைப் பெண்களின் 'அந்த' நாட்களின் ஆரோக்கியத்துக்கு எந்த முயற்சிகளும் இங்கு இல்லை. அதைத்தான் முன்னெடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த முருகானந்தம்.


சுமார் ஒரு ரூபாய் செலவில் ஒரு பீஸ் நாப்கின் செய்வதற்கான இயந்திரங்களைக் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார். அதிலும் இந்த மெஷினை வியாபார நோக்கில் விற்பனை செய்யாமல் பெண்களின் சுய முன்னேற்றம் சார்ந்து மட்டுமே விற்பனை செய்து அதிசயிக்கவும் வைக்கிறார். இந்த இயந்திரத்தைக் கண்டுபிடிக்க இவரின் தளராத பரிசோதனை முயற்சிகள், அவரின் அக்கறையைச் சொல்கிறது.

முருகானந்தம் சொல்கிறார்.
''கைத்தறி பிஸினஸ்ல ஓஹோன்னு இருந்த எங்கப்பா, திடீர்னு ஒரு நாள் இறந்துட்டார். வறுமை இழுத்த இழுப்புல கான்வென்ட்ல இருந்து கவர்ன்மென்ட் ஸ்கூல்ல வந்து விழுந்தேன். சூழ்நிலையால இட்லி சுட்டு குடும்பத்தைக் கரை சேர்த்த எங்க அம்மா மாதிரியான பல குடும்பப் பெண்களோட போராட்டமும் என் மூளையில இறங்கிச்சு. பத்தாங் கிளாசுக்கு மேலே ஸ்கூல் படிப்பை தொடரவிடாமல் விரட்டிய வறுமை… வொர்க்ஷாப், ஃபேக்டரின்னு சில இடங்கள்ல கொண்டு போய் நிறுத்துச்சு. அங்கே தான் எனக்கு இயந்திரங்களோட பரிச்சயம்.

கல்யாணமாகி குடும்பஸ்தனானேன். ஒரு நாள் டி.வி.யில நாப்கின் விளம்பரம் கடந்தப்போ, ''இதெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகாது… மாசா மாசம் ஆகற செலவுல, ஒரு நாள் சாப்பாட்டுச் செலவையே முடிச்சிரலாம். நம்மள மாதிரி வசதியில்லாத பொண்ணுங்களுக்கு கந்த துணி தான் விதி'ன்னு என் மனைவி சொன்னதைக் கேட்டப்போ, 'சுருக்'குன்னு பட்டுச்சு.

பெண்கள் மாதவிலக்கான நாட்களில் சுகாதாரமில்லாத துணிகள பயன்படுத்தறதால, பல பிரச்சனைகளுக்கு ஆளாகறாங்கன்னு மருத்துவ நண்பர்கள் மூலமா உணர்ந்தவன் நான். கோவை மாதிரியான மாநகரத்துல வசிக்கிற ப்ளஸ் டூ வரைக்கும் படிச்ச என் மனைவிக்கே, பொருளாதார பிரச்சனை காரணமா இந்த நிலைன்னா, கிராமத்து பெண்களை நினைச்சுப் பரிதாபமாயிடுச்சு. உடனே யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

மெடிக்கல் ஸ்டோர்ல ஒரு நாப்கினை வாங்கிப் பார்த்து. அது வெறும் காட்டன் அடைக்கப்பட்ட பாக்கெட்டுனு நினைச்சுக்கிட்டேன். நானே காட்டனை வாங்கி, அதைச் சின்னதா பாக்கெட் செஞ்சு என் மனைவியில ஆரம்பிச்சு அக்கம்பக்கத்து தோழிகள், ஹாஸ்டல் பொண்ணுங்கன்னு கொடுத்தேன். எல்லோருமே 'இது வேஸ்ட்'னு சொன்னாங்களே தவிர என்ன பிரச்சனைன்னு சொல்லலை.

அதுக்குப் பிறகு ஒரு நாப்கின்ல ஒரு திரவத்தை விட்டப்போ, திரவத்தை உறிஞ்சுகிற அதே சமயம், அதைத் தேக்கி வெச்சுக்க முடியும்ன்னு புரிஞ்சுது. தளராம, அமெரிக்காவில உள்ள நாப்கின் தயாரிக்கிற கம்பெனியில் இருந்து மூலப்பொருளை வரவழைச்சேன். அதை லேப்ல ஆய்வு செஞ்சப்போ… அது காட்டன் இல்லை… 'பைன் வுட் ஃபைபர்'ங்கிறது புரிஞ்சது. காட்டன் ஈரத்தைத்தான் உறிஞ்சும். இந்த ஃபைபரால உறிஞ்சவும், தேக்கி வைக்கவும் முடியும்.

ஃபைபர் நாப்கின் தயாரிக்கிற அமெரிக்க மிஷினோட விலை… நாலரை கோடி ரூபாய்னு சொன்னாங்க. தலை சுத்தி விழுந்தவன் ரெண்டே நாளில் தெளிஞ்சு, அடுத்த முயற்சியில இறங்கினேன். அந்த மெக்கானிசத்தை புத்தகங்கள், பரிசோதனைகள் மூலமா தெரிஞ்சுக்கிட்டு அந்த வேலையைச் செய்யக்கூடிய மெஷினை சின்ன அளவுல அறுபதாயிரம் ரூபாய் செலவுல 2005-ஆம் ஆண்டு உருவாக்கினேன். தரமான நாப்கின்களை அந்த மெஷினால தயாரிக்க முடிஞ்சது. ஒரு பீஸ் நாப்கின் ஒரு ரூபாய் விலை நிர்ணயம் பண்ண முடிஞ்சது!'' என்கிறார்.

சமுதாய மேம்பாட்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பு என்ற வரிசையில் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் முருகானந்தத்துக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. ஏராளமான விருதுகளையும் வென்ற இந்தக் கண்டுபிடிப்பு, கடந்த ஆண்டு குடியரசுத் தலைவரின் கையால் தேசிய விருதையும் பெற்றிருக்கிறது.

எட்டு மணி நேரத்தில் ஆயிரம் நாப்கின்களை தயாரிக்கும் வேகமுடைய இந்த இயந்திரத்தின் காப்புரிமையை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பல விலை பேசியிருக்கின்றன. ஆனால் முருகானந்தம் இதை முழுக்க முழுக்கப் பெண்களின் முன்னேற்றம் சார்ந்த விஷயத்துக்காக அர்ப்பணித்திருக்கிறார்.

'சொந்தமா தொழில் செஞ்சு வாழ்க்கையில் வெற்றி பெறணும்ங்கிற வைராக்கியத்தோட இருக்கிற பெண்கள் பலர்.அவங்களுக்குத்தான் என் மெஷினை விற்பனை செய்யறேன். நாப்கின் தயாரிக்கிற பயிற்சியையும் நானே வழங்கறேன். இந்தியா முழுக்கப் பதினெட்டு மாநிலங்கள்ல முன்னூறு மெஷின்களை வித்திருக்கேன். பல பொருட்களோட விலையேற்றத்தின் காரணமா, இன்றைய தேதிக்கு இந்த மெஷினின் மதிப்பு எண்பத்தைந்தாயிரம் ரூபாய் ஆகியிருக்கு…' என்றவர்,

'இந்தியாவில அதிகபட்சமா 20 சதவிகிதப் பெண்கள்தான் நாப்கின் பயன்படுத்துறாங்கன்னு சொல்லுது ஒரு புள்ளிவிவரம். இப்போ பீகார், உத்திரப்பிரதேசம்னு நாகரிகத்துல ரொம்பப் பின்தங்கிய மாநிலங்களோட குக்கிராமங்கள்ல கூட என்னோட மெஷின் போய் சேர்ந்திருக்கு. காஷ்மீர் மாநில மலை உச்சியில உள்ள பழங்குடியின பெண்களோட சுகாதாரத்துக்கும் என் மெஷின் கை கொடுக்குது. பக்கத்து கிராமத்துப் பெண்களோட சுகாதார விதியை மாத்தியிருக்கு. இதை விட வேறென்ன பெரிய சந்தோஷம் இருந்துடப் போகுது சொலுங்க?' என்று நிறைந்த மனதோடு கேட்கிறார் முருகானந்தம்

source:vikatan



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails