Wednesday, December 1, 2010

போர்க்குற்றவாளி மகிந்த ஒக்ஸ்போர்டில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்து


 

பிரித்தானியாவுக்கு வருகைதந்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை ஒக்ஸ்போர்டில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு தமது இணையத்தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.

நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், ஈழத்தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தமுடியாது என தெரிந்ததாலும், நேற்றையதினம் சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற காணொளியுமே இச் சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டமைக்கு காரணம் என அறியக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாகவும், இந்த ரத்துக்கு தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும், ஈழத்தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ, லண்டன் ஒக்ஸ்பேர்ட்டில் நடைபெறவிருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டமைக்காக தான் வருந்துவதாகவும், இம்முறை இல்லாவிடினும், மீண்டுமொருமுறை பிரித்தானியாவிலோ, இல்லை வேறெந்த நாட்டிலோ தான் சிறப்புரை நடாத்துவேன் என கூறியதாக தெரியப்படுகின்றது.

இவ்வுரை ரத்துச் செய்யப்பட்டாலும் நாளை ஒக்ஸ்போர்ட் முன்னால் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம், மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யக்கோரிஅவர் தங்கியிருக்கும் விடுதியின் முன்னால் நடைபெறும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ள போதிலும், மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது, அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது


source:puthinamnews

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails