Saturday, March 19, 2011

கம்ப்யூட்டர் கேள்வி பதில்


கேள்வி: சிடி மற்றும் டிவிடிக்களில் டேட்டா எழுதும் இலவச பர்னிங் புரோகிராம் ஒன்று கூறவும். அதில் அனைத்து வசதிகளும் இலவசமாகவே கிடைக்க வேண்டும். நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். 
-எஸ். சிக்கந்தர், திண்டுக்கல்.
பதில்: ஒன்றென்ன மூன்று தருகிறேன். 1. அஷாம்பு சிடி பர்னிங், 2. சி.டி. பர்னர் எக்ஸ்பி புரோ மற்றும் 3. டீப் பர்னர். இவற்றை கீழ்க்காணும் தளங்களில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். அவை தரும் இலவச வசதிகளுக்கு அந்த தளங்களில் அல்லது புரோகிராம் ஹெல்ப் பக்கங்களில் படிக்கவும்.
http://www2. ashampoo.com/webcache/html/1/ product_2_1110__.htm
http://cdburnerxp.se/download.php 
http://www.deepburner. com/?r=download

கேள்வி: என் வீட்டில் இரண்டு பிரிண்டர் களை இணைத்துள்ளோம். ஒன்று லேசர்; இன்னொன்று இங்க் ஜெட். இரண்டும் ஒரே நிறுவனம். அச்செடுக்கையில் அடிக்கடி பிரிண்டரை மாற்றி தேர்ந்தெடுக்கும் படி ஆகிவிடுகிறது. பிரிண்டருக்கு நாம் பெயர் கொடுத்தால், இந்த குழப்பம் நீங்கும். எப்படி பெயரை மாற்றலாம்? என விளக்கவும்.
-கே. சியாமளா, திருப்புவனம்.
பதில்: இந்த குழப்பம் எங்கள் அலுவலகத்திலும் உண்டு. நாங்கள் என இரண்டின் பெயரை இப்போது இங்க்ஜெட் மற்றும் லேசர் என மாற்றி உள்ளோம். உங்கள் சிஸ்டம் விண்டோஸ் 7 என எழுதி உள்ளீர்கள். இந்த சிஸ்டத்தில் இந்த பெயர் மாற்றுவது மிக எளிது. 
1. Start, Devices and Printers எனச் செல்லவும்.
2. நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் பிரிண்டர் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Printer properties என்பதில் கிளிக் செய்திடவும். 
3. அந்த பிரிண்டரின் பெயர் ஹைலைட் செய்யப்பட வேண்டும். இப்போது, அழுத்தினால், ஏற்கனவே உள்ள பெயர் மறையும். அடுத்து நீங்கள் தர விரும்பும் பெயரை டைப் செய்திடவும். 
4. அடுத்து, ஓகே கிளிக் செய்து முடித்து வெளியே வரவும். இனி பிரச்னை இருக்காது.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரார் 9 சோதனை பதிப்பு இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறேன். இதில் அதிக டேப்கள் திறந்திருந்தால், அவற்றை இரண்டு அடுக்குகளாக அமைக்கலாம் என்று ஒரு செய்தி படித்தேன். இதனை எப்படி செட் செய்வது?
-என். சிக்கந்தர், மதுரை.
பதில்: மிக எளிதான ஒரு வேலை. ஏற்கனவே அமைந்துள்ள டேப்களில் ஏதேனும் ஒன்றில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Show Tabs on a separate row" என்பதில் கிளிக் செய்திடுங்கள். அவ்வளவுதான். இப்போது டேப்கள் இன்னொரு வரிசை யிலும் அமைக்கப் பட்டிருப்பதனக் காணலாம். 

கேள்வி: வேர்ட் ப்ராசசர்களிடையே டெக்ஸ்ட் பரிமாறிக் கொள்வது எளிதாகிறது. ஆனால், எக்ஸெல் தொகுப்பில் சற்றுப் பெரிய டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்டினால், மீண்டும் முழுவதுமாக எடிட் செய்திட வேண்டியுள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது? இதனை எப்படி எளிதாக்கலாம்?
-மீ. பழனியப்பன், காரைக்குடி.
பதில்: முதலில் எக்ஸெல் டெக்ஸ்ட்டினை, அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் காப்பி செய்து கொள்ளுங்கள். பின் வேர்ட் பைலைத் திறந்திடுங்கள். எங்கு பேஸ்ட் செய்திட வேண்டுமோ அங்கு கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அதன் பின் வழக்கம்போல் பேஸ்ட் செய்திடாமல் எடிட் மெனு செல்லுங்கள். விரியும் மெனுவில் Paste Special என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் பேஸ்ட் ஸ்பெஷல் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Microsoft Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் டெக்ஸ்ட் அநாவசியச் சிக்கல் இன்றி ஒட்டப்படும். ஒட்டப்பட்ட டெக்ஸ்ட் பாக்ஸில் அதனை ரீசைஸ் செய்வதற்கான ஹேண்டில்களும் காணப்படும். இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை உங்களுக்குத் தேவையான வகையில் மாற்றி அமைத்து ஒட்டி வைக்கலாம்.

கேள்வி: வேர்டில் டேபிள் பெரியதாக இரண்டு பக்கங்களில் இருக்கையில், முழுவதையும் காப்பி செய்வது கடினமாக உள்ளது. எப்படி எளிதாகக் காப்பி செய்வது?
-ஆ. சந்தோஷ் குமார், சென்னை.
பதில்: டேபிளில் ஏதாவது ஒரு செல்லில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்துங்கள். இப்போது ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு பின் நியூமெரிக் கீ பேடில் நடுவே உள்ள கீ 5 ஐ அழுத்துங்கள். (அப்போது நம் லாக் அழுத்தப்பட்டிருக்கக் கூடாது) முழு டேபிளும் செலக்ட் செய்யப்பட்ட நிலையில் இருக்கும். இதனை காப்பி செய்யலாம்; அழிக்கலாம்; நகர்த்தலாம். இன்னொரு எளிய வழியும் உள்ளது. இது மவுஸ் கொண்டு செயல்படுத்தும் வழி. அதே ஆல்ட் கீயை அழுத்திய நிலையில் மவுஸின் கர்சரை டேபிளில் எங்காவது வைத்துக் கொண்டு இருமுறை கிளிக் செய்திடுங்கள். முழு டேபிளும் சடக் கென்று தேர்ந்தெடுக்கப் படும். பின் நீங்கள் நினைத்த காரியத்தை முடிக்கலாம். 

கேள்வி: ரன் டைம் எர்ரர் என்று சில வேளைகளில் செய்தி கிடைத்து, அந்த புரோகிராம் மூடப்படுகிறது. பின் மீண்டும் இயக்கினால், புரோகிராம் நன்றாக இயங்குகிறது. இதன் பிரச்னை என்ன?
-சி. ஏ. உத்தம் குமார், கோயம்புத்தூர்.
பதில்: ரன் டைம் எர்ரர் என்பது, அடிப்படையில் பொதுவாக புரோகிராம் கள் இயங்குகையில் ஏற்படக் கூடிய சிறிய தடுமாற்றமே ஆகும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராமில் சில பிழைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டுவதுதான் இந்த செய்தி. இத்தகைய பிழைகளை புரோகிராம் எழுதியவர்கள் எதிர்பார்த்திருந்திருப்பார்கள். ஆனால் அதனை நிவர்த்தி செய்திட முடியாமல் புரோகிராமினை வெளியிட்டிருப்பார்கள். எப்போதாவது தான் இது ஏற்படும் என்ற நிலையில் அதனைச் சாதாரணமாக எண்ணியிருப்பார்கள். உங்கள் நீண்ட கடிதத்திலிருந்து, நீங்கள் குறிப்பிடும் ரன் டைம் எர்ரர் "மெமரி போதவில்லை' என்பதுதான். இயங்கத் தொடங்கி பின் அதனை அப்படியே விட்டுவிட்டு பின் பல புரோகிராம்களுக்குச் செல்கையில் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். அப்போதைக்குத் தேவைப்படாத புரோகிராம் களை மூடி இதற்குத் தீர்வு காணலாம். 

கேள்வி: என் அலுவலகத்தில் பணி யாற்றுகையில், சிலவற்றை ரகசியமாக என் சிடியிலிருக்கும் பைல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றாமல் செயல்படுத்துகிறேன். ஆனால், அலுவலகக் கம்ப்யூட்டரில் அவை My Recent Documents என்ற பட்டியலில் காட்டப் படுகின்றன. இதனால், ரகசிய பைல்களை மற்றவர்கள் அறியும் வழி உருவாகிறது. இதனை எப்படி நீக்குவது?
-எம். மாணிக்க ராஜ், பொள்ளாச்சி.
பதில்: திரையில் கீழாக உள்ள டாஸ்க் பார் செல்லுங்கள். அங்கு எதுவும் இல்லாத இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். "Taskbar and Start Menu Properties" என்னும் விண்டோ கிடைக்கும். இதில் " Start Menu" என்னும் டேபில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Customize என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் Customize Start Menu என்ற விண்டோ கிடைக்கும். இதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழாக Recent Documents என்ற பிரிவு இருக்கும். அதில் List my most recently opened documents என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதன் அருகே Clear List என்று உள்ள பெட்டியில் கிளிக் செய்திடவும். Recent Documents என்ற பிரிவில் உள்ள பைல்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும்.

கேள்வி: பிரவுசிங் செய்வதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். வழக்கமாக இதன் வலது கீழ் புறத்தில், வெப்சைட்டுகள் இறங்கும் செயலை ஒரு நீளக் கட்டம் பச்சை நிறத்தில் சிறு கட்டங்களாகக் காட்டும். அது இப்போது காணப்படவில்லை. அது என்ன நடக்கிறது என்பதைக் காட்டும் ஆதலால், அது தேவையாய் உள்ளது. எப்படி அதனைப் பெறலாம்?
-சி. இராசேந்திரன், திருப்பூர்.
பதில்: நீங்கள் கேட்பது ஸ்டேட்டஸ் மற்றும் புராக்ரஸ் பார் என அழைக்கப் படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஸ்டேட் டஸ் பார் காட்டப்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் காட்டும் வகையிலும் அமைத்துவிடலாம். இதனைப் பெற இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெனு பாரில் வியூ ("View") என்ற பிரிவில் கிளிக் செய்து பின் கிடைக்கும் சிறிய மெனுவில் "Status Bar" என்பதில் கிளிக் செய்து டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இப்போது கீழாக ஸ்டேட்டஸ் பார் மற்றும் அதில் புராக்ரஸ் பாரினைக் காணலாம்.

கேள்வி: சாலிட் ஸ்டேட் ட்ரைவ் என்பது எந்த வகையில் தற்போது கிடைக்கும் ஹார்ட் ட்ரைவினைக் காட்டிலும் உயர்ந்தது? இதனை வாங்கிப் பயன்படுத்தலாமா? வாரன்டி உண்டா?
-என். மணிமேகலை, செங்கல்பட்டு.
பதில்: இனி எதிர்காலத்தில் சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளே பயன்பாட்டில் இருக்கும். இது பிளாஷ் மெமரி தொழில் நுட்பத்தில் செயல்படுகின்றன. ஹார்ட் டிஸ்க்குகளைப் போல, நிமிடத்திற்கு இத்தனை சுற்றுக்கள் என்று இது செயல்படாது. நகரும் பகுதிகள் இந்த ட்ரைவில் இல்லை என்பதால், ஹார்ட் டிஸ்க் போல விரைவில் கெட்டுப் போகும் வாய்ப்பு இல்லை. பல ஹார்ட் டிஸ்க் தயாரிக்கும் நிறுவனங்கள் இவற்றைத் தயாரித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு, இவற்றை அறிமுகப் படுத்தியுள்ளன. தாராளமாக சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளை வாங்கிப் பயன்படுத்தலாம்

source:dinamalar
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails