தி.மு.க.,வை காங்., காலில் விழவைத்த ஜெ., ராஜதந்திரம்!
அ.தி.மு.க., தலைமையிலான அணியில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள், நாடாளும் மக்கள் கட்சி என, ஒரு பெரும் பட்டியல், ஆரம்ப நிலையிலேயே இடம் பெற்றது. இது வரை தனியாவர்த்தனம் செய்து வந்த தே.மு.தி.க.,வையும் தன் வலையில் வீழ்த்தியது அ.தி.மு.க., ஒருபுறம் தனது அணியை பலமாக்கிவிட்டு, எதிர்ப்பக்கம், தி.மு.க., அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதில் மீன் பிடிக்க ஆரம்பித்தது அ.தி.மு.க., குழப்பத்தில் இருந்த பா.ம.க.,வை, தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க., முயற்சிக்கிறது என்ற தகவலை பரப்பியது. பயந்துபோன தி.மு.க., தடாலடியாக, பா.ம.க.,வுக்கு, 31 தொகுதிகளைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது; அது இப்போது 30 ஆகிவிட்டது. அடுத்ததாய், கொங்கு மண்டலத்தில் கொ.மு.க.,விடம், பேச்சை தொடர்ந்தபடியே அ.தி.மு.க., இழுக்க, அவர்களுக்கும் ஏழு தொகுதிகளை காவு கொடுத்தது தி.மு.க.,
தி.மு.க., - காங்கிரஸ் இடையே 10 நாட்களுக்கும் மேலாக, எண் விளையாட்டு நடந்து வந்த நிலையில், இதை தனக்கு சாதகமாக அ.தி.மு.க., பயன்படுத்தியது. தங்களது கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற வாய்ப்புள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்தது. இதற்காக, தனது பழைய கூட்டாளிகளான, ம.தி.மு.க, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிக்காமல் காலம் தாழ்த்தியது. "அப்படியும் நடந்து விடுமோ' என்ற பயம் ஆளுங்கட்சியில் பரவியது. சாதாரண நாளிலேயே, "தி.மு.க.,வை அழிப்பதே லட்சியம்' என கங்கணம் கட்டி செயல்படும் ஜெயலலிதாவோடு, காங்கிரஸ் கூட்டணி சேருமானால், தங்களின் நிலை என்ன என்ற அச்சம் அக்கட்சியை ஆட்டிவைத்தது. நிபந்தனை மேல் நிபந்தனை விதித்து காங்கிரஸ் கடுப்பேற்றிய நிலையில், தி.மு.க., தனது இயல்பைவிட்டு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தீர்மானம் போட்டுவிட்டு, நள்ளிரவில் சந்தித்து பேசி காங்கிரசுடன் சமாதான உடன்படிக்கை செய்யும் நிலை தற்போது தி.மு.க.,விற்கு ஏற்பட அ.தி.மு.க.,வின் ராஜதந்திரமே காரணமாக அமைந்தது என்கின்றனர் கூட்டணிக் கட்சி தோழர்கள்.
இது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அ.தி.மு.க., அணியில் காங்கிரஸ் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கும் கூட ஆரம்பத்தில் ஏற்பட்டது. தி.மு.க., அணியை குழப்ப நடத்தும் நாடகம் என்பதை, சரியான நேரத்தில் எங்களுக்கு தெரியப்படுத்திவிட்டனர். அதனால் தான், டில்லியில் பிரகாஷ் காரத் பேசும் போது, "அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்வதில் மாற்றமிருக்காது' என, வெளிப்படையாக தெரிவித்தார். இதே போல, ம.தி.மு.க.,வுக்கும் தகவல் போனதால், அவர்களும் பொறுமை காத்தனர். இப்போது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நாடகம் முடிந்துவிட்டது. எங்களது அணி உறுதிப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மொத்தத்தில், தேர்தல் கூட்டணி விஷயத்தில் தனது, "ராஜதந்திர' நடவடிக்கையால், "பொருந்தாக் கூட்டணி' என்ற பெயரோடு, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை ஜெயலலிதா உருவாக்கி, முதல் வெற்றியை பெற்றுள்ளார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment