வவுனியா எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்களே புலம்பெயர் தமிழர்கள் !
தமிழைப் பேசவே தெரியாத சிலர், இலங்கையில் வவுனியா எங்கே இருக்கிறது என்று கேட்டால் அது கூடத் தெரியாத தமிழர்கள் சிலரும் தம்மை புலம்பெயர் தமிழர்கள் என்று கூறி புலிகளின் ஆதரவாளர்கள் தாம் என்றும் அவர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்துவருவதாகவும் மகிந்தர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மக்களைச் சந்திக்கும் ஜனாதிபதி என்னும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மிகவும் காட்டமாக புலம்பெயர் தமிழர்களைச் சாடியுள்ள மகிந்தர், தாய் நாட்டவர் என்ற சொற்பதத்தை மாற்றி அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் என்று தமக்கு தாமே பேர் சூட்டியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தீவைப்பற்றி அறியாது வெளிநாட்டில் பிறந்தவர்கள் கூட தமிழ் தேசியம் பேசுவதாக அவர் சாடியுள்ளார். புலம் பெயர் தமிழர் என்ற ஒரு முத்திரையின் கீழ் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் வேலைசெய்வதாகவும், அது இலங்கை நற்பெயரை வெகுவாகப் பாதிப்படையச் செய்வதாகவும், அவர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளமை தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழர்கள் தவிர வேறு சக்திகளும் தமது நாட்டிற்கு எதிராகவேலைசெய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அது சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்களை அவர் மறைமுகமாகச் சாடியுள்ளார் என்பதனை காட்டுகிறது.
சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்களும் சில தமிழ் அமைப்புகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதாவது மகிந்தரின் உரையில் அவர் தமிழ் இளையோர்களையே மறைமுகமாகச் சாடியுள்ளார் என்பது வெட்டவெளிச்சமாகிறது. சில காலமாக புலம்பெயர் இளையோர் அமைப்புகள் புதுவேகத்தோடு இயங்க ஆரம்பித்துள்ளதும், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்தில் கொண்டே மகிந்தர் தன் ஆதங்கத்தை இவ்வுரைமூலம் வெளிப்படுத்தியுள்ளார் என அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
source:athirvu
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment