Monday, September 13, 2010

அதிகம் சம்பாதித்தாலும் சந்தோஷம் இல்லை: சொல்கிறது ஆய்வு


லண்டன் : அதிகமாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வளமான நாடுகளுக்கு செல்வோர், உண்மையில் அப்படி சந்தோஷமாக இருக்கின்றனரா என்று ஓர் ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு எதிர்மறையாகத் தான் அமைந்தது.


நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.


"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.


இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.


தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்



source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails