Wednesday, September 22, 2010

புதிய வைரஸ் எச்சரிக்கை


கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா  போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.  "Here You Have"  என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் "நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது' என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல.   .scr.   என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு. 
இது  CSRSS.EXE  என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு)  மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது.  ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது.   தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute  என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது. 
இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.  
இதிலிருந்து எப்படி தப்பிப்பது? 
நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும்.  இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். "Here you Have" அல்லது "Just For You"  என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும்.   இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது. 
இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்


source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails