கிறிஸ்தவ வழிபாட்டு உரிமையில் அரசு தலையிட முடியாது : உமாசங்கர்
திருநெல்வேலி : ""சட்டப்படி நான் இந்துதான். என் வழிபாட்டு உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது,'' என ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தெரிவித்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது டான்சி நிறுவன நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ள உமாசங்கர் நேற்று நெல்லை வந்தார். பாளையங்கோட்டையில் மத்திய, மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்காக குரல் கொடுத்த அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., - காங்., கட்சியை சேர்ந்த இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி . நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, இந்த சங்கம் எனக்காக குரல் கொடுக்கவில்லை. சுடுகாட்டு கூரை ஊழலை வெளிக்கொணர்ந்ததற்காக அ.தி.மு.க., அரசு என்னை தி.மு.க.,காரன் போல பார்த்து ஒதுக்கிவைத்தது. அண்மையில், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை சுட்டிக்காட்டினேன். என் மீது நடவடிக்கை பாய்ந்தது. நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனும் அல்ல. தமிழக அரசு கேபிள் "டிவி'யில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விவரங்களை அரசின் எஸ்.சி., - எஸ்.டி., கமிஷனுக்கு புகார் மனுவாக அனுப்பியுள்ளேன்.
நான் இப்போதும் சட்டப்படி இந்துதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருகிறேன். தாழ்த்தப்பட்ட ஒருவர் எந்த கோவிலுக்கு செல்கிறார், எந்த சாமியை கும்பிடுகிறார் என்றெல்லாம் வருவாய்த்துறையினர் தோண்டித் துருவி பார்க்க சட்டத்தில் இடம் இல்லை. தலித்கள், கிறிஸ்தவ பாதிரியாராக கூட மாறலாம். ஆனால், சர்டிபிகேட்படி இந்துவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். லஞ்சஒழிப்பு துறை ஆணையத்தின் கையேட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல்கள் புரிந்தால் அவர்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. இதை நான் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதில் இருந்து ஐந்தாவது நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். நான் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சாராமல் தமிழக மக்களுக்காக பணியாற்றுவேன். அவசியம் ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை சந்திப்பேன். அது என் உரிமை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment